சமூக ஆர்வலர்  டிராபிக் ராமசாமி மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட டிராபிக் ராமசாமி கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கனிமொழி, திமுக: திரு. டிராபிக் ராமசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் தொடங்கி, பொதுநல வழக்குகள் வரை சமூகத்திற்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. இவர் தொடுத்த பொதுநல வழக்குகள் பல முக்கியமான தீர்ப்புகளைப் பெற்றுத் தந்திருக்கின்றன. பொது நலனுக்காக இறுதி வரை உழைத்த அவரது அர்ப்பணிப்பு என்றென்றும் பாராட்டத்தக்கது. அவரது மறைவிற்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர், அதிமுக: முதுமையிலும் சமூகப் பிரச்னைகளுக்கு எதிராக குரல்கொடுத்த சமூக போராளி டிராபிக் ராமசாமி அவர்கள்  உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்: அநீதிகளை துணிச்சலாக எதிர்த்தவர் டிராபிக் ராமசாமி. பொதுநல வழக்குகள் மூலம் மக்கள் பிரச்னைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நீதிக்காக அயராது போராடிய டிராபிக் ராமசாமிக்கு என் அஞ்சலிகள்.

விஜயகாந்த், தலைவர் தேமுதிக: மக்களின் நலனுக்காக தன்னலம் இன்றி உழைத்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, தேமுதிக மீது என்றும் மிகுந்த பற்று கொண்டிருந்தார். அவருடைய மறைவு ஈடு இணை செய்ய முடியாதது. எனவே அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி: அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலுக்கெதிராகவும், ஆளும் ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கெதிராகவும் வாழ்வின் இறுதிக்காலம் வரை தனியொரு மனிதராக நின்று உறுதியாகப் போராடிய சமூகச்செயற்பாட்டாளர் ஐயா டிராபிக் ராமசாமி அவர்கள். ஐயா டிராபிக் ராமசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். ஐயாவை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

சமூகத்தின் மீதான தனிமனிதரின் பொறுப்புணர்வு எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதற்கான நிலைத்த அளவுகோலாகவே ஐயா டிராபிக் ராமசாமி அவர்களின் செயல்பாடுகள் திகழ்ந்து அவரது புகழை என்றைக்கும் பறைசாற்றும் என்பது திண்ணம். ஐயாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

ஆளூர் ஷா நவாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவு வேதனையளிக்கிறது. நாகை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினார். வாஞ்சையுடன் பழகுவார். உடல்நலம் குன்றிய நிலையிலும் மக்களுக்காக போராடினார். அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக ஒலித்தார். ஆழ்ந்த இரங்கல்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.