பெண்கள், விவசாயிகள், மாணவர்கள், இந்துக்கள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பையும் குறிவைத்து திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதுகுறித்த ஒரு பார்வை…

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்தத் தேர்தல் அறிக்கையில், முக்கியமாக பெண்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை திமுக வெளியிடப்பட்டிருக்கிறது. குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை, கொரோனா நிவாரணம் ரூ.4 ஆயிரம், கேஸ் மானியம் 100 ரூபாய், மகப்பேறு உதவித்தொகை ரூ.24 ஆயிரம், பெண்களுக்கு இடஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும், பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின், பெண்களுக்கு 12 மாதம் பேறுகால விடுப்பு, ரேஷன் கடைகளில் கூடுதல் சர்க்கரை, உளுத்தம் பருப்பு, திருமண உதவித்தொகை 60 ஆயிரமாக உயர்த்தப்படும் என்பது போன்ற பல்வேறு பெண்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் பெண்கள் வாக்குகள்தான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்பதால், அவர்களை குறிவைத்து இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கு அடுத்தப்படியாக விவசாயிகளை கவர பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றிருக்கிறது. மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் இலவச மும்முனை இணைப்பு வழங்கப்படும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்ற தீர்மானம் கொண்டு வருவோம், நெல்லுக்கான ஆதார விலை ரூ.2500 ஆக உயர்த்துவோம், கரும்புக்கு 4000 ஆதார விலையாகும், அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, உழவர் சந்தையை மேம்படுத்துவோம், இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த புதிய பிரிவு உருவாக்கப்படும், இயற்கைவழி விவசாயிகளுக்கும் இடுபொருள் மானியம் வழங்கப்படும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்பட்டு தினக்கூலி 300 ரூபாயாக உயர்த்தப்படும் என்பன போன்ற பல்வேறு விவசாய, வேளாண் துறை திட்டங்களும் வெளியாகியிருக்கிறது, இது விவசாயிகள், வேளாண் துறையினரின் வாக்குகளை கவரும் என திமுக நம்புகிறது.

image

அடுத்ததாக, பாஜக மற்றும் அதிமுக பக்கம் சாயும் இந்து வாக்குகளை தக்கவைக்கும் வகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க நடவடிக்கை, ஆலயங்கள் குடமுழுக்குக்கு ரூ.1000 கோடி நிதி, அர்ச்சகர்கள்-கோவில் பணியாளர்களின் ஊதியம் – ஓய்வூதியம் உயர்த்தப்படும், இந்துக்களின் புனித தலங்களுக்கு செல்ல ஒரு லட்சம் இந்துக்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி, வடலூரில் சன்மார்க்க சர்வதே மையம் அமைக்கப்படும், தமிழில் அர்ச்சனை  என்பது போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

தமிழுணர்வாளர்களின் வாக்குகளை கவர திருக்குறளை தேசிய நூலாக்குவோம், தமிழை ஆட்சிமொழியாக்குவோம், தமிழ்வரி வடிவங்களை காக்க புதிய சட்டம், 8 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம், ஈழத் தமிழர் அகதிகளுக்கு குடியுரிமை, எழுவர் விடுதலை, வெளிநாடுவாழ் தமிழர் நலனுக்கு புதிய துறை அமைக்கப்படும் என்பது போன்ற தமிழ் மக்களின் கவனம் பெறும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கச்சத்தீவை மீட்போம், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவோம், கல்விக்கடன் ரத்து என்பது போன்ற மத்திய அரசை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளும் வெளியாகியிருக்கிறது.

பெட்ரோல்-டீசல், பால்விலை குறைப்பு, மின் கட்டணத்தை மாதந்தோறும் செலுத்தும் வசதி, தமிழகத்தில் 75% தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு, கலைஞர் உணவகம், காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை, பெரிய மாநகராட்சிகளில் மெட்ரோ ரயில் சேவை என்பன போன்ற பல்வேறு திட்டங்கள் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளன. மேலும் மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர் நலன், தொழில்துறையை மீட்டெடுக்க 15 ஆயிரம் கோடி நிதி, கனிம வளங்களை அரசே விற்பனை செய்ய அமைச்சகம், மின் திட்டங்கள் உருவாக்கம் என்பன போன்ற அனைத்து துறைகளுக்குமான 505 அறிவிப்புகள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறது.  

டிவி, மின்விசிறி, பிரிட்ஜ், செல்போன் போன்ற இலவச பொருட்கள் வழங்குவோம் என்று எந்த அறிவிப்பும் இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் இலவசத்துக்கு எதிரான மனநிலை உருவாகியிருப்பதால் இதனை திமுக தவிர்த்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், குடும்பத் தலைவிகள், விவசாயிகள், பெண்கள், தொழில்துறையினருக்கான பல்வேறு நலத் திட்டங்கள், மானியங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டிருகிறது.

திமுக தேர்தல் வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள்:

  • அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கப்படும்
  • ஆவின்பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்
  • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும்
  • சிலிண்டருக்கு மானியமாக ரூ.100 வழங்கப்படும்
  • வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக அதிகரிக்கப்படும்
  • பெண்களுக்கு பேறுகால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும்
  • இந்து கோயில்களின் குடமுழுக்குக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ. 200 கோடி ஒதுக்கப்படும்
  • சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், அரசு ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும்
  • சிறுகுறு விவசாயிகளுக்கு மின் மோட்டார் வாங்க ரூ.10,000 மானியமாக வழங்கப்படும்
  • தமிழக சட்டமன்றத்தில் சட்டமேலவை மீண்டும் கொண்டுவரப்படும்
  • 500 இடங்களில் கலைஞர் உணவகம் கொண்டுவரப்படும்
  • 30 வயதுக்குட்பட்ட மாணவர்களின் கல்விக்கடன்களை அரசே ஏற்று திருப்பிச் செலுத்தும்
  • தமிழகத்தில் உள்ள தொழில்நிறுவனங்களில் 75% தமிழருக்கு வேலை வழங்க சட்டம் இயற்றப்படும்
  • போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்
  • வேளாண்துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்
  • இந்து கோயில்களுக்கு சுற்றுலா செல்ல ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும்
  • திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும்
  • வேலூர், ஒசூர், கரூர், ராமநாதபுரத்தில் புதிய விமானநிலையங்கள் அமைக்கப்படும்
  • பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும்
  • கூட்டுறவு வங்கியில் 5 பவுன் உட்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்
  • மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்படும்
  • 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்
  • அரசு உள்ளுர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்துதரப்படும்

– வீரமணி சுந்தரசோழன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.