அள்ள அள்ள குறையாத அத்தனை இயற்கை வளங்களும் கொட்டிக்கிடக்கும் ஆப்பிரிக்கா நாடுகளில், சொல்லமுடியா துன்பத்தில் துவலும் மக்களின் துயரம் இன்னும் அதிகரித்துக்கொண்டேபோகிரது. திரும்பும் இடமெல்லாம் தீப்பற்றி எரியும் பிரச்னைகளோடு அல்லல்படும் ஆப்பிரிக்கா மக்களை இப்போது ஆட்டிப்படைக்கிறது மொசாம்பிக் மோதல்.

2017-ம் ஆண்டு முதல் இப்பகுதி வன்முறைகளாலும் பாதுகாப்பற்ற சூழலாலும் பாதிக்கப்பட்டு இருந்தது. ஆயினும், கடந்த மார்ச் மாதம் தீவிரவாதிகள் பெம்பா நகரைத் தாக்கி ஆக்கிரமித்ததுடன், டஜன் கணக்கான மக்களைக் கொன்று குவித்தும், லட்சக்கணக்கானவர்களை வேரோடு பிடுங்கி எறிந்தும் ஆடிய வெறியாட்டத்தில் மொசாம்பிக்கின் நிலைமை மேலும் கவலைக்கிடமானது.

நள்ளிரவில் திடீர் திடீரென மக்கள் உயிரைக் காத்துக்கொள்ள ஓடுவதும், அதில் தாய் வேறாக, சேய் வேறாக பிரிவதும், குடும்பங்கள் சிதைவதும், பெண்கள் கற்பழிக்கப்படுவதும் என கொடூரங்கள் தொடர்கிறது. எதிர்காலத்தை தேடி பல மைல் தூரம் நடையாய் நடந்த சிறு பிஞ்சுகளின் வீங்கிய பாதங்களில் உண்டான ரணங்களில் ஈக்கள் மொய்ப்பதும், அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாமல் மக்கள் பிணியால் துடிப்பதும், வானுக்கு கீழே கட்டிய ஒற்றைக்குடிலில் கும்பல் கும்பலாக மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்கிக் கிடப்பதும் எனத் துன்பங்கள் எல்லாமே இவர்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளாகி விட்டது.

10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக சொந்த வீடுகளை விட்டு வெளியேறி அடிப்படை வசதி கூட இல்லாத சிறு சிறு குடில்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது. எப்போதும் போல தலை துண்டிக்கப்படுதல், கற்பழிப்பு, கொலை, போதை கடத்தல் என உலகின் ஏனைய பகுதிகளால் கவனிக்கப்படாமல் விடப்பட்ட மொசாம்பிக்கில் தலை தூக்கியுள்ள புதிய பிரச்னை என்ன?

மொசாம்பிக் மோதல்

எதிர்பாராத திடீர் தாக்குதல்!

மார்ச் 24 அன்று மொசாம்பிக்கின் கபோ டெல்கடோ மாகாணத்தில் தங்களை கடவுளின் தூதர்கள் என்று அறிவித்துக்கொண்ட ஒரு கும்பல் மொசாம்பிக் மக்களை தம் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் இப்போதும் பால்மாவை விட்டு வெளியேற முயற்சிக்கிறார்கள். சாலை வழியாக கால் நடையாகவும், நீர்வழியே படகுகள் மூலமும், ஐ.நா-வின் மனிதாபிமான விமான சேவைகள் மூலமும், பிற சிவில் சமூக குழுக்களாலும் மக்கள் மீட்கப்படுகிறார்கள் என்கிறது ஐ.நா.

இடம்பெயர்ந்தோரின் நிலை மிகச்சிக்கலான நிலையில் உள்ளது. மக்கள் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியான நிலையில் தவிக்கின்றனர். இவ்வாறான ஒரு அசம்பாவிதத்தை மனிதாபிமான அமைப்புகள் முன்கூட்டியே எதிர்பார்க்காததால் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளது. சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை பசி பட்டினியால் சோர்வுற்று, குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலையில் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு அன்சார் அல்-சுன்னா எனும் குழு பொறுப்பேற்றுள்ளது.

யார் இந்த அன்சார் அல்-சுன்னா… எப்போது இந்த கிளர்ச்சி தொடங்கியது?

அன்சார் அல்-சுன்னா என்றால் பாரம்பரியத்தை ஆதரிப்பவர்கள் என்று பொருள். ஈராக் போரின்போது அமெரிக்காவிற்கு எதிராகப் போராடிய ஒரு ஈராக் சன்னி கிளர்ச்சிக் குழுவே இது. 2017-ல் மாணிக்கங்கள் மற்றும் எண்ணெய் வளம் செழித்த மொசாம்பிக்கின் மாகாணமான கபோ டெல்கடோவில் அரசு மற்றும் பொதுமக்கள் மீது இந்த அமைப்பு தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது. வறுமை மற்றும் பொருளாதார பற்றாக்குறை காரணமாக சமூக அதிருப்தியின் விளைவாக உருவான இந்தக் குழு தற்போது வளர்ந்து, விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் இவர்களின் அட்டூழியங்களும் எல்லை மீறி உள்ளது.

மொசாம்பிக் மோதல்

உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதம்!

