இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் சூழலில், இந்த இரண்டாம் அலை ஏற்படுத்தும் தாக்கத்தில், வட இந்தியாவில் பல குழந்தைகள் தங்கள் தாய் – தந்தையரை இழந்து, ஆதரவற்ற நிலையை அடைகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சிலர், பெற்றோரில் யாரேனும் ஒருவரை இழந்து, பொருளாதார ரீதியாகவோ, மனநலன் சார்ந்தோ பாதிக்கப்படுகின்றனர் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தச் செய்தியை உறுதிபடுத்திய சமீபத்திய சம்பவம்: சமீபத்தில் கொல்கத்தாவில், பிறந்து சில தினங்களேயான ஒரு குழந்தை, கொரோனா இரண்டாவது அலையில் தனது பெற்றோரையும், தந்தை வழி பாட்டி – தாத்தாவையும் இழந்திருக்கிறது. தொடர்ந்து அக்குழந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இக்குழந்தையை, உறவினர்கள் யாரும் வளர்க்க முன்வரவில்லை. அதனால் குழந்தை ஆதரவற்ற நிலையில் தவித்தது. இறுதியாக, குழந்தையை, வேறு நகரத்தில் வசித்து வந்த அதன் தாய்வழி பாட்டி – தாத்தா எடுத்து வளர்க்க சம்மதித்து வாங்கிக் கொண்டனர்.

இச்சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து மேற்கு வங்க நிருபர் அனுராதா ஷர்மா பதிவுசெய்கையில், “குழந்தையின் தாய்வழி பாட்டி – தாத்தாவும், காவல் துறையினரின் தொடர் அறிவுறுத்தலின்பேரில், மிகுந்த தயக்கத்துடன்தான் குழந்தையை பெற்றுக்கொண்டனர். இக்குழந்தை போல கொரோனாவால் கைவிடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது” என கூறியுள்ளார்.

image

அனுராதாவின் வார்த்தைகளை உறுதிபடுத்தும் வகையில், சமீபத்தில் கர்நாடகா, டெல்லி போன்ற பெருநகரங்களில்கூட பெற்றோரை இழந்த குழந்தைகள், ஆதரவின்றி வீதியில் நின்ற செய்திகள் வெளிவந்துள்ளன. ஆதரவற்று நின்ற அக்குழந்தைகளை காவல்துறையினர் மீட்டெடுத்ததாக, அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகின.

இப்படி மீட்டெடுக்கப்படும் குழந்தைகளை, காவல்துறையினர் முதற்கட்டமாக அவர்களின் உறவினர்களிடம் விட்டு வளர்க்கச்சொல்லி அறிவுறுத்துவதாக சொல்லப்படுகிறது. உறவினர்கள் தயக்கம் காட்டும்பட்சத்தில், மாநில அரசுகள் அக்குழந்தைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்ட முன்வருகிறது. இப்படி ஆதரவற்று விடப்படும் குழந்தைகள் பற்றி டெல்லியை சேர்ந்த தன்னார்வு அமைப்பை சேர்ந்த ஒருவர் அங்கிருக்கும் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “நிறைய குழந்தைகளுக்கு, பெற்றோர் இருவருமே கொரோனாவால் உயிரிழந்து விடுகின்றனர். வருங்காலத்தில் குழந்தைகள் தத்தெடுத்தலை ஊக்குவிக்கும் விதத்தில் அரசு தீவிரமாக செயல்பட்டால், இக்குழந்தைகளின் வாழ்வில் நல்வழி பிறக்கும்” எனக் கூறியுள்ளார்.

குழந்தைகள் தத்தெடுக்கப்படுவது என வரும்போது, நடைமுறையில் அதிலும் பல சிக்கல் இருப்பதாக சொல்லப்படுகிறது. நிறைய பேர் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுவருகிறது. ஆகவே தத்தெடுத்தல் விஷயத்தில் மட்டும், அனைத்தும் சட்டப்படி நடக்க வேண்டும் என்பதை காவல்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஒருசிலர் சமூகவலைதளங்களில் குழந்தைகள் பற்றிய விவரங்களை போட்டு, சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகளை தத்துக்கொடுக்கின்றனர். இவையாவும் தண்டனைக்குரிய குற்றம் எனக் கூறும் அதிகாரிகள், இதை தவிர்க்க, பெற்றோரை இழந்த குழந்தைகளை ஒப்படைக்க, டெல்லி சார்பில் உதவி எண் வழங்கப்பட்டு வருகிறது. அந்த எண் – 9311551393. இதில், பெற்றோர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கே ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கும் இடமிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

image

எந்தப் பகுதியை சேர்ந்த குழந்தை என்றாலும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என டெல்லி கமிஷன் கூறியுள்ளது. இப்படி ஆதரவற்று விடப்படும் குழந்தைகளை பொறுத்தவரையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தை சேர்த்த நடுத்தர வயதிலுள்ள குழந்தைகளுக்கு கூடுதலாக நிறைய சிக்கல் இருப்பதாக சொல்லப்பட்டுகிறது. ஏனெனில், இவர்களை பொறுப்பேற்கும் உறவினர்கள், முடிந்தவரை விரைந்து இவர்களுக்கு திருமணம் செய்துவைத்து, இவர்களை தங்களிடமிருந்து தள்ளிவைக்க எண்ணுவதாகவும், இதனால் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இல்லையெனில், இக்குழந்தைகளை வேலைக்கு அனுப்பி, தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள அந்த உறவினர்கள் நினைக்கின்றனர் என சொல்லப்படுகிறது. இது, குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே, அக்குழந்தைகளுக்கான சேவைகளை மாநில அரசுகள் கவனிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

எது எப்படியாகினும், கொரோனா இரண்டாவது அலை, இந்தியாவில் நிறைய நீண்டகால பாதிப்புகளை மிக மோசமாக ஏற்படுத்துகிறது என்பது மட்டும் மறுப்பதற்கில்லை. 

தகவல் உறுதுணை: India Today

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.