கொரோனா நோய்த்தொற்று, உச்சம் தொட்டு வரும்வேளையில், ‘மத்திய பா.ஜ.க அரசின் அலட்சியமே, கொரோனா பாதிப்புகளுக்கு முழுக்காரணம்’ என்று குற்றம் சாட்டிவருகின்றன எதிர்க்கட்சிகள். பா.ஜ.க தலைவர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லிவருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனை நேரில் சந்தித்துப் பேசினேன்…

”கொரோனா தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டை விட்டுவிட்ட மத்திய அரசு, இப்போது மக்களிடம் வந்து ‘வருமுன் காப்போம்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறதே…?”

”மத்திய அரசு மீது மட்டுமே நாம் பழிபோடக்கூடாது. கொரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதில், நம் எல்லோருக்குமே பங்கிருக்கிறது என்பதை முதலில் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா என்றொரு மோசமான சூழல் வரும் என்று இதற்கு முன்புவரை உலக நாடுகளில் யாருக்குமே தெரியாது. குறிப்பாக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளே கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டுதான் இருந்தன. ஆனால், அந்த முதல் அலை பாதிப்பிலிருந்து இந்தியாவை எளிதாக மீட்டுக்கொண்டு வந்தது மத்திய அரசு, மக்களும் அரசின் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு நல்கினார்கள்.

‘என்95 மாஸ்க், வெண்டிலேட்டர், பிபி கிட்’ என்ற வார்த்தைகளையெல்லாம் அதற்கு முன்புவரை நாம் கேள்விப்பட்டதுகூட இல்லை. ஆனாலும்கூட இந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி மருந்துகளையும்கூட நாமே தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவுக்கு முன்னேற்றம் கண்டிருந்தோம். ஆனால், உருமாறிய கொரோனா வைரஸ் 2-வது அலையாக மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தன் தாக்குதலை ஆரம்பித்தபோது, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறது.”

”கொரோனா விவகாரத்தில், இந்திய அரசின் அலட்சியம் குறித்து மிகக்கடுமையான விமர்சனங்களை சர்வதேச ஊடகம் வைத்திருக்கிறதே?”

”கொரோனாவின் முதல் அலையின்போது நம் அரசின் சரியான திட்டமிடல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளால் பாதிப்பிலிருந்து முழுமையாக தற்காத்துக்கொண்டோம். இன்றைக்கு நம்மை குறைசொல்லி எழுதுகிற இந்தப் பத்திரிகைகளின் சொந்த நாடுகளிலேயேகூட கொரோனா தாக்கத்துக்கு பல லட்சம் பேர் பலியானார்கள்.

உருமாறிய கொரோனா வைரஸ், இப்படி ஆக்ஸிஜன் தேவையை உருவாக்கும் என்பது யாரும் கணித்திராதது. இக்கட்டான இந்தத் தேசியப் பேரிடர் காலத்தில், ஊடகம், எதிர்க்கட்சிகள் என அனைத்தும் அரசோடு இணைந்து செயலாற்றுவதுதான் பிரச்னையிலிருந்து நாம் வெளிவர உதவுமே தவிர, மேலும் மேலும் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கக்கூடாது.”

ராகுல்காந்தி

”நோய்த்தொற்றை கருத்தில்கொண்டு, மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தையே ரத்து செய்த முதல் அரசியல்வாதி ராகுல்காந்திதானே?”

”மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில்தான் கொரோனா 2-வது அலை பாதிப்பு இருந்துவந்தது. மற்றபடி தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் இந்தப் பிரச்னையே இல்லை. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம் மாநில தேர்தல் பிரசாரங்களின்போது இந்த 2-வது அலை குறித்த பேச்சே எழவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் 6-வது கட்டப் பிரசாரத்தின்போதுதான் இந்தப் பிரச்னை எழுகிறது. இதுகுறித்த கள ரிப்போர்ட் கிடைத்ததும் பிரதமரும் உள்துறை அமைச்சரும்கூட உடனடியாக பிரசாரத்தை ஆன்லைன் வழியிலானதாக மாற்றிக்கொண்டார்கள்தானே.”

”பிச்சை எடுத்தாவது ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்யுங்கள் என டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசைக் கண்டித்திருக்கிறதுதானே?”

”இதை நாம் கண்டனம் என்று சொல்லமுடியாது. மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் அரசாங்கம், ஊடகம், நீதிமன்றம் என எல்லோருக்குமே அக்கறை இருக்கிறது.

