எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன், ஹெச்.ராஜா, எம்.ஆர்.காந்தி, குஷ்பு, அண்ணாமலை உள்ளிட்டோர் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் களம் காணும் தொகுதியில் போட்டி எப்படி இருக்கும் என்பது குறித்த பார்வை இதோ…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று தங்கள் எம்எல்ஏக்களை கோட்டைக்கு அனுப்பிவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறது பாஜக. அதன்படி 40 தொகுதிகளில் ஆரம்பித்து கடைசியாக 20 தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து வாங்கிவிட்டது. இதனால், பாஜக தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

அதன்படி திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்காடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோவிலூர், திட்டக்குடி, கோயம்புத்தூர் (தெற்கு), விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம்(தனி), மதுரை (வடக்கு) ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

இதில் 14 இடங்களில் திமுக பாஜகவை எதிர்த்து போட்டியிடுகிறது. மேலும் 5 இடங்களில் காங்கிரஸை எதிர்த்தும், ஓர் இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்தும் பாஜக போட்டியிடுகிறது.

image

இந்நிலையில், பாஜக தங்களின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார். ஏற்கெனவே அங்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸின் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

காரைக்குடியில் ஹெச்.ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கெனவே 2001-ம் ஆண்டு காரைக்குடி தொகுதியில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்றவர். மேலும், இவர் 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோற்றார். தற்போது திமுக கூட்டணியில் காரைக்குடி மீண்டும் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இத்தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸை சேர்ந்த கே.ஆர்.ராமசாமி உள்ளார். இந்தத் தொகுதியில் பாஜக, காங்கிரஸ் நேரடியாக மோதுவதால் பரபரப்பு நிலவுகிறது.

இப்போதும் நான் பெரியார் கொள்கைவாதிதான்!' - கமலாலயத்தில் குஷ்பு | Still i'm  a periyarist says, kushboo in Kamalalayam

அடுத்து, ஆயிரம் விளக்கு தொகுதியை நடிகை குஷ்புவுக்கு வழங்கியுள்ளது பாஜக. ஏற்கெனவே சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி குஷ்புவுக்கு ஒதுக்கப்படலாம் என பேசப்பட்டு வந்தது. காரணம் அங்கு குஷ்பு களத்தில் இறங்கி வேலை பார்த்து வந்தார். ஆனால், அத்தொகுதியை பாமகவுக்கு அதிமுக வழங்கியது. இதனால் குஷ்புவின் செயல் வீண் என்றும் பேசப்பட்டது. இதையடுத்து தற்போது ஆயிரம் விளக்கு தொகுதி குஷ்புவுக்கு வழங்கப்பட்டுள்ளது. குஷ்புவை எதிர்த்து திமுகவை சேர்ந்த எழிலன் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து குஷ்பு கூறுகையில், “பாஜக வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். எனக்கு சீட் கொடுப்பார்கள் என நினைக்கவில்லை. பிரசாரம் ஆரம்பித்ததும் என்னென்ன செய்ய போகிறேன் என்று சொல்கிறேன். எழிலனை எதிர்த்து போட்டியிடுவது கண்டிப்பாக சவாலாக இருக்கும். சவால் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் கண்டிப்பாக எனக்கு ஆதரவு தருவார்கள்” எனத் தெரிவித்தார்.

நாகர்கோவில் தொகுதியில் காந்தி போட்டியிடுகிறார். இங்கு திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் வேட்பாளராக களமிறங்குகிறார். அரவக்குறிச்சியில் அண்ணாமலைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இளங்கோவன் இங்கு திமுக சார்பில் போட்டியிடுகிறார்.

பாஜகவில் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மீது வழக்கு பதிவு || case  filed on Former IPS officer Annamalai including 5

திருவண்ணாமலையில் திமுக சார்பில் எ.வ.வேலு களத்தில் இருக்கிறார். அங்கு தணிகை வேல் என்பவரை பாஜக களமிறக்கியுள்ளது. குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போதைய எம்.எல்.ஏ.வாக காங்கிரஸின் பிரின்ஸ் இருக்கிறார். இங்கு பாஜக சார்பில் ரமேஷ் என்பவரை பாஜக களமிறக்கியுள்ளது.

மொடக்குறிச்சியை பொறுத்தவரை சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அங்கு பாஜக சார்பில், சி.கே.சரஸ்வதி என்பவர் களமிறங்குகிறார். துரைமுகம் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த சேகர் பாபுவை எதிர்த்து வினோஜ் பி செல்வம் என்பவர் களமிறங்குகிறார். திருக்கோவிலூர் தொகுதியில் பொன்முடி களத்தில் இருக்கிறார். அவரை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ கலிவர்தனை பாஜக களமிறக்கியுள்ளது.

மதுரை வடக்கு தொகுதியில் மருத்துவர் சரவணனுக்கு பாஜக சீட் கொடுத்துள்ளது. இன்று காலைதான் அவர் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்தார். ஆனால், அவருக்கு உடனடியாக சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மருத்துவர் சரவணன் “ஒரு மருத்துவர். சமூக சேவகன். ஏற்கெனவே 2 இடைத்தேர்தல்களை சந்தித்திருக்கிறேன். தலைமையை குறை சொல்லவில்லை. மாவட்டச் செயலாளர்கள் எனக்கு சீட் கொடுக்கக்கூடாது என வேலை பார்த்தனர். பிரதமர் மோடியின் செயலால் ஈர்க்கப்பட்டே கட்சியில் சேர்ந்தேன். எந்த நிபந்தனையும் இல்லாமல் சேர்ந்தேன். தலைமையாய் பார்த்து சீட் கொடுத்துள்ளது” என்றார்.

image

ஊட்டி தொகுதிக்கு இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது அங்கே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கணேஷ் என்பவர் எம்.எல்.ஏவாக உள்ளார். மிகவும் சவாலான தொகுதியாக இருப்பதால் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமச்சந்திரன் என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட தகுதியான வேட்பாளரை தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. அதனால் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. விளவங்கோடு தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ விஜயதாரணி இருக்கிறார். அங்கும் பாஜக களம் காண்கிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிவிக்காததால் பாஜவும் இன்னும் அறிவிக்கவில்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.