வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து, பசும்பொன் மக்கள் கழகம் என்ற கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அக்கட்சியின் நிறுவனத் தலைவரான எஸ்.இசக்கிமுத்து தாக்கல் செய்துள்ள மனுவில், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது, வகுப்புவாரி இடஒதுக்கீடு மட்டுமே இருக்க வேண்டும் என்றும், சாதிவாரி இடஒதுக்கீடு இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளதை மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் 2 கோடி மக்கள் தொகை கொண்ட தேவர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்காமல், அதே அளவு மக்கள் தொகை கொண்ட வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

image

அம்பாசங்கர் ஆணையம் அளித்த தகவலின் அடிப்படையில் 8.5 சதவீதம் வன்னியர்கள் இருப்பதாக கூறியதே தவறானது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தொகை அளவை மீறும் வகையில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருப்பது சட்டவிரோதம் என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள மற்ற சாதியினரிடையே பாகுபாடு காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ள புத்தகத்திலேயே அரசு பணியில் ஒரு லட்சம் பேர் மற்றும் அமைப்பு சார்ந்த பணிகளில் ஒரு லட்சம் பேர் என 2 லட்சம் வன்னியர்கள் இருப்பதாக எழுதியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளளார். இது மொத்த ஊழியர்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமானதாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் விசாரணை வரம்பு திருத்தி அமைக்கப்பட்ட பிறகு, தமிழக அரசிற்கு எந்த பரிந்துரைகளும் வழங்கப்படாத நிலையில், வன்னியர்களுக்கு மட்டும் தற்போது 10.5 சதவீத உள் ஒதுக்கீடு என்பது சட்டத்தின்படி அனுமதிக்க தக்கதல்ல என்று தெரிவித்துள்ளார்.

எனவே இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.