உலகில் எத்தனை பெரிய கொடிய நோய்க்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பிரதான மருந்துகள் அன்பும், அரவணைப்பும், ஊக்கமும், தன்னம்பிக்கையும்தான். இந்த மருந்துகளை நோய்வாய்ப்பட்டவர்களின் உற்றாரும் உறவினர்களும்தாம் அவர்களுக்குக் கொடுத்து கவனிக்க வேண்டும்.

ஆனால் இதற்கு நேரெதிராக, தெலங்கானாவில் மனதை நொறுக்கும் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஜம்மிக்குந்தா பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து தன் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். அம்பேத்கர் காலனியில் வாடகை வீட்டில் தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

கொரோனா வைரஸ்

கரீம்நகர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகக் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், காய்கறி வியாபாரம் செய்து வரும் அந்தப் பெண்ணுக்குக் கடந்த வாரம் கடும் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். அங்கு மருத்துவர்கள், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில், அவருக்குக் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய அந்தப் பெண் தன் குடும்பத்தினரிடம் தனக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார்.

அதை அறிந்த வீட்டின் உரிமையாளர், கொரோனா நோயாளியை வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பியிருக்கிறார். அவரின் 2 மகன்களும், தங்கள் அம்மாவை வீட்டின் உரிமையாளர் வெளியே அனுப்பியதை கண்டிக்காமல், அவரை மருத்துவமனையில் சேர்க்காமல், சுகாதாரத் துறைக்கும் தகவல் அளிக்காமல் தாங்களும் அவரை புறக்கணித்துள்ளனர்.

`உன்னை வீட்டில் அனுமதித்தால் எங்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரவிவிடும். அதனால் மருத்துவமனைக்குச் சென்று நீயே சேர்ந்துவிடு மருத்துவர்கள் உன்னை கவனித்துக் கொள்வார்கள். குணமடைந்த பின் வீட்டுக்கு வா’ என்று கூறி மகன்கள் அந்தப் பெண்ணை வீட்டிலிருந்து ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த பெண்

மகன்கள் மருத்துவமனைக்குப் போகச் சொல்லி வீட்டிலிருந்து விரட்டியதால் மனமுடைந்து போனவர், ஆனால் அதற்கான வழிமுறை தெரியாததால், தன் வீட்டுக்கு வெளியிலேயே 2 நாள்கள் உணவின்றி தவித்தபடி படுத்து கிடந்துள்ளார். கொரோனா நோயாளி தங்கள் தெருவில் படுத்துக் கிடப்பதைக் கண்ட பகுதிவாசிகள் அவரைப் பற்றி சுகாதாரத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்காமல், அவரை அங்கிருந்து செல்லும்படி மிரட்டியிருக்கின்றனர்.

அதன் காரணமாக, அங்கிருந்து எழுந்து சென்ற அந்தப் பெண், தான் வியாபாரம் செய்து வரும் சந்தைக்குச் சென்று தன்னுடைய காய்கறி வண்டியில் ஏறிப் படுத்துக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் உடலில் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியதை அடுத்து, அருகிலிருந்தவர்களிடம் தன்னை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கேட்டுள்ளார். வியாபாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, அங்கு விரைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணை மீட்டு கரீம்நகர் கொரோனா முகாமில் தனிமைப்படுத்தி அவருக்கு உணவு, உடை மற்றும் மருந்துகள் அளித்து கவனித்து வந்தனர்.

கொரோனா நோய் பாதிப்பு

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனிமை முகாமில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கரீம்நகர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், “கொரோனா நோயாளி என்று தெரிந்தவுடன் வாடகை வீட்டின் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர் உட்பட அனைவரும் அந்தப் பெண்ணை புறக்கணித்திருக்கின்றனர். அதன் காரணமாக மனம் நொந்துபோனவர் வீட்டின் வாசலிலேயே 2 நாள்கள் உணவு, மருந்துகள் என எந்தவித அடிப்படை கவனிப்புமின்றி தவித்துள்ளார். நாங்கள் தகவல் அறிந்து மீட்டு சிகிச்சைகள் அளித்துக் கவனித்து வந்தோம். ஆனால், அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டார்” என்றனர்.

கொரோனா நிவாரணப் பணிகளில் தனி மனிதர்கள் முதல் தன்னார்வக் குழுக்கள்வரை களத்தில் உதவிக்கு இறங்கும் காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்த, இன்னொரு புறம், மனிதம் பொய்க்கும் இப்படியான கொடுமையான கொரோனா காட்சிகளும் தொடர்ந்தபடி இருக்கின்றன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.