நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலானது காங்கிரஸுக்கு மட்டுமல்லாமல் ராகுல் காந்தி எதிர்கொள்ள இருக்கும் பலப்பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. அதை ராகுல் எதிர்கொண்டு, தெற்கில் தனது அரசியல் தளத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ராகுல் காந்திக்கு மற்றொரு முக்கியமான சிக்கல், ஜி-23 உறுப்பினர்களால் ஏற்படக்கூடும் என தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான இவர்கள்தான் கடந்த காலங்களில் கட்சியின் மீதுள்ள அதிருப்தி காரணமாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். குரூப் 23 என்பதே ஜி-23 என்று அழைக்கப்படுகிறது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது காங்கிரஸை அசைத்துப் பார்த்தார் பிரதமர் நரேந்திர மோடி. பதவிக் காலம் முடியப்போகும் மாநிலங்களவை தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு அளித்த பிரியா விடை உண்மையில் காங்கிரஸை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதை வளரவிடக்கூடாது என்று எண்ணிய காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தனது வீட்டில் குலாம் நபி ஆசாத்துக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.

image

அதிருப்தியாளர்களை தன் பக்கம் இழுத்துக்கொள்வது பாஜகவுக்கு ஒன்றும் புதியதல்ல என்பதை கடந்த காலங்கள் மூலம் நம்மால் அறிந்துகொள்ள முடியும். சோனியா காந்தி ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தானது, காங்கிரஸை மாற்றியமைக்கக் கோரி கடந்த ஆண்டு கடிதம் எழுதியிருந்த அதிருப்தித் தலைவர்களின் குழுவான ஜி-23 உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

ராகுல் காந்தி மீதான பார்வை

தென்னிந்தியாவில் ராகுல் காந்தி கவனத்தை ஈர்த்து வருகிறார். தமிழகத்தில் பிரியாணி சமைப்பதில், கை கொடுப்பதில் இருந்து, மீனவர்களுடன் கடலுக்குள் நீராடுவது, புஷ்-அப் சவால் எடுப்பது வரை, ராகுல் காந்தி நெட்டிசன்களுக்கு அதிகள அளவில் கன்டென்ட் கொடுத்திருக்கிறார்.

ஆனாலும், ராகுல் காந்தியின் பிரசார பாணியில் காங்கிரஸ் தலைவர்களுக்குள் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு சிலர் வரவேற்றும், இன்னொரு தரப்பு இதற்கு உடன்படாமலும் தனித்து நிற்கின்றனர்.

“ராகுல் காந்தி நிச்சயம் நாட்டின் பிரதமராக வரப்போகிறார். அப்படியிருக்கும்போது, இதுபோன்ற புஷ்-அப் செய்வது அவருக்கு தேவையா? அவருடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அவருக்கு இன்னும் தீவிரமானதும், ஆழ்ந்த பங்களிப்பும் தேவை என்று நான் அவரிடம் கூறுவேன். அவருடைய பிரசார வியூகர் தவறாக வழிநடத்துக்கிறார்” என்கிறார் காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவர்.

image

காந்தி குடும்ப விசுவாசியான மற்றொரு தலைவர், ராகுலின் புதிய அவதாரம் இந்திரா மற்றும் ராஜீவ் காந்தியுடன் அதிகம் பொருந்தக்கூடியது என்று தெரிவித்துள்ளார். “ராகுல் ஏன் மோடியை காப்பியடிக்க வேண்டும்? ராகுலின் புதிய அவதாரமானது இந்திரா மற்றும் ராஜீவ் காந்தியை ஒத்ததாக இருக்கிறது” என்கிறார்.

சமீபகாலமாகவே காங்கிரஸுக்கு தேர்தல்கள் மிகப்பெரிய பலப்பரீட்சையாக மாறி வருவதை நம்மால் காணமுடிகிறது. காங்கிரஸ் தன்னுடைய முழு பலத்தையும் முழுமையாக செலுத்தி, அசாம் மற்றும் கேரளாவைக் கைப்பற்றினால், அது கட்சிக்குள் இருந்து ஒலிக்கும் அதிருப்தி குரல்களை அமைதியாக்க வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல், வியூகங்களை வகுப்பதற்கும், ராகுல் முடிவுகளை கட்சியினர் அங்கீகரிப்பதற்கும்கூட இடமளிக்கும்.

காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்க தனது தயக்கத்தை ராகுல் பலமுறை சுட்டிக்காட்டியிருந்தாலும், இந்த தேர்தல் வெற்றிகள் அவரை விருப்பமான ஆளுமைமிக்க ஒருவராக சோனியா காந்திக்கு அடையாளம் காட்ட உதவும். ஆனால் இது தவறி, தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தால், அது அக்கட்சியின் அழிவுக்கு கூட பாதை அமைத்துவிடும். மேலும், அதிருப்தியில் இருக்கும் ஜி-23 உறுப்பினர்களிடையே கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ளக் கூடும்.

ஜி-23 இன் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர், “இது மிக விரைவாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சி மற்றொரு தோல்வியை எதிர்கொண்டால், கட்சியில் பிளவு ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

– மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.