ஏற்கெனவே ஏகத்துக்கும் உயர்ந்து, எல்லாத் தரப்பு மக்களின் வெறுப்பையும் சம்பாதித்திருக்கும் பெட்ரோல், டீசல் விலை அடுத்துவரும் நாள்களின் மேலும் உயரப்போகும் அபாயம் ஏற்படப் போகிறது என்பதே அதிர்ச்சி தரும் செய்தி ஆகும். தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93.11-ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் கூடிய விரைவில் ரூ.100-ஐ தொட்டுவிடுமோ என்கிற அச்சம் எல்லோரிடமும் உருவாகி இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர என்ன காரணம்?

Image by Erich Westendarp from Pixabay

14 மாதங்களில் இல்லாத அளவுக்கு…

பெட்ரோல், டீசல் விலை ஏற்கெனவே அதிகளவில் உயர்ந்ததற்குக் காரணம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக அதிகரித்ததே ஆகும். பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 69.36 டாலர் என்கிற அளவில் தற்போது வர்த்தகம் ஆகிறது. வெஸ்ட் டெக்ஸாஸ் இன்டர்மீடியட் என்றழைக்கப்படும் டபிள்யு.டி.ஐ கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் தற்போது 66.09 என்கிற அளவில் வர்த்தகம் ஆகிறது. இந்த இரண்டு வகையான கச்சா எண்ணெய்களும் கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சமான விலையில் தற்போது வர்த்தகம் ஆகின்றன.

என்ன காரணம்?

வரும் ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை அதிகரிக்கப் போவதில்லை என எண்ணெய் உற்பத்தி நாடுகள் முடிவு செய்துள்ளன. இதனால் அதிகமான கச்சா எண்ணெயை பலரும் வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கி இருக்கின்றனர். தவிர, அமெரிக்காவில் வேலைக்குச் சேருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், அதிகமான கச்சா எண்ணெய் தேவைப்படும் என்பதால், பலரும் அதை வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

இது ஒரு பக்கமிருக்க, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது. சில நாள்களுக்கு முன்பு 72.66-ஆக இருந்த ரூபாய் மதிப்பு, இப்போது 73.18 என்கிற அளவுக்கு சரிந்திருக்கிறது. இதனால் அதிக விலை தந்து கச்சா எண்ணெயை வாங்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலும் விலை உயரும்…

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நம் நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை அடுத்துவரும் நாள்களில் உயர்வதற்கான வாய்ப்புகளே அதிகம். இப்போதுள்ள விலையைவிட ஒரு லிட்டருக்கு ரூ.1 – ரூ.2 வரை உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.

மத்திய, மாநில அரசாங்கங்கள் கலந்துபேசி இரு தரப்பினருமே வரியைக் குறைத்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை தற்போது குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அல்லது பெட்ரோல், டீசலை உடனடியாக ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவந்தால்தான் விலை குறையும்.

Image by Ely Penner from Pixabay

இந்த இரண்டு விஷயங்களுமே நடக்காதபட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தால் ஏற்படும் பாதிப்புகளை அனுபவிப்பது தவிர வேறு வழியில்லை..!

கச்சா எண்ணெய் விலை உயரும்…

கச்சா எண்ணெய் விலை அடுத்து வரும் நாள்களில் இறங்குவதற்குப் பதிலாக இன்னும் அதிகரிக்கவே செய்யும் என சர்வதேச முதலீட்டு ஆலோசனை நிறுவனங்கள் சொல்லத் தொடங்கி இருக்கின்றன. உதாரணமாக, பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 75 டாலர் அளவுக்கு உயர வாய்ப்பு இருப்பதாக கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் கணித்திருக்கிறது. அதேபோல, யு.பி.எஸ் (UBS) நிறுவனம் ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 72 டாலர் வரை உயர வாய்ப்புள்ளதாக கணித்திருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.