கடந்த சில நாட்களாகவே உள்ளூர் செய்தி தொடங்கி தேசிய செய்தி ஊடகங்கள் வரை வைரல் டாக்காக இருந்தது புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் கட்சி(NRCongress). வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அந்த கட்சி யாருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது என்பதற்காக தான் இந்த விவாதம். ஒருவழியாக பாஜக மற்றும் அதிமுகவுடன் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது என். ஆர் காங்கிரஸ். 

தேசிய கட்சியான பாஜக, மாநில கட்சியான என்.ஆர் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டியது ரங்கசாமி என்ற தனி ஒரு நபரின் ஆளுமைக்காக தான். புதுச்சேரி முன்னாள் முதல்வரான ரங்கசாமி புதுச்சேரி மக்களிடையே அதிகம் பரிச்சயமான அரசியல் தலைவர்களில் ஒருவர். அதற்கு காரணம் அவரது சிம்பிளிசிட்டி தான். 

image

அந்த எளிமையை மூலதனமாக வைத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அவர் 2011 பிப்ரவரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை நிறுவினார். கட்சியை தொடங்கிய 48 நாட்களுக்குள் தேர்தலை சந்தித்து, ஆட்சியையும் பிடித்தவர். 

யார் இந்த ரங்கசாமி?

கடந்த 1950, ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிறந்தவர் ரங்கசாமி. சொந்த ஊர் புதுச்சேரியில் உள்ள திலாசுப்பேட்டை. வணிகவியல் மற்றும் சட்டப்படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர். காமராஜரை பின்பற்றுபவர். நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகர். இளம் வயதில் காமராஜருக்கு மன்றமும் நிறுவியவர். தொடர்ந்து புதுச்சேரி முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாளுக்கு உதவியாளராக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தவர். 

ஒரு கட்டத்தில் அவரையே எதிர்த்து நிற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். 1990 தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 982 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி. அதற்கடுத்து நடைபெற்ற 1991, 1996, 2001, 2006 வரை தட்டாஞ்சாவடி தொகுதியின் நிரந்தர எம்.எல்.ஏவாக ரங்கசாமி வெற்றி பெற்றார். அந்த காலகட்டத்தில் 1991இல் அமைச்சராகவும், 2001 மற்றும் 2006 ஆட்சி அமைத்த போது முதல்வராக பதவி வகித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பத்தினால் பதவியை 2008 வாக்கில் துறந்தார்.

அதன்பிறகு 2011 தேர்தலை தன்னிச்சையாக புதிய கட்சியான என். ஆர் காங்கிரஸ் கட்சியை நிறுவி தேர்தலை எதிர்கொண்டு மூன்றாவது முறையாக முதல்வரானார். 2011 மற்றும் 2016 தேர்தலில் இந்திரா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். 2011 தேர்தலில் கதிர்காமம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். பின்னர் அதை ராஜினாமா செய்தார். 2011 முதல் 2016 வரை புதுச்சேரி முதல்வராக இருந்தவர். 2016 – 2021 காலகட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர். 

அவரது ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு காலை நேரத்தில் ரொட்டி பால் வழங்கும் திட்டம், மூத்த குடிமக்களுக்கு உதவித்தொகை உயர்வு, புதுச்சேரியின் முக்கிய ஆலைகளை இயக்கியது, விவசாயிகளுக்காக திட்டங்களை அமல்படுத்தியது, பேரிடர் கால நிவாரணங்களை வழங்கியமைக்காக பரவலாக புதுச்சேரியில் அறியப்படுபவர். “அதிகம் பேசமாட்டார். இவரிடம் ஆக்ஷன் தான் பேசும்” என்கின்றனர் உள்ளூர் மக்கள்.  

image

இவரது எளிமையை சமயங்களில் முன்னாள் தமிழக அரசியல் கட்சி தலைவர்களுடன் சாப்பிடுவதுண்டு. ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்டவர். டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் பருகுவார். மக்கள் எளிதில் நேரடியாக சந்தித்து முறையிடும் வாய்ப்பையும் கொடுப்பார். 

அவரது பிறந்த நாள் என்றால் புதுச்சேரி நகரம் முழுவதும் பேனர்களுக்கு பஞ்சமிருக்காது. புதுச்சேரியில் மக்கள் கட்சி, கொள்கை, சின்னம் என அனைத்தையும் கடந்து பரிச்சயமான முகத்தை பார்த்து தேர்தலில் வாக்களிப்பது வழக்கம். அதற்கு ஒரு உதாரணம் ரங்கசாமி. 

இருப்பினும் இவர் மீது சில எதிர்மறையான விமரசனங்களும் உண்டு. அனைத்தையும் தனது தொகுதிக்குள் அமைத்திருப்பது தான் அந்த விமர்சனம். அரசு பொது மருத்துவமனை, அரசு மகப்பேறு மருத்துவமனை, ஆட்சியர் அலுவலகம் மாதிரியானவை ரங்கசாமியின் கட்டுப்பாட்டின் கீழுள்ள தொகுதியில் தான் அமைந்துள்ளன. 

image

அந்த விமரசங்களுக்கெல்லாம் பதில் கொடுத்து ரங்கசாமி மீண்டும் ஆட்சியை பிடிக்கிறாரா என்பது எதிர்வரும் தேர்தல் முடிவுகளை பொறுத்தே உள்ளது. 

-எல்லுச்சாமி கார்த்திக்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.