‘ஆடம்பர திட்டங்களை விடுத்து, கொரோனா தடுப்பூசி உற்பத்தியை பெருக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து வயது மக்களுக்கும் எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்று பிரதமர் மோடிக்கு, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடிதம் எழுதியிருக்கிறார்.

ஜோதிமணி

இதுகுறித்து, பிரதமர் மோடிக்கு, ஜோதிமணி அனுப்பியுள்ள கடிதத்தில்,

“நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் நோயாளிகளுக்கான படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் இந்த நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வருகிறது. மக்களிடத்திலும் பரவலாக அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு நிலவி வருவதாக அறிகின்றோம். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களில் இந்நிலை இருப்பதால், தடுப்பூசி முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இத்தகைய காலத்தில் கோவிசீல்ட் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, தடுப்பூசிகள் உற்பத்தி செய்வதை அதிகரிக்க ரூ. 3,000 கோடி நிதி கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.

ஜோதிமணி எழுதிய கடிதம்

இப்படி ஒரு சூழ்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது என்பதை மக்கள் பிரதிநிதியாக நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த நிதி உள்பட, பி.எம். கேர்ஸ் – ன் கீழ் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி இருந்தும், உடனடித்தேவையான தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு அரசு நிதிஒதுக்கீடு செய்ய முன்வராமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

Also Read: காங்கிரஸ்: `துரோகம் செய்கிறார்கள்; ரத்தம் கொதிக்கிறது!’ – சொந்தக் கட்சியை விமர்சிக்கும் ஜோதிமணி

இத்தகைய காலத்தில், ரூ. 20,000 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பரமாக புதிய நாடாளுமன்றம், அலுவலகங்கள் அமைக்க சென்ட்ரல் விஸ்தா புராஜெக்ட் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்த தயக்கமும் காட்டாமல், பணிகளை தொடர்ந்து செய்து வருகிறீர்கள். இது அறமற்ற செயலாகும். எனவே, மத்திய அரசு உடனடியாக முன்வந்து, தேவையில்லாத ஆடம்பர திட்டங்களுக்கு செலவு செய்வதை விடுத்து, தடுப்பூசிகளை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உற்பத்தியை பெருக்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

ஜோதிமணி எழுதிய கடிதம்

இந்த நோய் பரவலை குறைக்க வேண்டுமென்றால், வயது வரம்பு இல்லாமல் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கப்பெற வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவுறுத்தியிருக்கிறது. இத்தகைய நடவடிக்கை பல நாடுகளில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவியிருக்கிறது. எனவே, மத்திய அரசு தடுப்பூசி உற்பத்தியை பெருக்குவதுடன், தடுப்பூசி மையங்கள் மூலம் அனைத்து வயது பிரிவினருக்கும் முன்பதிவிற்கான தேவை இல்லாமல் தடுப்பூசிகள் விரைந்து அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.