தமிழகத்துடன் சேர்ந்து யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி சட்டப்பேரவை. புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் என நான்கு பிராந்தியங்களில் இந்த தொகுதிகள் அடங்கியுள்ளன. களத்தில் காங்கிரஸ் + திமுக + கம்யூனிஸ்ட் + விடுதலை சிறுத்தைகள் கூட்டணி, நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் (என். ஆர். காங்கிரஸ்) + அதிமுக + பாஜக கூட்டணி மற்றும் மக்கள் நீதி மய்யம் கூட்டணியும், பாட்டாளி மக்கள் கட்சியும் போட்டியிடுகின்றன. 

இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள என். ஆர். காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நீண்ட இழுபறிக்கு பிறகு உறுதியானதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி என். ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இருப்பினும் இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது. 

image

இந்நிலையில் தங்கள் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் என். ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் சுயேட்சையாக போட்டியிடுவது தான் பாஜக மற்றும் அதிமுக பிரமுகர்களை முகம் வாட செய்துள்ளது. ‘ஓட்டு பிரிவது, எதிர்க்கட்சிக்கு சாதமாகி விடும்’ என்றெல்லாம் பேச்சுகள் எழுந்துள்ளன. 

புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் சேர்த்து 489 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் காலாப்பட்டு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் PML கல்யாணசுந்தரத்தை எதிர்த்து A. ரமேஷ் என்கிற செந்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அண்மையில் இந்த செந்தில் என். ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. காலாப்பட்டு தொகுதியில் களப்பணியை செய்த காரணத்தினால் கூட்டணி கட்சியான பாஜக வேட்பாளரை எதிர்த்து களம் கண்டுள்ளார். அவருக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வரும், என். ஆர். காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான ரங்கசாமியின் ஆசி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

image

அதே போல காரைக்கால் திருநள்ளாறு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சி சார்பில் ராஜசேகரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் எம். எல். ஏவும், என். ஆர். காங்கிரஸ் பிரமுகருமான PR சிவா சுயேட்சையாக போட்டியிடுகிறார். அதே போல முத்தியால்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் வையாபுரி மணிகண்டனை எதிர்த்து என். ஆர். காங்கிரஸ் பிரமுகர் ஜோ. பிரகாஷ்குமார் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவர்களை தவிர பாகூர் தொகுதியின் என். ஆர். காங்கிரஸ் வேட்பாளரான தனவேலுவை எதிர்த்து என். ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த தியாகராஜன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அதே போல உருளையன்பேட்டை தொகுதியில் என். ஆர். காங்கிரஸ் பிரமுகர் நேரு சுயேட்சையாக போட்டியிடுகிறார். 

இது புதுச்சேரி அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணமும் உண்டு. புதுச்சேரியில் சுயேட்சை உறுப்பினர்களின் பங்களிப்பு கொஞ்சம் அதிகம் என்றே சொல்ல வேண்டும். ஆட்சி அமைக்கும் கட்சிக்கு பெரும்பான்மை பலத்தை கொடுப்பதே இந்த சுயேட்சை உறுப்பினர்கள் தான் எனவும் சொல்லலாம். கடந்த 2011 தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்ற என். ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைக்க சுயேட்சை உறுப்பினர் VMC சிவக்குமார் ஆதரவு அளித்தார். அதே போல 2016 தேர்தலில் 15 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைக்க சுயேட்சை உறுப்பினர் ராமச்சந்திரனின் ஆதரவு பெரிதும் உதவியது. அதனால் தான் தற்போது சுயேட்சை வேட்பாளர்களின் போட்டி அதிகாரப்பூர்வ அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

image

அதே நேரத்தில் புதுச்சேரியில் கட்சி, ஆட்சி, கொள்கை என அனைத்தையும் கடந்து முகம் அறிந்த வேட்பாளர்களுக்கு தான் வாக்குகள் அதிகளவில் பதிவாவது வழக்கம் என்கின்றனர் உள்ளூர் அரசியல் விமர்சகர்கள். அதுதான் தற்போது என். ஆர். காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. 

இருப்பினும் என்ன நடக்கிறது என்பதை அறிய அடுத்த சில நாட்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. சுயேட்சைகளாக வேட்பு மனுவை தாக்கல் செய்த என். ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் தங்கள் மனுவை திரும்ப பெறலாம். அப்படி இல்லாமல் போனால் தேர்தல் முடிவு நாளான மே 2 ஆம் தேதி வரை பொறுத்திருக்க வேண்டி உள்ளது. 

-எல்லுச்சாமி கார்த்திக் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.