எந்தத் தேர்தல்களிலும் இல்லாத வகையில் கூட்டணிக் கட்சிகளை வேறு விதமாகக் கையாண்டிருக்கிறார்கள் ஸ்டாலினும், எடப்பாடியும். இன்னமும் கூட்டணி தொகுதிப் பங்கீடு முழுமையாக முடிவடையாவிட்டாலும், தற்போது வரை இரண்டு கட்சிகளில் யார் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

தி.மு.க.

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணிக்குள் வந்தவர்கள் இந்தத் தேர்தலிலும் தொடர்கிறார்கள். பழைய கூட்டணிதானே? 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாரி வழங்கிய ஸ்டாலின் இம்முறை ஏன் அலைக்கழிக்கிறார் என்று தோன்றலாம். 2011 சட்டமன்றத் தேர்தலில் 63 தொகுதிகளையும், 2016 சட்டமன்றத் தேர்தலில் 41 தொகுதிகளையும் பல்க்காக வாங்கிய காங்கிரஸ் கட்சியைக் கூட இம்முறை அழவைத்துவிட்டார் ஸ்டாலின்.

2011 சட்டமன்றத் தேர்தலின்போது, அண்ணா அறிவாலயத்தில் ஒருபக்கம் 2ஜி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ ரெயிடு நடத்திக்கொண்டே, மறுபுறம் கூட்டணி தொகுதிப் பங்கீட்டையும் பேசியது காங்கிரஸ். கழுத்தில் கத்தி வைத்தது போன்ற சூழலால், கருணாநிதி 63 தொகுதிகளை அள்ளிக்கொடுத்தார். ஆனால், ஜெயித்தது என்னவோ 5 தொகுதிகளில்தான்.

அதன்பிறகு 2014 நாளாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே தி.மு.க மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியது. 2014 நாடாளுமன்றத் தேர்தலை தமிழகத்தில் இரு கட்சிகளும் தனித்தே சந்தித்தன. பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கூட்டணி அமைத்தனர். அப்போதும் கருணாநிதியை கரெக்ட் செய்து 41 தொகுதிகளை பெற்றது காங்கிரஸ். அப்போது ஜெயித்ததோ வெறும் எட்டில்தான்! 10 தொகுதிகளைக் குறைத்துப் பெற்றிருந்தால் தி.மு.க ஆட்சிக்கு வந்திருக்கும் என்று உடன்பிறப்புகள் புலம்பினார்கள்.

குலாம் நபி ஆசாத் – கருணாநிதி சந்திப்பு

2011 மற்றும் 2016 என இரண்டு முறையும் காங்கிரஸுக்கு வாரி வழங்கியதில் இருந்துதான் அதிக தொகுதிகளை ஜெயித்தது அ.தி.மு.க. தற்போது காங்கிரஸை ஸ்டாலின் அலைக்கழிப்பதற்குக் காரணம் இது தான். சிறிய கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, வி.சி.க, ம.தி.மு.க, என அனைத்தையும் முடித்துவிட்டுதான் காங்கிரஸுக்கு 25 தொகுதிகளை வழங்கியது தி.மு.க.

12 தொகுதிகளில் தொடங்கி, 18 முதல் 20-ல் முடிப்பதுதான் தி.மு.க-வின் திட்டம். ரொம்பவே கதறவிட்டதில் அழுதேவிட்டார் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி. இதேநேரம் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு 20 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டது. பா.ஜ.க-வைக் காட்டி, ‘நாட்டையே ஆளும் கட்சிக்கே 20தான் கொடுத்திருக்கிறார்கள். நான்கு மாநிலங்களில் கூட ஆட்சியில் இல்லாத காங்கிரஸுக்கு மட்டும் 40 கொடுக்க வேண்டுமா?’ என கேட்டுவிட்டு, இறுதியாக 25 தொகுதிகளையும், குமரி எம்.பி. தொகுதியையும் கொடுத்து ஃபைனல் செய்துவிட்டது தி.மு.க.

