கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தாக்கம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஆரம்பத்தில் மக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டினாலும், தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மக்கள் பரவலாகத் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி

Also Read: கோவிஷீல்டு: இந்தியாவுக்கு ரூ.600, அமெரிக்காவுக்கு ரூ.300 – ஓரே தடுப்பூசி வெவ்வேறு விலைகளா?!

ஆங்காங்கே அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டு வருகின்றனர். ஆனால், இரண்டு கட்டங்களாக போடப்படும் தடுப்பூசி குறித்து மக்களிடம் இன்னும் சில குழப்பங்கள் நிலவுகின்றன. கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவஞானம் தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் மார்ச் 16-ம் தேதி கொரோனா முதல்கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டேன். இப்போது போல எல்லாம் கூட்டம் இல்லை. சென்றவுடன் போடுமளவுக்கு ஃப்ரீயாகத்தான் இருந்தது. அப்போது ஒரு ஓ.பி ஷீட் கொடுத்திருந்தனர்.

சிவஞானம்

ஆனால், அதில் தேதியோ, எனக்கு எந்த மருந்து போட்டனர் என்றோ குறிப்பிடவில்லை. எனக்கு கோவிஷீல்டு தடுப்பு மருந்தை போட்டனர் என்பதை நானே குறிவைத்துக் கொண்டேன். 26-ம் தேதிதான் நான் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக மெசேஜ் வந்தது.

அதுவும் பழைய தேதியில் இல்லாமல், 26-ம் தேதிதான் தடுப்பூசி போட்டதாகப் பதிவேற்றினர். இதுகுறித்து அப்போதே மருத்துவர் சேரலாதனிடம் பேசினேன். அதற்கு அவர், நிர்வாக சிக்கல்களை கூறினார். அவர்களின் நிலையை புரிந்துகொண்டு வந்துவிட்டேன். 28 நாள்களுக்குப் பிறகு, ஏப்ரல் 22-ம் தேதி கொரோனோ தடுப்பூசி இரண்டாவது தவணை செலுத்திக் கொள்வதற்காக மீண்டும் பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன்.

பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை

எனக்கு 50-வது டோக்கன் வழங்கியிருந்தார்கள். முதல் தவணை செலுத்தியதற்கான என் மருந்து சீட்டையும், ஆதார் அட்டையின் நகலையும் பெற்றுக்கொண்டு, `கோவாக்சின் இரண்டாவது தவணை’ என்று சீல் இடப்பட்ட சீட்டில் தேதி குறிப்பிட்டு ஊசி போடப்படும் இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

ஆனால், நான் ஏற்கெனவே கோவிஷீல்ட் போட்டிருப்பதால், கோவாசிக்சின் போடக்கூடாது என்பதை தெரிந்து வைத்திருந்தேன். எனக்கு முன்னர் தடுப்பூசி போடப்பட்ட 49 நபர்கள், தங்களுக்கு முதல் தவணை எந்தத் தடுப்பூசி போடப்பட்டது என்பது பற்றி எந்த ஒரு விசாரணையும் செய்யவில்லை. ஏதோ தவறு நடப்பதாக உணர்ந்தேன் ஊசி போடுவதற்கான எனது முறை வந்தபோது அங்கிருந்த ஊசி போடும் சகோதரியிடம், `எனக்கு முதல் தவணை எந்தத் தடுப்பூசி போடப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பினேன்.

பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை

அதற்கு அவர்கள், `அது பற்றிய விபரம் எதுவும் எங்களுக்குத் தெரியாது. பதிவு செய்யும் இடத்தில் இது போன்ற விபரங்களை தெரிந்த பின்பே அவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்கான மருந்து சீட்டு கொடுப்பார்கள்’ என்று கூறினார்.

நான் அவரிடம், `நீங்கள் சொல்வது போல எந்த ஒரு விசாரணையும் மருந்து சீட்டு கொடுக்கும் இடத்தில் நடத்தப்படவில்லை’ என்று தெரிவித்தேன். அவர்கள், பொறுப்பு மருத்துவ அலுவலரை சந்திக்கும்படி என்னை அனுப்பி வைத்தார்கள். நான் பொறுப்பு மருத்துவ அலுவலர்களைச் சந்தித்தபோது அவர் எனது கேள்விகளை மிகவும் பொறுமையாக கேட்டுக் கொண்டு எனது மருந்து சீட்டை வாங்கிப் பார்த்தார்.

கொரோனா தடுப்பூசி

மருந்து சீட்டில் முதல் தவணை எந்த தடுப்பூசி போடப்பட்டது என்பது பற்றி எந்த ஒரு விவரமும் இல்லை. அதன்பிறகு, எனக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்ட தேதியை வைத்து அந்தத் தேதியில் அந்த மருத்துவமனையில் ஒரே ஒரு வகை தடுப்பூசி மட்டுமே இருந்தது என்பதை கண்டறிந்தார்.

