அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்

தொல்.திருமாவளவனோடு புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நடத்திய சிறப்பு நேர்காணலை பார்க்கலாம்.

image

கேள்வி: 2001ல் தொடங்கி 8 இடங்கள், 9 இடங்கள், 10 இடங்கள் அதன்பிறகு மக்கள் நல கூட்டணியில் 25 இடங்களை வாங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இப்போது 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறதே?

பதில்: போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தாலும் கூட, இந்த முறை நாங்கள் வெற்றிவாய்ப்புள்ள கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறோம். 2001ல் திமுகவுடன் கூட்டணி அமைத்தோம் அது வெற்றிக் கூட்டணி அல்ல. அதேபோல 2006ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம் அதுவும் வெற்றிக் கூட்டணி அல்ல. மீண்டும் 2011ல் திமுக கூட்டணியில் இடம்பெற்றோம். அந்த கூட்டணியும் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது.

2016ல் மக்கள் நலக் கூட்டணி என்ற மூன்றாவது அணியை உருவாக்கினோம். தமிழகத்தி;ல் எப்போதும் மூன்றவது அணி வெற்றிபெற்றதில்லை. கடந்த 4 சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களிலும் வெற்றிவாய்ப்பு மிகக் குறைவாக உள்ள அணியில் இடம்பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் இந்த முறை திமுக தலைமையிலான வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள பெரிய கூட்டணியில் 6 தொகுதிகளை பெற்றிருப்பது ஆறுதல்தான்.

கேள்வி: நீங்கள் ஒவ்வொரு முறையும் தேர்தலை சந்திக்கும் போது வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் தானே அந்த கூட்டணியில் இடம்பெற்றிருப்பீர்கள்?

பதில்: வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தாலும் எந்த அளவுக்கு வெற்றிவாய்ப்பு இருக்கும் என்பது கூட்டணிக்கு தலைமைதாங்கும் கட்சிக்கே தெரியும். இந்த முறை நமது கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு குறைவாக இருக்கும். அதுபோன்ற கூட்டணியில்தான் நாங்கள் பங்குபெறக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த முறை திமுக தலைமையிலான கூட்டணி 160 முதல் 180 இடங்கள் வரை வெற்றிபெறும் என்ற கணிப்பு இருக்கிறது. இதுபோன்ற சூழலில் வெற்றி வாய்ப்புள்ள ஒரு பெரிய கூட்டணியில் 6 தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள் பெற்றிருப்பதை 6 எம்எல்ஏ-க்களை பெற்றுவிட்டதாக கருதுகிறோம்.

image

கேள்வி: விடுதலை சிறுத்தைகள் 6 தொகுதிகளை பெற்றது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு இருந்ததை வெளிப்படையாக பார்க்க முடிந்தது. நீங்கள் கூட்டணி கட்சியுடன் பேசி ஒரு முடிவு எடுக்கும்போது உங்கள் கட்சியின் நிர்வாகக் குழுவில் எதிர்ப்பு இருந்ததாக நீங்களே பதிவு செய்துள்ளீர்கள். இது மற்ற கூட்டணி கட்சிகளுக்கு அழுத்தமாக மாறியிருக்கிறதா?

பதில்: எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் பேசும்போது, 6 தொகுதிகள் ஒதுக்கினால் கையெழுடுத்திட வேண்டாம் என்ற நிலைப்பாட்டைதான் எடுத்தார்கள். அதிருப்தி அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் இருந்தது. இருந்தாலும் ஒன்றிரண்டு இடங்கள் போதாது என்பதற்காக ஒரு கூட்டணியை விட்டு வெளியேறுவதால், கடந்த 5 ஆண்டு காலமாக திமுகவோடு பயணித்து மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வைத்திருக்கிற ஒரு நன்மதிப்பை சீர்குலைப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்.

கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியே வருவதன் மூலம் அதிமுக கூட்டணிக்கு ஒரு சாதகமான சூழல் அமைந்துவிடும் என்பதால் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவதை விரும்பவில்லை. பொதுவாக கூட்டணி அமைக்கும் நேரங்களில் அதிகாரபூர்வமற்ற சந்திப்புகள் அதிகமாக நடக்கும். இதுபோன்ற சந்திப்பில் நான் பத்து முறையாவது பேசியிருப்பேன்.

