தேர்தல் தோல்வி பயத்தில் அதிமுக, பாஜகவை தூண்டி விட்டு வருமானவரித்துறை சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்திலுள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்து கொண்டிருப்பது குறித்து பேசிய அவர், “எ.வ.வேலு இல்லத்திலும், மருத்துவமனையிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. சோதனை நடத்த உரிமை உண்டு. ஆனால் தற்போது இந்த நேரத்தில் நடத்தப்பட்டுள்ள சோதனை அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று திமுக கருதுகிறது.

வேலு வீடு, தோட்டம், கல்லூரிகளில் சோதனை நடத்துவது மட்டுமல்லாமல் அவரது கெஸ்ட் அவுஸில் தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கி உள்ளார். அவர் தங்கி இருக்கும்போதே சோதனை நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. அங்கு எந்தவிதமான பொருளும் இல்லை.

image

ஆனால் விலை மதிப்பற்ற பொருள் அங்கு இருந்தது. அது மு.க.ஸ்டாலின் தான். அவரை வேண்டுமானால் சோதனையில் கைப்பற்றலாம். பெரிய தலைவர். 2 மாதத்திற்கு பிறகு முதல்வராக போகிறார். தோற்றுபோய் விடுவோம் என பயந்து அதிமுக பாஜகவை தூண்டிவிட்டு மத்திய அரசின் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் யாரும் துவண்டு விடமாட்டார்கள். அவர்கள் உற்சாகத்தோடு பணியாற்றுவார்கள். திமுகவை தேர்தல் களத்தில் வெல்ல முடியாது என்ற நிலைக்கு அதிமுகவும் பாஜகவும் வந்த காரணத்தால் இது போன்ற அதிகார துஷ்பிரயாக செயலில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயக மரபுக்கு உகந்தது அல்ல. நாகரீகமானது அல்ல. எங்களுடைய கண்டனத்தை பலமாக தெரிவித்து கொள்கிறோம்.

இது போன்ற சோதனைகளால் யாரும் பயந்து போய் விடுவார்கள் யாரும் எதிர்கின்ற கட்சியாக இருக்காது என பாஜக நினைக்கிறது. பிறகு ஒரே நாடு ஒரே மொழி ஒரே இனம் என்ற தத்துவத்தை அமல்படுத்தி விடலாம் என நினைக்கிறது பாஜக. வருமானவரித்துறை சோதனை தொடர்பாக தேர்தல் ஆணையம் தெரிவிப்பதால் சோதனையில் தேர்தல் ஆணையருக்கும் தொடர்பு இருப்பதாக கருதுகிறேன். சோதனையின் போது மு.க.ஸ்டாலின் இருந்தாரா இல்லையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு கேட்டு சொல்கிறேன் என்று துரைமுருகன் பதில் அளித்தார்.

அரசியலில் இது பயமுறுத்தும் செயல். இந்த சோதனை அதிமுக, பாஜகவுக்கு எதிர்ப்பு வாக்குகளாக மாறும். எங்கள் மீது அனுதாபத்தை ஏற்படுத்தும்” என்று துரைமுருகன் கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பிறகு அவ்வளவு தான் கேள்விகளா? எரிபொருள் முடிந்து விட்டது நன்றி என்று நகைச்சுவையாக பேசி செய்தியாளர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

– சுப்ரமணியன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.