முருகப் பெருமான் என்றாலே அசுரனை அழித்த வீரத்திருக்கோலம்தான் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட முருகப்பெருமான் அறுபடைவீடுகளிலும் அருள்பவன். அந்த அறுபடை வீடுகளிலில் ஐந்துபடை வீடுகளில் சூரசம்ஹாரப் பெருவிழா நடைபெறும். அதிலும் ஒரு படைவீட்டில் ஓர் ஆண்டில் மூன்று முறை, சூரசம்ஹார வைபவம் நடைபெறும் என்னும் தகவல் பலருக்கும் வியப்பைத் தருவது. அந்தத் தலம் எது தெரியுமா? அதுதான் மதுரையில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம்.

ஐப்பசி மாத கந்த சஷ்டி விழா, தைமாதத் தெப்பத்திருவிழா, பங்குனி மாதப் பெரு விழா என மூன்று உற்சவ காலங்களிலும் இங்கு சூர சம்ஹாரப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். மேலும் இத்தல முருகப்பெருமானுக்கு ஆடு, மயில், யானை, சேவல் என நான்கு வாகனங்கள் அமைந்திருப்பதும் சிறப்பு.

முருகன்

முருகன் அசுரர்களை எதிர்த்து மூன்று இடங்களில் போர் புரிந்தார். கடலில் போர் புரிந்த தலம் திருச்செந்தூர். நிலத்தில் போர் புரிந்த இடம் திருப்பரங்குன்றம். விண்ணில் போர் புரிந்த தலம் திருப்போரூர். இதை மாயை அடங்கிய இடம் திருச்செந்தூர். கன்மம் அடங்கிய இடம் திருப்பரங்குன்றம். ஆணவம் அடங்கிய இடம் திருப்போரூர் என்பர் ஞானிகள்.

அறுபடைவீடுகளில் முதல் தலமான இந்தத் திருத்தலத்தை நக்கீரர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிப்பரவியுள்ளனர். இங்கு அருளும் சிவபெருமான் சத்தியகிரீஸ்வரர், பவளக் கனிவாய்ப் பெருமாள், கற்பக விநாயகர், சுப்பிரமணியர், துர்கையம்மன் ஆகிய ஐந்து தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டிய ஒரே குடைவரையில் அருள்பாலிக்கின்றனர்.

பெரும்பாலும் முருகப்பெருமான் நின்றகோலத்திலேயே அருள்பாலிப்பார். ஆனால் இங்கு அவர் அமர்ந்த கோலத்தில் அதுவும் தெய்வயானையை மணம் முடித்த திருமணக் கோலத்தில் அருள்கிறார். இவருக்கு அருகிலேயே நாரதர், இந்திரன், பிரம்மன், நின்றகோலத்தில் வீணை இன்றி சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் அருள்கின்றனர். சூரிய சந்திரர்களும் கந்தவர்களும் திருமணக் கோலத்தை தரிசிக்கும் விதமாக மேலே இருந்து காண்பதைப்போல அமைக்கப்பட்டிருக்கிறது.

தருமியின் பாடல் பிழைக்காக சிவபெருமானையே எதிர்த்துப் பேச நேர்ந்த அபராதம் நீங்க நக்கீரன் இத்தலத்தில் வந்து சிவ பூஜை செய்துவந்தார். ஒரு நாள் அவர் பூஜை செய்துகொண்டிருக்கும்போது ஓர் அற்புதக் காட்சியைக் கண்டார். மரத்தில் இருந்து நீரில் விழுந்த இலை ஒன்று பாதி மீனாகவும் பாதி பறவையாகவும் மாறியது. மீன் நீருக்குள் இழுக்கப் பறவை தரைக்கு இழுத்தது.

இந்த மாயக் காட்சியைக் கண்டதில் நக்கீரரின் சிவபூஜை கெட்டது. சிவ அபராதம் புரிந்ததாகச் சொல்லி பூதம் ஒன்று அவரைப் பிடித்து சிறையில் அடைத்தது. அதுவரை 999 பேரை அடித்திருந்த பூதம் ஆயிரம் நபர்கள் ஆனதும் அவர்களைக் கொன்று தின்றுவிடுவதாகச் சொல்லிக்கொண்டிருந்தது. நக்கீரர் 1000வது நபராக சிறைப்பட்டதும் சிவ அபராதம் செய்து பிடிபட்ட மற்றவர்களும் கதறி அழுதனர்.

