பேரிடர் காலங்களில், சமூக ஊடகங்கள் போல கைகொடுக்கும் தகவல் தொடர்பு சாதனம் வேறில்லை என்பது ஒவ்வொரு முறையும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில், இந்தியாவை கொரோனா இரண்டாம் அலை உலுக்கி வரும் நிலையில், சமூக ஊடகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் மேடைகளாக மாறியிருக்கின்றன.

கடந்த சில மாதங்களாக சற்று அடங்கியிருந்த கொரோனா பரவல், கடந்த சில வாரங்களாக அதிகரித்து, தேசத்தையே மூச்சுத்திணற வைத்திருக்கிறது. இந்த நேரத்தில், ட்விட்டரும் இன்னும் பிற சமூக ஊடங்களும் தான் பரிதவிக்கும் நோயாளிகளுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் பெருமளவில் உதவி கொண்டிருக்கின்றன.

தகவல் தேவை என்றாலும் சரி, உதவி தேவை என்றாலும் சரி, பாதிக்கப்பட்டவர்கள் ட்விட்டரை தான் முதலில் முற்றுகையிடுகின்றனர். குறும்பதிவுகளாக அவர்கள் வேண்டுகோள் வைத்து உதவி கேட்கின்றனர். பெரும்பாலான மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத நிலையோ, எந்த மருத்துவமனைக்கு சென்றால் படுக்கை கிடைக்கும் எனத் தெரியாமல் திக்குமுக்காடும் நிலையோ, ‘ஐசியு படுக்கை தேவை எங்கே கிடைக்கும்?’ எனும் கோரிக்கையை ட்விட்டரில் சமர்பித்து பதற்றத்துடன் காத்திருக்கின்றனர் பலர். அவர்களைப் பொருத்தவரை ட்விட்டர் தான் அவசர உதவி சேவையாக இருக்கிறது.

ட்விட்டரை பொறுத்தவரை உதவி தேவைப்படுபவர்கள் மட்டுமன்றி உதவ முன்வரும்நபர்களும் அதிகம் உள்ளனர். அவர்கள், மருத்துவமனை படுக்கை காலியாக இருக்கும் விவரத்தை பகிர்ந்து கொள்கின்றனர். இப்படியான உதவிகளால், பலருக்கு உயிர் காக்கும் உதவி ட்விட்டரில் கிடைத்திருக்கிறது.

ஆனால், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்த போது, உரிய நேரத்தில் உதவி கிடைக்காமல் உயிரிழந்த சோக கதைகளும் அநேகம் என்பது நெஞ்சை பிசையும் நிஜம்.

image

ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவையை உணர்த்தும் கோரிக்கைகள் அதற்குறிய ஹேஷ்டேகுடன் ட்விட்டரில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. தனிநபர்கள் மட்டும் அல்லாது, மருத்துவமனைகளும் கூட ஆக்சிஜன் தேவை குறித்த கோரிக்கைகளை ட்விட்டரில் பகிர்ந்து கொள்ளத்துவங்கி உள்ளது. இந்த இடத்தில், சமூக ஊடகத்தின் வளர்ச்சியையும், இந்தியாவின் நிலைமை எத்தனை மோசமாக மாறிவிட்டது என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

இணையம் வழியாக அரசு செய்திருக்க வேண்டிய சேவையை, ட்விட்டர் செய்து வருகின்றதென்றே நினைக்கவேண்டியுள்ளது. நாட்டின் அவசரகால உள்கட்டமைப்பின் நிலை எப்படி இருந்திருந்தால், ட்விட்டரில் மக்கள் இந்த அளவுக்கு குவிந்திருப்பார்கள் என்று நாம் யோசிக்க வேண்டியுள்ளது.