அதாவது எனக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்ட தேதியில் அந்த மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்பட்டிருந்தது. அதன்பிறகு அவரே எனது ரிப்போர்ட்டில் கோவிஷீல்டு என்று எழுதினார். அதை உறுதி செய்த பொறுப்பு மருத்துவ அலுவலர், `இன்றைய தேதியில் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இரண்டாவது தவணையாக போடப்படுவதால், கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாவது தவணை இன்று போட இயலாது’ என்று என்னை திருப்பி அனுப்பி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி

எனக்கு முன்னர் தடுப்பூசி போடப்பட்ட 49 பேரின் நிலை என்ன? இதில் எத்தனை பேருக்கு தடுப்புசி மாற்றி போடப்பட்டுள்ளது? இது குறித்துக் கேட்டபோது பதில் இல்லை. `பிரச்னையாகி விடப்போகிறது, விசாரித்து போடுங்கள்’ என்று கூறவே, அடுத்து வந்தவர்களிடம் அதுகுறித்து கேட்டுவிட்டு பணியை தொடர்ந்தனர்.

தடுப்பூசி குறித்து ஏற்கெனவே மக்களுக்குப் பல்வேறு குழப்பங்கள் இருக்கும் நிலையில், அரசு நிர்வாகமே இப்படி மெத்தனமாக இருக்கக் கூடாது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்து எந்தக் குழப்பங்களும் ஏற்படாத வகையில் அரசு மருத்துவமனைகள் செயல்பட வேண்டும்.

கொரோனா தடுப்பூசி

அப்போதுதான், கொரோனா வைரஸுக்கு எதிராக நம்முடைய வலிமை இன்னும் அதிகரிக்கும்” என்றார் அழுத்தமான குரலில்.

பெரியநாயக்கன்பாளையம் அரசு முதன்மை மருத்துவ அலுவலர் சேரலாதன், “ஆரம்பத்தில் இரண்டு நாள்களுக்கு கையில் எழுதிய ஓ.பி டிக்கெட்தான் கொடுத்தோம். அதன் பிறகுதான், இதில் குழப்பம் ஏற்படும், மேலும் அதிக நேரம் எடுக்கும் என்பதையும் உணர்ந்தோம். எனவே, அதை எளிமையாக்க சீல் முறையை கையாள்கிறோம். அதில், ஜி.ஹெச் பெரியநாயக்கன்பாளையம் கோவிட் தடுப்பூசி (கோவிஷீல்டு, கோவாக்சின்) ஊசி டோஸ் 1, டோஸ் 2 என்று தனித்தனியாகக் குறிப்பிட்டுள்ளோம்.

தடுப்பூசி சீல்

Also Read: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு… தயாரிப்பில் ஏன் தாமதம், மோடி அரசு தவறிழைத்தது எங்கே?!

சம்பந்தப்பட்டவர்களின் பெயர், வயது, ஊசி போட்ட தேதியை குறிப்பிட்டு டிக் அடித்தால் முடிந்தது. கோவாக்சின் என்றால் அதில் மஞ்சள் நிறத்தில் ஒரு கார்டை இணைக்கிறோம். மஞ்சள் நிறத்தை பார்த்தாலே அது கோவாக்சின் என்பது எங்களுக்குத் தெரிந்துவிடும். ஆனால், பதற்றத்தில் மக்கள் அதில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை கவனிப்பதில்லை. இன்றைக்குக்கூட பலர், எங்களுக்கு என்ன ஊசி போடப்பட்டுள்ளது எனக் கேட்டனர்.

`அதிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது பாருங்கள்’ என்றதற்கு, `இதில் எதுவும் இல்லை’ என்றே பதில் சொல்கின்றனர். அதாவது தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி ரெக்கார்டுக்காக, ரிப்போர்ட்டில் போடப்பட்ட தடுப்பூசியின் லேபிளை கிழித்து இணைப்பார்கள். அப்படி நாமும் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இங்கு ஒரு நாளுக்கு 380 பேர் வரை தடுப்பூசி போடுகிறோம். நாம் அதை செய்ய முடியாது.

கோவிஷீல்டு சீல்

இங்கு இரண்டு தடுப்பூசிகளுக்கு தனித்தனி நிறங்களில் சீல் வைத்திருக்கிறோம். கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டு ஊசிகளையும் வெவ்வேறு இடங்களில் வைத்துத்தான் போடுகிறோம். அதை இணையத்தில் பதிவேற்றுவதில் கூட சில சிக்கல்கள் இருக்கின்றன. அதையும் நாங்கள் உடனடியாக சரி செய்து கொடுத்து வருகிறோம்.

எங்களிடம் முதல் டோஸ் போட்டவர்கள், எங்களிடமே இரண்டாவது டோஸ் போடுவார்களா என்பது தெரியாது. அதனால்தான் இவ்வளவு விஷயங்களை கடைப்பிடிக்கிறோம். அதேபோல, வேறு எங்காவது முதல் டோஸ் போட்டு, இரண்டாவது டோஸுக்கு எங்களிடம் வந்தால்கூட அவர்களிடம் உள்ள ஆவணங்களை பரிசோதித்துவிட்டுத்தான் ஊசி போடுகிறோம்.

கோவாக்சின் சீல்
கோவாக்சின் சீல்

Also Read: `தடுப்பூசி போட்ட பிறகு ரத்த தானம் செய்யலாமா… கூடாதா?!’ – நிபுணரின் விளக்கம்

உரிய ஆவணங்கள் இல்லாதவர்களை திருப்பி அனுப்பிவிடுகிறோம். இங்கு 100% தவறுகளே நடக்காது எனச் சொல்லிவிட முடியாது. அதே நேரத்தில், தவறுகள் நடக்காமல் இருப்பதற்கும், க்ராஸ் செக் செய்வதற்கும் எளிமையான முறையை கையாள்கிறோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.