திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த மோரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்காட் டேவிட் (53). கிறிஸ்துவ மத பாதிரியாரான டேவிட் அதே பகுதியில் ஆராதனை சபை ஒன்று நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பில்லி, சூனியம், பேய், பிசாசு என அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்காகத் தனது சபையில் அக்னி ஆராதனை நடத்தி வந்துள்ளார். டேவிட்டின் அக்னி ஆராதனையில் கலந்துகொண்டால் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆவடி மட்டுமின்றி அம்பத்தூர் , திருநின்றவூர் எனப் பல பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் இவரது சபைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

பாலியல் தொல்லை

அந்த வகையில், 6 மாதத்திற்கு முன்பு ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு பகுதியைச் சேர்ந்த 45 மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் தன் குடும்ப பிரச்னைகள் தீர வேண்டும் என்று டேவிட்டின் சபைக்கு வந்திருக்கிறார். அந்த பெண்ணிடம் வாரம்தோறும் தவறாமல் தன் சபையில் நடைபெறும் சிறப்பு ஆராதனைகளில் கலந்துகொண்டால் துரத்தும் கஷ்டங்கள் எல்லாமே காணாமல் போகும் என்று டேவிட் ஆறுதலாகப் பேசி நம்ப வைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து வாடிக்கையாக டேவிட்டின் சபைக்கு வரத் தொடங்கிய அந்த பெண் தனது குடும்ப கஷ்டங்கள் அனைத்தையும் பாதிரியாரிடம் சொல்லி அழுது புலம்பியிருக்கிறார்.

அந்த பெண் தன்னிடம் குடும்ப பிரச்னைகள் அனைத்தையும் கூற, டேவிட் அதை வைத்தே அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று ஜெபம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் கடந்த 17-ம் தேதி டேவிட்டின் சபைக்குப் பிரார்த்தனை செய்வதற்காகத் தனியாகச் சென்றிருக்கிறார். அப்போது சபையில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட பாதிரியார் டேவிட் ஜெபிக்குமாறு கூறியிருக்கிறார்.

அந்த பெண்ணும் பாதிரியார் கூறியதை போல் முட்டி போட்டு, கைகூப்பி ஜெபித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, பாதிரியார் டேவிட் பின்னால் இருந்து வந்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததாக கூரப்படுகிறது. ஜெபத்திலிருந்து திடுக்கிட்டுக் கண்விழித்த அந்த பெண் பாதிரியாரின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனையடுத்து, அங்கிருந்து வேகமாக வெளியேறியவர் நேராக ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்திற்குச் சென்று கண்ணீர் மல்கப் பாதிரியார் குறித்து புகார் தெரிவித்திருக்கிறார்.

பாதிரியார் ஸ்காட் டேவிட்

பெண்ணிடம் புகார் மனுவினை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் ஜெகநாதன் வழக்குப் பதிவு செய்து தன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார். இந்நிலையில், நேற்று காலை பாதிரியார் ஸ்காட் டேவிட்டை அவரது வீட்டில் வைத்து போலீஸார் கைது செய்து விசாரித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதிகள், பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து பாதிரியார் டேவிட் தற்போது திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பிரார்த்தனைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த பாதிரியாரின் செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.