இந்த தேர்தலில், பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸும் வெற்றி பெற்று, சட்டப்பேரவைக்கு முதல் முறை செல்கிறார். எம்.எல்.ஏ பதவியோடு சேர்த்து, அமைச்சர் பதவியும் இவருக்கு கிடைக்குமா என பலரும் கேட்க தொடங்கியுள்ளனர்.

கேரளாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் பினராயி விஜயனே ஆட்சியை தக்கவைத்துள்ளார். இதன் மூலம் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியை பிடித்திருக்கும் பெருமையை அவர் பெற்றுள்ளார். 40 ஆண்டுகால கேரள அரசியலில் ஒரு கட்சி தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வருவது இதுவே முதன்முறை.

இந்நிலையில், இந்த தேர்தலில் பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸும் வெற்றி பெற்றிருப்பதால் அம்மாநில அரசியல் வரலாற்றில் முதன் முறையாக மாமனாரும் மருமகனும் சட்டமன்ற உறுப்பினர்களாகி சட்டப்பேரவைக்குச் செல்கின்றனர்.

image

இந்த முகமது ரியாஸ் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் கணவர். வீணா பெங்களூரில் மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதேபோல் முகமது ரியாஸ் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி அப்துல் காதர் என்பவரின் மகன். இவர் சி.பி.எம் இளைஞர் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்கமான DYFI-ன் தேசிய தலைவர். இருவருக்கும் கடந்த ஜூனில் தான் திருமணம் நடந்தது. இருவருக்குமே இரண்டாவது திருமணம் என்பதால் மிக எளிமையாக திருமணம் நடந்தது.

இதற்கிடையே, தான் இந்த தேர்தலில் முகமது ரியாஸ் கோழிக்கோடு மாவட்டம் பேபூர் தொகுதியில் சிபிஎம் சார்பில் களம்கண்டார். கடந்த 2009-ம் ஆண்டே கோழிக்கோடு தொகுதியில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்டவர் முகமது ரியாஸ். அப்போது சுமார் 800 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் தான் இந்த தேர்தலில் வெற்றி கனியை பறித்திருக்கிறார். முதல்முறை சட்டசபைக்கு செல்லும் ரியாஸ்க்கு மற்றொரு வாய்ப்பும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது அமைச்சர் பதவி வாய்ப்பு தான்.

இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கும் சிபிஎம் கட்சியில் போன முறை அமைச்சர்களாக இருந்த பலருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எல்.டி.எஃப் அரசில் கடந்த மீன்வளத்துறை அமைச்சராக இருந்த மேழ்சிக்குட்டி அம்மா இந்தமுறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். அதேபோல் கடந்த முறை அமைச்சரவையில் அங்கம் வகித்த ஐந்து அமைச்சர்களுக்கு கட்சி கட்டுப்பாடுகள் காரணமாக போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இது போக தன் உறவினருக்கு சட்டவிரோத வகையில் பணி பெற்றுக்கொடுத்த உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.டி.ஜலீல் லோக் ஆயுக்தா தீர்ப்பின்படி பதவி விலகியதால் அவருக்கு இந்த முறை வாய்ப்பு இல்லை என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது.

இதனால் இந்த முறை ஏராளமான அமைச்சர் பதவி காலியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் பதவிகளுக்கு இந்த முறை புதுமுகங்களை அதுவும் இளைய வயதினருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த கட்சி கூட்டத்தில் கட்சியை வளர்க்கும் விதமாக வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. அதன்படியே சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதிக அளவு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

image

அதை பின்பற்றி அமைச்சரவையிலும் இளைஞர்களுக்கு புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம். அப்படி பார்க்கையில் சட்டமன்றத்துக்கு தேர்வாகி இருக்கும் இளைஞர்கள் வரிசையில் முன்னணி இருப்பவர் முகமது ரியாஸ். இவர் DYFI-ன் தேசிய தலைவர் என்பதையும் தாண்டி மாநில அரசியலில் நீண்ட காலமாக இருக்கிறார்.

இதனால் அவருக்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக மலையாள ஊடங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அதேநேரம், அரசியலில் நீண்ட காலம் இருந்தாலும், முதல்முறையாக தான் தேர்தலில் வெற்றிபெற்றுக்கிறார் முகமது. போதாக்குறைக்கு இவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் பினராயி விஜயன் தேவை இல்லாமல் அதிக விமர்சனங்களை எதிர்கொள்வார் என்பதால் பதவி கிடைக்காமல் போகவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் முடிவுகள் ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.