மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியானது. இந்த பட்டியலில் பல புதுமுகங்களுக்கும், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவர்களுக்குமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கட்சியில் நீண்ட காலமாக உழைத்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி மோதல்கள் வெடித்துள்ளன. இதன் எதிரொலியாக அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்தன. இது, மேற்கு வங்க தேர்தல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்தார். சாட்டர்ஜியின் தொகுதியான பெஹலா பூர்பா, பல ஆண்டுகளாக அவர் நின்ற தொகுதி. ஆனால், அந்த தொகுதியானது தற்போது வேறொருவர் கைக்கு மாற்றபட்டுள்ளது. அது வேறு யாரும்ல்ல, அண்மையில் பாஜகவில் சேர்ந்த நடிகர் பேயல் சர்க்கார்தான்.

ஞாயிற்றுக்கிழமை பட்டியல் வெளியானதையடுத்து கட்சிக்குள் விரிசல்கள் ஆரம்பித்தன. திங்கள்கிழமை காலை முதல் அதிருப்தி உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளன. பாஜக அதிருப்தி உறுப்பினர்கள் பலரும் தெற்கு கோல்கத்தாவின் ஹேஸ்டிங்ஸில் உள்ள கட்சியின் மத்திய தேர்தல் அலுவலகம் முன் செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் சமாதானம் பேச வந்த காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமும் அரங்கேறியது.

இந்தப் போராட்டங்களின் நடுவே அங்கு வந்த பாஜக வேட்பாளர்கள், இது ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் சதி என குற்றம்சாட்டினர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசி, அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் மேற்கு வங்கத்தை வளமுடைய மாநிலமாக மாற்றுவோம் என்று சமாதானப்படுத்தினர்.

image

இந்தப் போராட்டம் குறித்து கூறும் மூத்த பாஜக தலைவர்கள், ‘ஒழுக்கமற்ற போராட்டம்’ என்றும், கட்டுபாடுடைய பாஜக போன்ற கட்சியில் இதுபோன்ற ஒழுங்கீனத்தை கண்டதில்லை என்றும் விமர்சித்துள்ளனர். ஆளும் திரிணாமூல் காங்கிரஸிலிருந்து உறுப்பினர்கள் அணி மாறுவதுதான் இதற்கு காரணம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவுக்குள் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் சாடியுள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளான ஹூக்லியில் தாரகேஸ்வர், ஹவுராவில் அம்தா மற்றும் டோம்ஜூர், குல்பி, அலிபூர்தார் உட்பட வடக்கு வங்கத்தின் சில பகுதிகளில், பாஜகவினர் திங்கள்கிழமை முதல் தொடர் போராட்டங்களில் அதிருப்தி பாஜகவினர் ஈடுபட்டடனர். காரணம், இந்தப் பகுதிகளில் பாஜகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது, கட்சி தொண்டர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர் ஸ்வாபன் தாஸ்குப்தா, ‘தி பிரின்ட்’ செய்தித் தளத்திடம் கருத்து கூறும்போது, “இரண்டு தலைவர்கள் தலைமையில் சில இடையூறுகள் இருந்தது இதற்கு ஒரு காரணம். ஆனால், நான் எனது சகாக்கள், கட்சி உறுப்பினர்களிடம் பேசுகையில் அவர்கள் நாங்கள் அனைவரும் கட்சிக்காகவும், மேற்கு வங்கத்தில் மாற்றத்தை கொண்டுவரவும் இணைந்து செயல்படுகிறோம் என்றனர்” என்றார்.

மேலும், “கடந்த 18 மாதங்களில் பாஜக வியத்தகு வளர்ச்சியை அடைந்துள்ளது. இருப்பினும் பாஜகவின் ஒழுக்க கலாசாரத்துக்கு பழகப்படாத சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். இது அரசியல் ஒருங்கிணைப்பின் சவால். கட்சி அதை நிர்வகித்து கையாள வேண்டும். கட்சி ஒருபோதும் கண்மூடித்தனமாக இருக்கமுடியாது” என்று அவர் கூறினார்.

திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த 89 வயதான ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் ரவீந்திரநாத் பட்டாச்சார்யாவை வேட்பாளராக பாஜக அறிவித்ததை அடுத்து, சிங்கூரில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை போராட்டங்கள் வெடித்தன. பட்டாச்சார்யாவை வேட்பாளர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

முன்னாள் அமைச்சரவை அமைச்சராக இருந்த பட்டாச்சார்யா, முதல்வர் மம்தா பானர்ஜியின் நம்பகமான உதவியாளராக இருந்தார். வேட்பாளராக தனது பெயர் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் பாஜகவில் சேர்ந்தார். 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்று கட்சி முடிவு செய்துள்ளதால், பட்டாச்சார்யாவுக்கு திரிணாமுல் காங்கிரஸில் சீட்டு ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சி தொண்டர்கள் அமைதி காக்குமாறும், பாஜக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், போராட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் உணர்ச்சிவசப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். மாறாக அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக நான் நம்பவில்லை. காவல்துறையினர் வேண்டுமென்றே ஒரு அவர்கள் மீது குற்றம்சாட்டினர். அமைதியாக இருக்குமாறு அவர்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்று பாஜக மேற்கு வங்க பிரிவின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஷாமிக் பட்டாச்சார்யா கூறியிருக்கிறார்.

பா.ஜ.க. “கட்சிக்குள் வெடிப்பை” எதிர்கொள்கிறது என்று திரிணாமுல் எம்.பி சவுகதா ராய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “நீண்டகாலமாக கட்சியில் இருப்பவர்களுக்கு பாஜக தலைமை வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமூல் காங்கிரஸிலிருந்து வெளியேறியவர்களுக்கு பாஜக சீட்டு வழங்கியிருக்கிறது. இப்போது அந்த கட்சி உட்கட்சி மோதலை எதிர்கொண்டு வருகிறது. இந்த மாநிலத்தில் அவர்களுக்கென்று சுயமாக எதுவுமே இல்லை. அவர்கள் தங்கள் கட்சியிலிருந்து ஒருவரை உருவாக்க தவறிவிட்டனர். மேலும் இதன் எதிரொலிதான் எதிர்தரப்பிலிருந்து வருபவர்களுக்கு கொடுக்கும் முன்னுரிமை” என்று தெரிவித்துள்ளார்.

– தகவல் உறுதுணை: The Print

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.