கே.எஸ். அழகிரி

கடந்தாண்டு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ-வில் நடந்த முஸ்லிம் மாநாட்டில், இந்தமுறை முஸ்லிம்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கித் தர வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஸ்டாலின் முன்னிலையில் வலியுறுத்தினார். சென்றமுறை 5 தொகுதிகள் முஸ்லிம் லீக்குக்கும், 5 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டன. கடைசியில் ஒரு தொகுதியைத் திருப்பிக் கொடுத்துவிட்டது ம.ம.க. அதைவிட அதிகம் கேட்டபோதிலும், இந்தமுறை மொத்தமாகவே இரு கட்சிகளுக்கும் சேர்த்து 5 தொகுதிகளைத்தான் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். அதிலும் தனிச்சின்னம் இல்லாத ம.ம.க-வை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கட்டளையிட்டுள்ளார்கள்.

வி.சி.க-வும், ம.தி.மு.க-வும், இந்திய கம்யூனிஸ்டும் கூட போராடித்தான் தலா 6 தொகுதிகளைப் பெற்றுள்ளன. முதலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம், தனிச்சின்னம்தான் என வீராப்பாக மறுத்த வைகோ, பின்னர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதித்துவிட்டார்.

வைகோ – ஸ்டாலின்

’சி.பி.ஐ-யைவிட நாங்கள் பெரிய கட்சி, கேரளாவில் ஆட்சியில் இருக்கிறோம், மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம், மேற்கு வங்கத்திலும் மம்தாவை வீழ்த்துவோம்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைக் கூட அதே 6 தொகுதிகளுக்கு ஃபைனல் செய்துவிட்டது தி.மு.க.

வி.சி.க, ம.தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும், முஸ்லிம் லீகுக்கு மூன்றும், ம.ம.க-வுக்கு இரண்டும் என மொத்தம் 54 தொகுதிகளைப் பிரித்துக்கொடுத்துவிட்டார் ஸ்டாலின். ம.தி.மு.க, ம.ம.க போட்டியிடும் 6+2 மொத்தம் 8 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பதால், இந்த எட்டும் தி.மு.க-வின் எண்ணிக்கையாகத்தான் பார்க்கப்படும். சிட்டிங் எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சிப் பொதுச்செயாலாளர் தமீமுன் அன்சாரி என இருவரும் தி.மு.க-வுக்கு ஆதரவுக் கடிதம் அளித்துவிட்டன. இருவரும் இன்றுவரை இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்றவர்கள் என்பதால், இருவரையும் கூட்டணிக்குள் கொண்டு வர ஸ்டாலின் யோசிக்கிறாராம்.

ஸ்டாலின்

இதற்கான காரணத்தைத் தேடுகிறபோது, பழைய விஷயங்களை மறக்காதவர் ஸ்டாலின் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில், 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணியில், இப்போது தி.மு.க.வுடன் தான் கூட்டணியில் இருக்கும், வி.சி.க, ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குகளைப் பிரித்த காரணத்தால் பல இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் தோற்றனர். அதேநேரம் காங்கிரஸும் 41 தொகுதிகளில் போட்டியிட்டதால், அதில் 33 தொகுதிகளை அ.தி.மு.க கைபற்றியது. இந்த அரசியல் துரோகம்தான் ஸ்டாலின் மனதில் இன்றளவும் நிழலாடுகின்றன. சட்டசபைத் தேர்தலில் ‘வச்சு செய்யலாம்’ என்று எண்ணிதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் எதிர்பாராத வகையில் அள்ளிக்கொடுத்தார் ஸ்டாலின். அப்போதே உஷாராகியிருக்க வேண்டும் கூட்டணிக் கட்சிகள்!

அ.தி.மு.க.

