தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களுக்கு சொந்தமான அல்லது அவர்கள் தொடர்புள்ள இடங்களில் வருமான வரி சோதனைகள் நடப்பது அதிகரித்துள்ளது

தொழிற் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி இளங்கோவனுக்கு சொந்தமாக தருமபுரியில் உள்ள கல்வி மற்றும் நிதி நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்களுடன் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனையில் ஈடுபட்டனர். குமாரசாமிபேட்டையில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களிலிருந்து கணக்கில் வராத சுமார் 9 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில், விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாருக்கு சொந்தமான கல்லூரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 650 பித்தளை குடங்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் அந்தக் கல்லூரியில் பணியாற்றும் வீரபாண்டி என்பவர் வீட்டில் 13 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்கள் மற்றும் 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான ரொக்கத்தை பறிமுதல் செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இது தவிர முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை திமுக வேட்பாளருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 2 நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றது. வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து, சென்னை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடுகள், கல்லூரிகள், அறக்கட்டளை அலுவலகம் உள்ளிட்ட 10 இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். எ.வ.வேலுவை ஆதரித்து திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டிருந்த சூழலில் இந்த சோதனை நடைபெற்றிருந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, அரசியல் உள்நோக்கத்துடன் வருமானவரி சோதனை நடைபெற்றதாக குற்றஞ்சாட்டினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.