அப்போது நக்கீரர் முருகப்பெருமானை நினைத்துத் திருமுருகாற்றுப்படை பாடினார். அவரின் தமிழிலும் பக்தியிலும் மகிழ்ந்த முருகப்பெருமான் தன் வேலை ஏவி பூதத்தை சம்ஹாரம் செய்தார். நக்கீரர் உட்பட ஆயிரம் பேரையும் விடுவித்தார். நக்கீரர் பூதம் தன்னைத் தீண்டிய பாவம் நீங்க கங்கையில் நீராட வேண்டும் என்று சொன்னார். அதைக்கேட்ட முருகப்பெருமான் தன் வேலினை ஒரு பாறையின் மீது எறிந்து கங்கை நதியைப் பொங்கச் செய்தார். அந்த தீர்த்தம் காசித்தீர்த்தம் என்று இன்றளவும் இருந்து வருகிறது. இந்தக் காசித்தீர்த்தம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ளது. அதற்கு அருகிலே மேற்கு நோக்கிய சந்நிதியில் காசிவிஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் சுப்பிரமண்யர் சந்நிதிகள் அமைந்துள்ளன.

நக்கீரருக்கு வேல் அனுப்பி அருளிய நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டு இங்கு வேல் எடுத்தல் என்னும் வைபவம் நடைபெறுகிறது.

இந்த விழாவைச் சுற்றுப்புறக் கிராமத்து மக்களே எடுத்து நடத்துகின்றனர். இந்தத் திருவிழா மழை வேண்டுகின்ற வழிபாடாகவும் கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமானின் வேல், காலை 9 மணியளவில் கோயிலிலிருந்து பல்லக்கு ஏறிப் புறப்படும். மலைமீது காசிவிஸ்வநாதருக்கு எதிரேயுள்ள மலைமேல் குமாரரிடம் வேல் சேர்ப்பிக்கப்படும். பூஜைகளானதும், கிராம மக்கள் சார்பில் அன்னதானம் நடைபெறும். மாலையில் மலையிருந்து பல்லக்கில் புறப்படும் வேல், அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியர் சந்நிதியை வந்தடையும். பின்னர் இரவில், பூப்பல்லக்கில் புறப்பாடாகி மூலவர் சந்நிதிக்குக் கொண்டு செல்லப்படும்.

இங்கு குடைவரை மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. பதிலாக அவர் திருக்கரத்தின் வேலுக்கு மட்டுமே இங்கு அபிஷேகங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பரங்குன்றம்

பொதுவாக பெருமாள் சந்நிதிக்கு முன்பாக கருடாழ்வார் சந்நிதி அமைவது வழக்கம். ஆனால் இத்தலத்தில் பெருமாளுக்கு எதிராக சிவபெருமான் இருப்பதால் அங்கு கருடாழ்வார் சந்நிதி அமையவில்லை. மாறாக சண்முகர் மண்டபத்தில் உள்ள கார்த்திகேயனுக்கு அருகில் வடக்கு நோக்கி அருள்கிறார் கருடாழ்வார.

இங்கு வெள்ளை மயில்களைக் காணமுடியும். தேவர்கள் முருகனின் திருத்தலத்தில் உறைய வேண்டி வெள்ளை மயில்களாக மாறி இங்கு உலாவுவதாக ஐதிகம். பத்தாண்டுகளுக்கு முன்புவரை இங்கு நிறைய வெள்ளை மயில்களைக் காண முடிந்தது என்கிறார்கள் பக்தர்கள்.

Also Read: மதுரை மூதூர் மாநகரத்தின் கதை – 11: நரசிங்கம்பட்டி சித்திரச்சாவடியும் ஈமக்காடும் ஏமக்கோயிலும்!

சிவபெருமான் பார்வதி தேவிக்குப் பிரணவப் பொருளை உபதேசம் செய்தார். அப்போது தேவியின் மடியில் குழந்தையாக இருந்த முருகப்பெருமான் அதைக் கேட்டு உணர்ந்தார். பின்பு குருவின் மூலம் கற்க வேண்டியதை இப்படிக் கேட்டது பாவம் என்று நினைத்த முருகப்பெருமான் இத்தலத்துக்கு வந்து சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்தாராம். சிவபெருமானும் முருகப்பெருமானுக்குக் காட்சி கொடுத்த தலம் இது. முருகனுக்குக் காட்சிகொடுத்த சிவபெருமான் ஆதி சொக்கநாதராக சுப்பிரமண்யர் ஆலயத்துக்கு எதிரிலேயே கோயில் கொண்டருள்கிறார். திருப்பரங்குன்றம் வருகிறவர்கள் முதலில் ஆதி சொக்கநாதரை வழிபட்ட பின்புதான் முருகனை வழிபட வேண்டும் என்பது ஐதிகம்.

இங்கு நடைபெறும் பங்குனித் திருக்கல்யாண உற்சவத்துக்கு சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மையும் எழுந்தருள்வது வழக்கம்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் வந்து முருகப்பெருமானை வணங்கும் பக்தர்களுக்கு வாழ்வில் நல்ல திருப்பம் வரும் என்பது நம்பிக்கை. துன்பங்கள் நீங்கும். திருமணக் கோலத்தில் அருளும் தலம் என்பதால் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் திருமண வரம் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.