கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மலையாள வருடப்பிறப்பான விஷூ பூஜைக்காக கடந்த 10-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. கடந்த 11-ம் தேதி (நேற்று) அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் புக் செய்து 48 மணி நேரத்துக்குள் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழுடன் செல்லும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் பத்தாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வரும் 14-ம் தேதி சித்திரை விஷூ சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வரும் 18-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

பதினெட்டாம் படி ஏறும் கவர்னர் ஆரிஃப் முகமதுகான்

இந்த நிலையில் நேற்று மாலை கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான் தனது மகனுடன் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். நேற்று மாலை 4.15 மணியளவில் பம்பைக்கு வந்த கவர்னர் ஆரிஃப் முகமதுகான் மற்றும் அவரது இளைய மகன் கபீர் ஆரிஃப் ஆகியோர் பம்பைக்குச் சென்றனர். பம்பா கணபதி கோயிலில் இருந்து இருமுடி கட்டிய கவர்னர் மற்றும் அவரது மகன் ஆகியோர் சுவாமி ஐயப்பன் மலை பாதை வழியாக சபரிமலைக்கு நடந்து சென்றனர்.

சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்த பக்தர்களிடம் கவர்னர் ஆரிஃப் முகமதுகான் நலம் விசாரித்தார். மேலும் சில பக்தர்கள் கவர்னருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். நடந்து மலை ஏறிச்சென்ற கவர்னர் இருமுடி கட்டுடன் பதினெட்டாம் படி ஏறிச்சென்றார். அப்போது சற்று தடுமாறிய கவர்னருக்கு போலீஸார் உதவிசெய்ய முன்றனர். ஆனால் அவர் உதவி வேண்டாம் எனக்கூறி பதினெட்டாம் படி ஏறினார்.

இருமுடிக்கட்டுடன் கவர்னர் ஆரிஃப் முகமதுகான்

வலியநடைப்பந்தலில் தேவசம்போர்டு சேர்மன் வாசு கவர்னரை வரவேற்றார். பின்னர் ஐயப்ப சுவாமி சன்னிதானத்தில் தரிசனம் செய்த கவர்னர், நேற்று இரவு சபரிமலையில் தங்கினார். இன்று காலையிலும் ஐயப்பசுவாமி சன்னதியில் சுவாமி தரிசனம் செய்த கவர்னர் பின்னர் மாளிகைப்புரம் சன்னிதானத்துக்குச் சென்றார். அங்கு சந்தன மரம் நட்டபிறகு கவர்னர் ஆரிஃப் முகமதுகான் அங்கிருந்து புறப்பட்டார்.

இஸ்லாமியரான கேரள கவர்னர் ஆரிஃப் முகமதுகான் மகனுடன் இருமுடிக்கட்டு சுமந்து சபரிமலை சென்று சுவாமி தரிசனம் நடத்தியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.