இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. நோய்த்தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. நோய்த்தொற்றின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ள மாநிலங்களில் உத்தரப்பிரதேசமும் ஒன்று. உத்தரப்பிரதேசத்தில் நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புது உச்சம் தொட்டு வருகிறது. நேற்றைய தினம் மட்டும் அம்மாநிலத்தில் 30,000-க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும், தலைநகர் லக்னோவில் உடல்களைத் தகனம் செய்யக் காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது.

கொரோனா

நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர உத்தரப்பிரதேச அரசு கொரோனா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி இருக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காகப் பிரத்தியேக செயலி ஒன்றினை வெளியிட்டுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களுக்கு அந்த செயலியை தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், மாநில அரசு தனிக் குழு ஒன்றினை அமைத்து கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும், அவர்களுக்கு மருந்துகள் சரியான நேரத்தில் வழங்கப்படுவதற்காகவும் 24 மணிநேர ஹெல்ப் லைன் நம்பர் ஒன்றினையும் வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில், தலைநகர் லக்னோவிலிருந்து இளைஞர் ஒருவர் மாநில அரசின் ஹெல்ப் லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவி கேட்டிருக்கிறார். மறுமுனையில் பேசிய கொரோனா கட்டுப்பாட்டு அறை ஊழியரின் பதில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நோயாளியிடம் அரசு ஊழியர் கூறிய அலட்சிய பதில் ஆடியோ பதிவாக வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

லக்னோவைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற இளைஞருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றின் அறிகுறிகள் தென்பட்டிருக்கிறது. அதனையடுத்து இருவரும் கடந்த 10-ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்கின்றனர். கடுமையான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டதால் தம்பதியினர் தாங்களாகவே தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டிருந்துள்ளனர். 12-ம் தேதி வெளியான பரிசோதனை முடிவில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரிய குடும்பம் என்பதால் தம்பதியினர் தங்களிடம் இருந்து மற்றவர்களுக்கும் நோய்த்தொற்று பரவி விடுமோ என்று அச்சமடைந்திருக்கின்றனர்.

தொலைபேசி உரையாடல்

இது தொடர்பாக சந்தோஷ், அரசின் கொரோனா ஹெல்ப் லைனுக்கு தொடர்புகொண்டு நடந்ததைக் கூறி உதவி கேட்டிருக்கிறார்.

அப்போது, மறுமுனையில் சந்தோஷின் அழைப்புக்குப் பதிலளித்த ஹெல்ப் லைன் ஊழியர் சுசி என்பவர், சந்தோஷிடம் அரசின் கொரோனா செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து விட்டீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு, சந்தோஷ் அப்படி ஒரு செயலி இருப்பதாக எனக்குத் தெரியாது என்றிருக்கிறார். அதற்கு ஹெல்ப் லைன் ஊழியர், மாவட்ட அதிகாரிகள் நிச்சயம் உங்களுக்கு இதுபற்றி கூறியிருப்பார்கள் எனக்கூற சந்தோஷ், மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் என யாரும் எங்களிடம் இந்த செயலி பற்றி எதுவும் கூறவில்லை என்று கூறியிருக்கிறார். சந்தோஷின் பதிலைக் கேட்டு ஆத்திரமடைந்த ஹெல் லைன் ஊழியர் சுசி, ‘அப்படியானால் போய் செத்து போ, கல்வியறிவற்ற முட்டாள்’ என்று சந்தோஷை திட்டி விட்டு இணைப்பைத் துண்டித்திருக்கிறார்.

அரசு ஊழியரின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன சந்தோஷ், தன் மொபைலில் ஆட்டோமேட்டிக் கால் ரெக்கார்டர் மூலம் பதிவாகியிருந்த தொலைப்பேசி உரையாடலை சமூக வலைத்தளங்களில் அரசின் ‘ஹெல்ப் லைன்’ குறித்த விமர்சனங்களுடன் பதிவிட்டார். 54 நொடிகள் நீடிக்கும் அந்த உரையாடல் தற்போதுகு சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் சந்தோஷை தொடர்பு கொண்டு தங்கள் தவறுக்கு மன்னிப்பு கோரியிருக்கின்றனர். ஆனால், மன்னிப்பு கேட்ட அதிகாரிகள் சந்தோஷுக்கு எந்த வித உதவியையும் செய்யாததால் அவர் தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து கடிதம் எழுதியிருக்கிறார். முதல்வருக்குக் கடிதம் அனுப்பியுள்ள இளைஞர் சந்தோஷின் தந்தை பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி ஆதித்யநாத்திற்கு சந்தோஷ் எழுதியுள்ள கடிதம்

கொரோனா பாதிப்பு மிகுதியாக உள்ள நேரத்தில் அரசு அதிகாரிகளின் இத்தகைய செயல்பாடுகள் உத்தரப்பிரதேச மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.