திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விவகாரத்தில் கட்சிக்குள் பல்வேறு குழுக்கள் பிரிந்து, கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மற்ற கட்சிகள் எல்லாம் வேட்பாளர் பெயரை அறிவித்த பிறகுதான் அது தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக போராடி வருகின்றனர். சில தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பாகவும் அந்தந்த கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் போராடி வருகின்றனர். ஆனால், வேட்பாளர் பெயரை அறிவிப்பதற்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

image

சத்தியமூர்த்தி பவனில் மட்டுமே மூன்று கோஷ்டியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் வேட்பாளர் தேர்வுக்கு எதிராக இரண்டும், ஆதரவாக ஒன்றும் நடைபெற்று வருகிறது. அதில் ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

கட்சியிலிருந்து விலகி மீண்டும் இணைந்துள்ளவர்களுக்கு சீட் கொடுக்க கூடாது என ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினர் விஷ்ணு பிரசாத் போராடி வருகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு அணியினர் போராடி வருகின்றனர்.

இதற்கிடையில் தற்போதைய எம்.எல்.ஏ ஒருவருக்கு சீட் கொடுக்க கூடாது எனவும் சொல்லி சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது தவிர இன்னும் பிற இடங்களிலும் சட்டப்பேரவை வேட்பாளர் தேர்வு தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்!

மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதியானது திமுக கூட்டணியில் காங்கிரஸ் வசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்ந நிலையில் “ஓரே குடும்பத்தில் இத்தனை பதவியா” என குறிப்பிட்டு எம்.பி மாணிக்கம் தாக்கூரின் உறவினரான (மாமனார்) வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆலாத்தூர் ரவிச்சந்திரனுக்கு சீட் வழங்க சிபாரிசு நடைபெறுவதை எதிர்த்தும், மேலூரின் மண்ணின் மைந்தர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறி, மேலூர் சட்டமன்ற தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ் எனும் பெயரில் மேலூர் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டி அடித்து ஒட்டப்பட்டுள்ளது.

image

மேலூர் தொகுதிக்கு இன்னும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், சுவரொட்டி அடித்து ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ப.சிதம்பரம் வேதனை:

காங்கிரஸ் கட்சி புதுவயல் பூத் கமிட்டி ஊழியர் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், “காங்கிரஸ் தொண்டர்கள் சரியில்லை என்றால் தோழமை கட்சிகளை நம்பியே தேர்தலை சந்திக்க வேண்டும். கட்சி என்றால் கடமை உணர்வோடு செயல்பட வேண்டும். இல்லை என்றால் அடுத்த முறை 25 சீட் கூட கிடைக்காது. காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் ஊழியர்கள் ஒத்துழைப்பு இல்லை. தொகுதியை திருப்பி கொடுத்து விடலாமா?” என்றார். கூட்டத்திற்கு அதிக பொறுப்பாளர்கள் வராததால் ப.சிதம்பரம் வேதனை அடைந்து இதனை தெரிவித்தார்.

ஜோதிமணி எம்.பி. ட்வீட்:

“காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.


நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும்,வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை” என தெரிவித்துள்ளார் எம். பி ஜோதிமணி. 

எம். பி மாணிக்கம் தாகூர் சாடல்:

“அன்னை சோனியாகாந்தி அவர்கள் தலைமையில் நடக்கும் மத்திய தேர்தல் குழு வில் எடுக்கும் முடிவு ஒவ்வொரு உண்மையான காங்கிர்ஸ் தொண்டனுக்கும் நியாமான முடிவாககிடைக்கும் ஆன சிலர் விளம்பரதிற்காக காங்கிரஸ் இயக்கதிற்கு மிக பெரிய இழிவை ஏற்படுத்தி எதிரிகளுக்கு உதவும் துரோகிகளை கண்டுகொள்ளுங்கள்” என இந்த போராட்டம் தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். 


காங்கிரஸ் உட்கட்சி பூசல் குறித்து பத்திரிகையாளர் கருத்து!

“தமிழக பிரதேச காங்கிரஸ் கட்சியில் இது மாதிரியான கோஷ்டி பூசல் இயற்கை தான். அதில் எதுவும் புதிதில்லை. அங்கு கோஷ்டிகளுக்கும் பஞ்சமில்லை, பூசல்களுக்கும் பஞ்சமில்லை. தேர்தலில் சீட் கொடுக்க பணம் பெற்றுள்ளதாக சொல்லப்படுவது புதிது. முக்கியமாக இந்த விஷயம் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியா தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்ல வாய்ப்புகள் உள்ளன.

இந்த கோஷ்டி சண்டையால்தான் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு அதிகளவில் சீட் கொடுக்க தயங்க காரணம். இது தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பில்லை. இது உட்கட்சி பூசல் மட்டுமே. தேர்தலில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகள் பதிவாகும். அப்படித்தான் கடந்த தேர்தல்களிலும் வாக்குகள் காங்கிரஸுக்கு பதிவாகியுள்ளன” என்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷியாம்.

இதை எல்லாம் சரிகட்டிதான் காங்கிரஸ் இந்த தேர்தலில் தனக்கான இடத்தை நிலைநிறுத்தும் சூழலில் இருக்கிறது.

– எல்லுச்சாமி கார்த்திக் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.