கேள்வி: திமுகவில் என்ன எண்ணிக்கையை சொன்னார்கள் நீங்கள் என்ன எண்ணிக்கையை கேட்டீர்கள்?

பதில்: கூட்டணியில் உள்ள அனைவருக்கும் இரண்டு என்றுதான் ஆரம்பித்தார்கள். பிறகு மூன்று, நான்கு என்று வந்தவர்கள் அதிலேயே நீண்ட நேரம் நின்றார்கள். உங்களை சிறுமைபடுத்த வேண்டுமென்பது எங்கள் நோக்கமல்ல. அதேபோல அரசியல் ரீதியாக உங்களை வீழ்த்த வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. மத்தியில் ஆளும் தேச விரோத கும்பல் ஆட்சி. இவர்கள் இந்தியா முழுவதும் எந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் எங்களுக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று வேண்டுகோளாக வைத்தார்கள்.

எங்களுக்கு எல்லா கட்சிகளும் வேண்டும் உங்களை நாங்கள் இழக்க விரும்பவில்லை. ஆனால் நாங்கள் கூடுதலான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு உங்களது ஒத்துழைப்புத் தேவை என்று கேட்டார்கள். ஏற்கெனவே திமுகவிற்கு மைனாரிட்டி கவர்மெண்ட் நடத்திய அனுபவம் இருக்கிறது. இதனால்தான் ஜெயலலிதா அவர்கள் 5 வருடங்களும் மைனாரிட்டி கவர்மெண்ட் என்று விமர்சித்தார். அனுபவத்தின் அடிப்படையில் தனி மெஜாரிட்டியோடு ஆட்சியமைக்க விரும்புகிறார்கள்.

பாஜக நடத்தும் அநாகரீமான அரசியல், புதுச்சேரியில் ஆட்சிக் கவிழ்ப்பு, கர்நாடகாவில் ஆட்சிமாற்றம், மத்திய பிரதேசத்தில் ஆட்சிமாற்றம், அதேபோல கோவா, மணிப்பூர், அருணாசல பிரதேசம், மேகாலயா போன்ற இடங்களில் அரசியல் அரங்கில் இதுவரை சந்திக்காத அநாகரீகங்களை பாஜக அரங்கேற்றியிருக்கிறது. அவர்கள் மக்களை சந்தித்து மக்களின் ஆதரவை பெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதை விட, வெற்றிபெற்ற கட்சிகளை உடைத்து அதில் இருக்கும் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அல்லது ராஜினாமா செய்யவைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய நிலையை நாம் பார்க்கிறோம்.

அதனால்தான் திமுக தனி மெஜாரிட்டியுடன் வெற்றிபெற்று பயமின்றி ஆட்சி நடத்த முடியும் என்று நினைக்கிறது. 100 இடங்களில் போட்டியிட்டால் 70 அல்லது 80 இடங்களில் வெற்றிபெறலாம். 180 இடங்களில் போட்டியிட்டால் 140 அல்லது 150 இடங்களில் வெற்றிபெறலாம் என்ற கணக்கில் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள். ஆகவேதான் நாங்கள் 180 இடங்களில் போட்டியிடப் போகிறோம். அதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று வெளிப்படையாக கேட்டார்கள்.

image

கேள்வி: பலவீனமான இடத்தில் காங்கிரஸ் இருக்கிறதா அல்லது உடைக்கின்ற வேலையை பாஜக செய்கிறதா?

பதில்: இரண்டும் இருக்கிறது. பலவீனம் காங்கிரஸ் பக்கம் இருக்கிறது. கட்சியை உடைக்கக் கூடிய அநாகரீகமான அடாவடி அரசியல் பாஜகவிடம் இருக்கிறது.

கேள்வி: திமுக தரப்பில் மெஜாரிட்டியாக ஆட்சியமைக்க வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் கூட்டணி ஆட்சியமைக்கும் வாய்ப்பை திருமாவளவன் உள்ளிட்டவர்கள் இழந்துவிட்டீர்களா?