2016 டிசம்பர் 5-ம் தேதி முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததில் இருந்தே பா.ஜ.க-வின் ஆட்டம் தமிழகத்தில் தொடங்கிவிட்டது. முதலில் ஓ.பி.எஸ்-ஸைக் கையில் எடுத்து ட்ரையல் பார்த்தவர்கள், அவர் செட்டாகாததால் இணைத்து மொத்தமாக கையில் எடுத்துக்கொண்டது பா.ஜ.க. என்னதான் கட்சியை கன்ட்ரோலில் பா.ஜ.க எடுத்து வைத்திருந்தாலும், தொகுதிப் பங்கீடு விஷயத்தில் எகிறியடிக்க முடியவில்லை.

லோக்கலில் பேசி முடித்துக்கொள்ள வேண்டிய பிரச்னை எதையும் டெல்லிக்கு கொண்டு வராதீர்கள் என மத்திய பா.ஜ.க சொல்லிவிட்டதால், தமிழக பா.ஜ.க-வால் ஓர் அளவுக்கு மேல் போகமுடியவில்லை. சசிகலா விவகாரம், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீதான வழக்கு விவகாரம் உள்பட மேஜரான பிரச்னைகளை மட்டுமே டெல்லி கையாள்வதால், தமிழக பா.ஜ.க-வினரை எடப்பாடி ஏறியடிக்கிறார்.

பா.ம.க-வுக்கு 23 இடங்கள்

நாட்டையே ஆளும் கட்சிக்கு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 5 தொகுதிகளை மட்டுமே கொடுத்தார். வரக்கூடியத் தேர்தலிலும் 20 சட்டமன்றத் தொகுதிகளுடன் நிறுத்திக்கொண்டார். காங்கிரஸைப் போல முன்னர் தமிழகத்தில் ஆட்சி செய்ததும் இல்லை, செல்வாக்கும் இல்லை என்பதுதான் பா.ஜ.க-வின் பலவீனமாக குறிப்பிட்டே சீட் பேரத்தை துவக்கினார் எடப்பாடி. 2019 எம்.பி. தேர்தலின்போதும், விக்கிரவாண்டி, நான்குநேரி இடைத்தேர்தலின்போதும் பா.ஜ.க-வை பிரச்சாரத்துக்கே வரக்கூடாது என்றெல்லாம் உத்தரவிட்டது அ.தி.மு.க. எனினும் டெல்லி வரை மேட்டர் சீரியஸாகிவிடக்கூடாது என்பதால், 12 கொடுப்பதாக இருந்த எடப்பாடி, இறுதியில் 20-க்கு ஒப்புக்கொண்டார். வெறும் 2 சதவிகிதம் உள்ள பா.ஜ.க-வுக்கு 20 தொகுதிகள் என்பதே அதிகம்தான் என்கிறார்கள் ர.ர.க்கள்.

அ.தி.மு.க – பா.ஜ.க பேச்சுவார்த்தை

எடப்பாடி தொகுதியில் வன்னியர்கள் அதிகம் இருப்பதும், வடக்கில் தி.மு.க-வை வீழ்த்தவும் பா.ம.கவை சமாதானப்படுத்தி 10.5 இடஒதுக்கீடும் வழங்கி, 23 தொகுதிகளிலும் சுருக்கிவிட்டார் எடப்பாடி. மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருக்கும் தே.மு.தி.கவை இன்னமும் கதறவிட்டுக்கொண்டிருக்கிறார்.

இப்படி இரு கட்சிகளையும் தராசில் வைத்துப்பார்த்தால், காங்கிரஸ் விவகாரத்தை தி.மு.க சிறப்பாக கையாண்டிருக்கிறது. பா.ஜ.க விவகாரத்தில் கொஞ்சம் இறங்கிச் சென்றாலும், பா.ம.கவைக் கையாண்டதில் எடப்பாடியார் நின்றுவிட்டார். இவர்களின் செயல்களுக்கு உண்மையான விடை மே 2-ம் தேதி தெரிந்துவிடும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.