தொடக்க நாள்களில், பலர் வழக்கமான ட்விட்டர் அரட்டைகளை தவிர்த்து, தங்கள் டைம்லைனை கொரோனா உதவி கோரிக்கைகளுக்கான ரீட்வீட் மையமாக மாற்றி சேவையை தொடங்கினர். இந்த உதவி கோரிக்கைகள் தனித்து நின்று கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று இவை தொடர்பான ஹேஷ்டேகுகளும் உருவாக்கப்பட்டன. முதலில் பாதிப்புக்குள்ளான நகரங்களான டெல்லி, மும்பை, லக்னோ, புனே, அகமதாபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இத்தகைய செயல்பாடுகள் அதிகமாக இருந்தன. சென்னையும் மெல்ல இந்த பட்டியலில் இணைந்தது.

இவையாவும் இரண்டாம் அலையின் ஆரம்ப கட்டத்தில் நிகழ்ந்தவை. ட்விட்டர் மட்டும் அல்லாமல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடக மேடைகளிலும் இதே போன்ற செயல்பாடுகள் நிகழ்ந்தன.

தொற்றுப்பரவல் அதிகரித்து, நிலைமை நாளுக்கு நாள் மோசமாக கொண்டிருந்த நிலையில், ரீட்விட் செய்வது மட்டும் போதாது என உணர்ந்த சில ட்விட்டர் பயனாளிகள் ஒருங்கிணைப்பு சேவை மற்று நேரடி உதவியில் இறங்கினர்.

கொரோனா உதவி தொடர்பான கோரிக்கைகள் டைம்லைனில் காணாமல் போவதை தவிர்க்க,  நேசக்கரம் நீட்ட வாய்ப்புள்ளவர்கள் அனைத்தையும் கண்டறியும் வகையில், உதவிக்கான கோரிக்கைகளை சேகரித்து ஒரே இடத்தில் அளிக்கும் இணையதளங்களை பலரும் தனித்து உருவாக்கத்துவங்கினர்.

image

எளிமையான இடைமுகம் கொண்ட இந்த தளங்கள், எந்த நகரங்களில் யாருக்கு என்ன உதவி தேவை என்பதை உணர்த்தும் வகையில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக மருத்துவமனை படுக்கை வசதி, ஆக்சிஜன் தேவை, மருத்து தேவை மற்றும் பிளாஸ்மா தானம் உள்ளிட்ட உதவி கோரிக்கைகளுக்கான தனித்தனி பகுதியுடன் இந்த ஒருங்கிணைப்பு தளங்கள் மிகவும் உதவியாக அமைந்துள்ளன.

இந்த தகவல்களை திரட்டித்தருவதற்காக, தன்னார்வலர்கள் நேரத்தை செலவிட்டனர். இதனிடையே உதவிக்கான நேசககரங்ளும் பல முனைகளில் இருந்து நீளத்துவங்கின. அந்த தகவல்களும் கொரோனா உதவி தளங்களில் பதிவேற்றப்பட்டன.

அடுத்த கட்டமாக, தன்னார்வலர்கள் கண்ணில் கண்ட தகவல்களை எல்லாம் பகிர்ந்து கொள்வதை விட அவற்றை வடிகட்டி வெளியிடுவதே இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என உணர்ந்து, உதவி கோரிக்கைகள் மற்றும் தகவல்களை சரி பார்த்து வெளியிடத்துவங்கினர்.

இதே வேகத்தில் கொரோனா உதவிக்கான நிதி திரட்டலை எளிதாக்கும் வகையில் நன்கொடை அளிப்பதற்கான தளங்களும் அமைக்கப்பட்டன.

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் சமூக ஊடகங்கள் தான் மிகப்பெரிய மீட்பராக அமைந்திருக்கின்றன. இந்த நிகழ்வுகளை மையமாக கொண்டு எழுதப்பட்ட அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் கட்டுரை தலைப்பு தெரிவிப்பது போல, ‘இந்தியாவில் உதவிக்கான கதறல்கள் கேட்கும் நிலையில், சமூக ஊடகங்கள் தான் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட உதவியாக அமைகிறது’.

 – சைபர்சிம்மன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.