பதில்: அதிக தொகுதி கேட்டு திமுகவை விட்டு நாங்கள் வெளியே போனால் திமுக தோற்றுவிடுமோ என்று நாங்கள் 6 தொகுதியை ஒத்துக்கொள்ளவில்லை. மாறாக பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் கும்பலின் நோக்கம் நிறைவேறிவிடும். கடந்த இரண்டு வருடங்களாக திமுக கூட்டணியை குழப்பி சிதறடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். அதேபோல அகில இந்திய அளவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதை அவர்கள் வெளிப்படையாகவே சொல்கிறார்கள். அதனால் இந்த கூட்டணி உடைவதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. பாஜகவின் நோக்கம் நிறைவேற நாம் காரணமாகிவிடக்கூடாது. அந்த பொறுப்பு இருப்பதாக நான் உணர்கிறேன்.

கேள்வி: நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்போது இருக்கும் வாய்ப்புகளுக்கும் இன்னொரு புதிய சின்னத்தில் போட்டியிடும் போது வாய்ப்புகள் குறைவு ஆனால் இதில் நீங்கள் சமாதானம் அடையவில்லையே?

பதில்: நான் 6 தொகுதிகளை பெற்றதையே பின்னடைவாக பார்க்கிறேன். அதேபோல திமுக சின்னத்தில் நிற்பதையும் பின்னடைவாகத்தான் பார்க்கிறேன். நான் 30 ஆண்டுகளாக கட்சி நடத்தியதன் பொருள் இல்லாமல் போய்விடும். இந்த காலகட்டத்தில் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஒன்றும் பெரிய விசயம் அல்ல. அறிவித்த ஒருமணி நேரத்திற்குள்ளாக மக்களிடம் சின்னம் சென்று சேர்ந்துவிடும்.

image

கேள்வி: தேர்தல் களத்தில் அதிமுக, திமுக என இரண்டு பெரிய கட்சிகள் இருக்கின்றன. இதில் அதிமுக பயிர்கடன் ரத்தில் தொடங்கி பல திட்டங்களை அறிவித்து இருக்கிறார்கள். இதனால் கடந்த ஆறு மாதங்களில் மக்களிடம் ஆதரவு பெருகியிருக்கிறது. என்று சொல்கிறார்கள் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: அதிமுகவுக்கு பெரிய பின்னடைவே அவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதுதான். பாஜகவுக்கு 20 சீட் கொடுத்தாலும் 2 சீட் கொடுத்தாலும் அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பது அதிமுகவுக்கு பின்னடைவுதான். ஐந்து வருடமாகிவிட்டது அதிமுகவில் தலைமையை உருவாக்க முடியவில்லை. கட்சிக்குள் தலைவர் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியாமல் இருக்கிறார்கள்.

தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஒரு கட்சி ஆட்சியில் இருந்தால், நிச்சயமாக அந்த ஆட்சிக்கு அமைதியான எதிர்ப்பு இருக்கும். ஆனால் இந்த எதிர்ப்பு அலை வெளியே தெரியாது அமைதியாகத்தான் இருக்கும். தேர்தல் சமயத்தில் வாக்களிக்கும் போதுதான் அது வெளிப்படையாகத் தெரியும். அதேபோல மத்திய அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு கிடக்கிறார்கள் இதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மாநில உரிமைகளை பறிகொடுத்து நிற்கிறார்கள். இதனால் அதிமுகவுக்கு சாதகமான சூழல் இல்லை என்பதுதான் எதார்த்தம்.

கேள்வி: பலவீனமான இடத்தில் இருக்கும் அதிமுக கூட்டணி கட்சிகளை கையாள்வதில் கூட்டணி கட்சிகளை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டியது இருக்கிறதா?

பதில்: கூட்டணிக்கு தலைமை ஏற்கும் அதிமுக தலைமை ஒரு பலவீனமாக தலைமையாக இருந்தும். அந்த கூட்டணியில் இருக்கும் கட்சிகள் 23 இடம் 20 இடம் என வாங்குகிறார்கள் என்றால் இவர்கள் அதைவிட பலவீனமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். பாஜக தமிழகத்தில் சொந்தமாக பத்தாயிரம் ஓட்டுகூட வாங்க முடியாது என்பது அதிமுகவுக்கு தெரியும். பாஜக வாங்கக்கூடிய ஒவ்வொரு தொகுதியும் திமுகவுக்கு சாதகமாகத்தான் அமையும். பாஜக 20 தொகுதிகள் வாங்கினால் திமுக தனது வெற்றியை 20 என தொடங்கும். பாஜகவின் 20 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.