திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலமான ஏலகிரி மலை மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்குப் பெரிய பங்களா இருக்கிறது. துரைமுருகன் அடிக்கடி இங்கு வந்து ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் அமலுக்கு வந்தபோது, இந்த பங்களாவில்தான் குடும்பத்துடன் தங்கியிருந்தார் துரைமுருகன்.

துரைமுருகன்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரை அடுத்துள்ள புனிகாந்தூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் அவரின் மனைவி சங்கீதா ஆகிய இருவரும் பங்களாவில் பராமரிப்பு வேலைகளை செய்துவருகிறார்கள். இந்த நிலையில், கொள்ளையர்கள் சிலர் நேற்று இரவு துரைமுருகனின் பங்களாவுக்குள் மிகத் துணிச்சலாக புகுந்துள்ளனர்.

பங்களாவின் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பணம், நகைகள் இல்லாததால் ஏமாற்றமடைந்துள்ளனர். விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் சிக்காததால் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவின் ஹாட் டிஸ்க்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை தூங்கி எழுந்த பணியாளர்கள் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போயினர்.

உடைக்கப்பட்ட கதவு

உடனடியாக துரைமுருகன் தரப்புக்கும், காவல்துறையினருக்கும் தகவல் சென்றது. கைரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்ற போலீஸார் தடயங்களைச் சேகரித்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தேர்தலின்போது பட்டுவாடா செய்ய முடியாத பெரும் தொகையை பங்களாவில் பதுக்கி வைத்திருப்பதாக தவறான தகவல்கள் வெளியில் உலாவிய காரணத்தினால், கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பதாக காவல்துறை வட்டாரம் சொல்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.