அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என்று உருக்கமாக அறிக்கை விட்டு சிறிது நாட்கள் ஓய்வெடுத்த சசிகலா, அரசியல் ரீ-என்ட்ரி ஆகியிருப்பதை அதிமுகவினர் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.

கோயிலில் வழிபாடு

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ள சசிகலாவை அ.மமு.க-வைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் சந்தித்து ஆசி வாங்கி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் ஆளும்கட்சிப் புள்ளிகளும் ரகசியமாக சந்தித்து மரியாதை செலுத்தியதாக சொல்லப்படுகிறது.

பெங்களூர் சிறையிலிருந்து விடுதலையாகி சசிகலா நேரடியாக அரசியல் பணிகளில் ஈடுபடுவார், மீண்டும் அ.தி.மு.க அவர் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று அ.ம.மு.க-வினர் எதிர்பார்த்தனர். அதற்காகத்தான் பெங்களூரிலிருந்து கிளம்பிய அவருக்கு ஊர் ஊராக பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். சென்னை வந்த சசிகலாவை பல பிரமுகர்கள் சென்று பார்த்தனர்.

இந்த நிலையில், தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிக்கை விட்டதும் டி.டி.வி தினகரன் முதல் அ.ம.மு.க தொண்டர்கள் வரை அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் எடப்பாடி தரப்பு மகிழ்ச்சி அடைந்தது. இந்த அறிவிப்புக்கு பின்னணியில் பல விஷயங்கள் சொல்லப்பட்ட நிலையில் தேர்தல் அறிவிப்பு வர, அதோடு சசிகலா அமைதியானார்.

தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஆன்மிகப் பயணத்தை தொடங்கியிருக்கிறார் சசிகலா. தமிழகத்தின் முக்கிய கோயில்களுக்கு சென்று சிறப்புப் பூஜைகள் செய்து வருபவர், தஞ்சாவூர், ராமேஸ்வரம், திருப்புல்லாணி, மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம், அழகர்மலை என பல கோயில்களுக்குச் சென்று சிறப்பு பூஜைகளைச் செய்து வருகிறார்.

ராமேஸ்வரம் கோயிலில் சசிகலா

வெளியே இது ஆன்மிகப் பயணமாக தெரிந்தாலும் திட்டமிட்ட அரசியல் பயணம் என்றே விஷயம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.

அ.ம.மு.க வேட்பாளர்கள் குறிப்பிட்ட சில தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவார்கள் அல்லது அ.தி.மு.க தோல்விக்குக் காரணமாவார்கள் என்ற நிலை இருக்கிறது. அப்படிப்பட்ட வேட்பாளர்களுக்கு வாழ்த்துச் சொல்லவும், தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டுமென்றும் ஊக்கப்படுத்தவே இந்தப் பயணத்தை சசிகலா திட்டமிட்டார் என்கிறார்கள்.

ராமேஸ்வரம் கோயிலில் சிறப்புப் பூஜை செய்யவந்தவரை, அ.ம.மு.க-வின் ராமநாதபுரம் வேட்பாளர் ஜி.முனியசாமி, திருவாடானை வேட்பாளர் வ.து.ஆனந்த், முதுகுளத்தூர் வேட்பாளர் முருகன் ஆகியோர் வரவேற்றனர். அன்று முழுவதும் அவருடனயே இருந்தனர். அப்பொழுது பல விஷயங்களை சசிகலா பகிர்ந்திருக்கிறார். `தேர்தல் முடிவு அ.தி.மு.க-வுக்கு எதிராக வரும், அதன் பின்னர் துரோகிகளைத் தவிர அனைவரும் என்னைத் தேடி வருவார்கள். அதுவரை நான் அமைதியாக இருப்பேன்’ என்று கூறியதாக நெருங்கிய வாட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை மாவட்ட அ.ம.மு.க வேட்பாளர்களுடன் சசிகலா

அதைத்தொடர்ந்து மதுரை வந்தவரை உசிலம்பட்டி வேட்பாளர் மகேந்திரன், மேலூர் செல்வராஜ், திருப்பரங்குன்றம் வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, வடக்குத் தொகுதி வேட்பாளர் ஜெயபால், தெற்கு தொகுதி ராஜலிங்கம், திருமங்கலம் வேட்பாளர் ஆதி நாராயணன் ஆகியோர் சந்தித்து ஆசி பெற்றார்கள்.

இந்த சந்திப்புக்குப்பின் அ.ம.மு.க வேட்பாளர்கள் உற்சாகமாகியிருக்கிறார்கள். தொகுதிகளில் முன்னை விட அதிக சுறுசுறுப்புடன் வேலை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

சசிகலாவின் ஆன்மிகப் பயணத்தை ஆரம்பத்தில் சாதாரணமாக நினைத்த அ.தி.மு.க-வினர், அது அரசியல் பயணம் என்பதை அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.