ஏற்கெனவே பசி, பஞ்சம், நோய், வறுமை என நாலு பக்கத்தாலும் நலிந்திருக்கும் ஆப்பிரிக்காவை மேலும் நசுக்க ஆரம்பித்துள்ளது தீவிரவாதம். மேற்கு ஆப்பிரிக்காவில் மாலி, சாட், கேமரூன், நைஜீரியா, லிபியா, எகிப்து மற்றும் சூடானும், கிழக்கு ஆப்பிரிக்காவில் கென்யா, தான்சானியா, உகாண்டா மற்றும் சோமாலியா ஆகியவையும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நாடுகளாகும். இவற்றுள் மொசாம்பிக்கில் சமீப காலமாக அதிகரித்து வரும் தீவிரவாத கிளர்ச்சிகள் அதிக பயத்தையும் கவலையையும் உண்டாக்கி உள்ளது. மொசாம்பிக்கைத் தவிர, வேறு எந்த தென்னாப்பிரிக்க நாடுகளும் இதுவரை இந்தளவு பாதிக்கப்படவில்லை.

அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை ஈராக்கிலிருந்து வெளியேற்றுவதே தீவிரவாத குழுக்களின் ஆரம்ப குறிக்கோளாக இருந்தது. ஆனால், பின்னர் மொசாம்பிக்கில் இஸ்லாம் சிதைந்துள்ளது என்றும், இங்கே மக்கள் நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பின்பற்றுவதில்லை என்றும் கூறி அன்சார் அல்-சுன்னா அங்கு ஒரு இஸ்லாமிய அரசை ஸ்தாபிக்க முயற்சிக்கிறது. ஏப்ரல் 2018 முதலே மொசாம்பிக்கில் இந்த தீவிரவாத குழு ஊடுருவியதாக தகவல்கள் இருந்தாலும், 2020 ஏப்ரல் வரை மொசாம்பிக்கின் அரசாங்கம் இதை மறுத்தே வந்தது.

Total நிறுவனத்தின் பெரிய முதலீடும் வெளிநாட்டவர் மீதான தாக்குதலும்!

சென்ற மாதம் மொசாம்பிக்கின் வடக்கு மாகாணமான கபோ டெல்கடோவில் சிறப்பு பாதுகாப்பு பகுதியில் அமைந்துள்ள பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான டோட்டல் (Total) பாதுகாப்பு பிரச்னைகள் காரணமாக நிறுத்திவைத்திருந்த வேலையை திரும்பவும் ஆரம்பிக்க அரசாங்கத்திடம் அனுமதி கோரியது. 20 பில்லியன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆலையை மொசாம்பிக்கில் ஆரம்பிப்பதுதான் டோட்டல் நிறுவனத்தின் முழுமையான திட்டம். ஆனால், டோட்டல் நிறுவனம் மீண்டும் கட்டுமானத்தை தொடங்குவதாக அறிவித்த சில மணி நேரங்களில்தான் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடங்கின.

டோட்டல் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளால் பல வெளிநாட்டு மற்றும் மொசாம்பிகன் தொழிலாளர்கள் மொசாம்பிக்கிற்கும் பிரான்சிற்கும் இடையே போக்குவரத்தை மேற்கொண்டு வந்தனர். இவர்களில் பலர் இந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் டோட்டல் நிறுவனம் தம் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதாகவும், அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தனது அனைத்து ஊழியர்களையும் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்துள்ளது. ஆனாலும் டோட்டல் நிறுவனம் முழுமையாக வெளியேறவில்லை. இந்த தாக்குதல் அச்சுறுத்தல்களால் பிரெஞ்ச்சின் முக்கிய முதலீடு தாமதப்படலாம் அல்லது முற்றாக இழக்கப்படலாம் என்று அஞ்சுகிறது மொசாம்பிக் அரசு.

மொசாம்பிக் மோதல்

அடுத்தது என்ன?

ஆரம்பத்தில் மொசாம்பிக் போலீசார் மற்றும் இராணுவம் இந்த தீவிரவாத கும்பலை எதிர்த்து போராடி வந்தனர். பின் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (Military and technical cooperation agreement) கையெழுத்திட்ட பின்னர் ரஷ்ய அரசாங்கம் 2019-ன் பிற்பகுதியில் இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பியது. 2020-ம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவும் சிறப்புப் படைகளை அனுப்பி உதவியது. செப்டம்பர் 2020-ல் மொசாம்பிக் அரசு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிய உதவிக்கு ஒரு மாதம் கழித்து ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நைஜீரியா மற்றும் அல்ஜீரியாவுக்குப் அடுத்தபடியாக மொசாம்பிக்கில் தான் ஆப்பிரிக்காவில் மூன்றாவது மிகப் பெரிய இயற்கை எரிவாயு இருப்பு உள்ளது. எண்ணெய் வளம் இருந்தாலே அந்த பூமி செல்வச் செழிப்பில் பூரிக்கும். ஆனால் இங்கோ நிலைமை அப்படியே தலைகீழ்.

உலகின் தலை சிறந்த கடற்கரைகளுக்கு புகழ் பெற்றிருந்த மொசாம்பிக்கின் கரை ஓரங்களில் தற்போது பிணங்கள் மிதக்கின்றன. பல கோடி மதிப்புள்ள மாணிக்கங்கள் புதைந்துள்ள மண்ணில் மக்கள் பசி மயக்கத்தில் மடிந்து மாய்கின்றனர். பணம் கொழிக்கும் எண்ணெய் வளத்தை வைத்துக்கொண்டு இந்த மக்கள் ஏனைய நாடுகளிடம் கையேந்தி நிற்கின்றனர்.

மொசாம்பிக் மக்களின் துயரம் முடியா இருளுக்குள் நீண்டு கொண்டே செல்கின்றது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.