இந்த முறை டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி. இந்தக் கட்சிக்கான வெற்றி வாய்ப்புகள் எப்படியிருக்கும் என்பது பற்றிய அலசல்…

அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 2016-ஆம் ஆண்டு தேர்தலிலேயே வாணியம்பாடி தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு, 10,117 வாக்குகளை வாங்கி நான்காம் இடத்தை பிடித்தது. அசாதுதீன் ஓவைசி ஹைதராபாத் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாடாளுமன்றத்தில் இவரின் அதிரடியான பேச்சுக்கள் இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அண்மையில் நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகளில் வென்றது ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி. அந்தத் தேர்தலில் ஓவைசி கட்சி தனித்து போட்டியிட்டதால் சிறுபான்மையினர் வாக்குகள் சிதறி ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைய காரணமாகியது என்று பரவலாக பேசப்பட்டது. இதனால், இவர் பாஜகவின் பி டீம் என்றும் இவரின் கட்சி பற்றி பேசப்படுகிறது.

ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தெலுங்கானாவின் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டிருந்தாலும், பிற மாநிலங்களிலும் இதன் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. பீகார் மட்டுமின்றி மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசத்திலும் இந்தக் கட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

image

தற்போது மேற்கு வங்கம் மற்றும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் களம் காண்கிறார் ஓவைசி. இவருக்கு பட்டம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. தமிழகத்தில் அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள இக்கட்சிக்கு வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடவுள்ளனர்.

அனைத்து மாநில தேர்தல்களிலும் களம் காண தொடங்கியிருக்கும் ஓவைசியின் கட்சி, சிறுபான்மையினர் அதிகம் உள்ள தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. இதனால் தமிழகத்தில் இஸ்லாமிய மக்களில் ஒரு பகுதியினர் ஓவைசி கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்பு அதிகம். தற்போது திமுக கூட்டணியில் ஐயுஎம்எல் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி போன்றவை இருப்பதால், ஓவைசி கட்சி போட்டியிடும் தொகுதிகளில் சிறுபான்மையினர் வாக்குகள் சிதறும் என தெரிகிறது. இந்த முறை அக்கட்சி முக்கிய தொகுதிகளை கைப்பற்றாவிட்டாலும், திமுகவுக்கு செல்லும் சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்கும் கட்சியாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இதுகுறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் பா.கிருஷ்ணன் கூறும்போது, “பீகார் தேர்தலில் தேஜஸ்வியின் வெற்றி வாய்ப்பை பாதித்த முக்கிய காரணியாக ஓவைசி இருந்தார். அதே பாணியில்தான் அவர் தமிழகத்திலும் களம் கண்டுள்ளார். இந்தச் சூழலில் ஓவைசி கட்சி, தமிழகத்தில் அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. ஓவைசியின் கட்சியால் ஓரளவு வாக்குகள் பிரியும் என்று நினைக்கிறேன். ஆனால், அது பெரிய அளவில் தாக்கத்தை உருவாக்காது என்றே கருதுகிறேன்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.