அதனால்தான், ‘அனைத்து மாநிலங்களும் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுங்கள்’ என்று மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை மூலமாக கடந்த ஏப்ரல் 17-ம் தேதியே அனைத்து மாநிலங்களுக்கும் அலெர்ட் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில்கூட, ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தி ஆக்கபூர்வ நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இதேபோல், டெல்லி அரசும் அலட்சியம் தவிர்த்து ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.”

ஸ்டெர்லைட் ஆலை

”மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்காக, தமிழ்நாட்டில் செயற்கையான ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறதா மத்திய அரசு?”

”இது தவறான வாதம்… இதுபோன்ற நோக்கம் எல்லாம் யாருக்கும் இல்லை. இக்கட்டான இந்த நேரத்தில், மக்களின் உயிரைக் காக்கக்கூடிய ஆக்ஸிஜனை தயாரிக்க வேண்டும் என்பது மட்டும்தான் நமது அக்கறை. எனவேதான், ‘ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஆலையைத் திறக்கவேண்டும்’ என்ற நிபந்தனையோடு அனைத்துக் கட்சியினரும் ஒப்புதல் அளித்திருக்கிறோம்.

மத்திய அரசு, மாநிலங்கள் அனைத்துக்கும் பொதுவானது. நாட்டு மக்கள் அனைவரின் நலத்தையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால், ஸ்டெர்லைட்டில் தயாராகும் ஆக்ஸிஜனை , தமிழ்நாட்டுத் தேவைக்குப் போகத்தான் வெளி மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டும்’ என இங்கே சிலர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

Also Read: வேலூர்: வீடுகளை நோட்டமிட்டு நாய்கள் மீது தாக்குதல்?! – நள்ளிரவில் பீதியை கிளப்பிய இளைஞர்கள்

மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில்தான் தடுப்பூசி மருந்துகள் தயாராகின்றன. ‘எங்கள் மாநிலத் தேவையைப் பூர்த்தி செய்துவிட்டுத்தான் மற்ற மாநிலங்களுக்கு தடுப்பூசிகளைத் தருவோம்’ என்று அவர்கள் சொன்னால், அது ஏற்புடையதுதானா? எனவே, எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான அரசாக மத்திய அரசு இருக்கும்போது, அது பகிர்ந்தளித்து காக்க வேண்டிய கடமையோடு செயல்படுகிறது.

மற்றபடி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதா, வேண்டாமா என்பதெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்காக இருந்துவருகிறது. இதுகுறித்து நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும். அதன் முடிவில் நாம் யாரும் தலையிட முடியாது.”

நரேந்திர மோடி

”ஆனால், தடுப்பூசி தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று, ‘தங்கள் சொந்த மாநிலத் தேவையை பூர்த்தி செய்துவிட்டுத்தான் மற்ற மாநிலங்களுக்கு தடுப்பூசியை அனுப்புவோம்’ என சொல்லியிருப்பதாக செய்திகள் வெளிவருகிறதே…?”

”அவர்கள் அப்படி சொல்லியிருக்கலாம். ஆனால், மத்திய அரசு, மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி பாதுகாப்பு கிடைக்கவேண்டும் என்ற அக்கறையோடுதான் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்குக்கூட அண்மையில் 9 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வந்து சேர்ந்திருக்கின்றன.”

Also Read: நீலகிரி: கேரளாவிலிருந்து மது வாங்க குவிந்த கூட்டம்! – எல்லையோர டாஸ்மாக்கை மூடிய மாவட்ட நிர்வாகம்

”தடுப்பூசி மருந்துகளைத் தயாரிக்கும் திறன் கொண்ட பொதுத்துறை நிறுவனங்களை விட்டுவிட்டு, தனியார் நிறுவனங்களை மத்திய அரசு ஊக்கப்படுத்துவது நியாயம்தானா?”

கொரோனா தடுப்பூசி மருந்து என்பது அவசர தேவையாக இருக்கிறது. இந்த நிலையில், அரசு பொதுத்துறை நிறுவனங்களில் மருந்து தயாரிப்பு, சோதனை என பலகட்டப் பரிசோதனை முயற்சிகளை செய்துபார்ப்பதற்கான கால நேரம் இல்லை.

கோவிஷீல்டு – கோவேக்சின்

எனவே, உடனடி தயாரிப்புக்கு உகந்ததாக இருக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் அரசு கவனத்தில் வைத்திருக்கிறது. தேவையேற்பட்டால், பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் மருந்துகளை தயாரிப்பதற்கும் அரசு ஆவண செய்யும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.