1963-ல் நடைபெற்ற அம்ரோஹா, பரூக்காபாத், ராஜ்கோட் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதற்கான பணிகளை காமராஜர் மேற்கொண்டார். அப்போது, காங்கிரஸ் சீனியர்களை கட்சிப் பணிக்கு அனுப்பிவிட்டு, இளைஞர்களுக்கு, புதியவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் வாய்ப்பளிக்கும் ஒரு திட்டத்தை முன்வைத்தார். இதற்கு ‘கே’ பிளான் என்று பெயர். கிட்டத்தட்ட அதே பாணியில், தி.மு.க-வில் பன்னெடுங்காலமாக கோலோச்சும் சீனியர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க கட்சித் தலைமை முடிவெடுத்திருக்கிறதாம்.

தி.மு.க தலைமை அலுவலகம்-அண்ணா அறிவாலயம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், “தி.மு.க-வில் இரண்டு முறைக்கு மேல் எம்.எல்.ஏ பதவியில் இருந்தவர்களின் தொகுதிகள், அவர்களின் செயல்பாடுகளை ஐபேக் கடந்த இரண்டு மாதமாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வு முடிவுகளின்படி, எம்.எல்.ஏ-க்களாக உள்ள 13 சீனியர்களின் செயல்பாடுகள் ஐபேக் நிர்ணயித்திருந்த தரநிலைக்கு ஒப்பானதாக இல்லை. வட மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஒருவர், 1980’களின் இறுதியிலிருந்து சென்னைக்கு அருகிலிருக்கும் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். தொகுதியின் அடிப்படை பிரச்னைகள் என்னவென்பது கூட அவருக்கு தெரியவில்லை. கட்சியும், உதயசூரியன் சின்னமும்தான் அவரை இதுநாள் வரை அதிகாரத்தில் வைத்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சீனியர் நிர்வாகி ஒருவர் உடல்நிலை பாதிப்பால் நலிவடைந்தார். சீனியர் என்கிற ஒரே காரணத்துக்காக அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்க நினைக்கிறீர்கள். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்திருக்கும் அந்த 13 பேருக்கும் சீட் அளித்தால் 13 தொகுதியையும் மறந்துவிட வேண்டியதுதான். இப்படி பலரைப் பற்றியும் ரிப்போர்ட்டில் குறிப்பெழுதி இருக்கிறது ஐபேக்.

Also Read: திமுக-வின் `ஸ்லீப்பர் செல்கள்’ திட்டம் முதல்`அம்மா மினி கிளினிக்’ மெகா குளறுபடிவரை கழுகார் அப்டேட்ஸ்

இதுபோக, பணம் செலவழிக்க யோசிக்கும் சீனியர்கள் சிலரின் பெயர்களையும் ஐபேக் தரம் பிரித்துள்ளது. திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், மதுரை மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் என்று பணம் செலவழிக்க இயலாத சீனியர்களின் பெயர்கள் லிஸ்ட்டில் உள்ளன. விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., கடலூர் திட்டக்குடி கணேசன், நாமக்கல் காந்திசெல்வன், கன்னியாகுமரி சுரேஷ் ராஜன் என்று சீனியர்கள் பலரும் தி.மு.க-வின் ஹிட் லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கிறார்கள். துரைமுருகன், பொன்முடி போன்றவர்கள் மிகவும் சீனியர்கள் என்பதால், அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கித்தான் ஆக வேண்டும். இவர்களைப் போன்றவர்களைத் தவிர்த்து, மற்ற சீனியர்களுக்கு சீட் கிடைப்பது கஷ்டம்.

உதயநிதி ஸ்டாலின்

இவர்களுக்குப் பதிலாக, தன் ஆதரவாளர்களை அந்தந்த தொகுதிகளில் களமிறக்க தி.மு.க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாகி இருக்கிறார். ஆவுடையப்பனுக்குப் போட்டியாக அம்பாசமுத்திரத்தில் தொழிலதிபர் அஜய் படையப்பன் சேதுபதி, கே.என்.நேருவை ஓரங்கட்டும் விதமாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காந்திசெல்வனுக்கு போட்டியாக ராஜேஷ்குமார், சென்னையில் தனக்கு ஆதரவாக அண்ணாநகர் எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக் என்று தனக்கென ஒரு வட்டாரத்தை கட்டமைக்க ஆரம்பித்திருக்கிறார் உதயநிதி” என்றவர்களிடம், “தேர்தல் நேரத்தில் சீனியர்களுக்கு சீட் மறுக்கப்பட்டால், அது களத்தில் பாதிப்பை உருவாக்குமே… இதை எப்படி சமாளிப்பீர்கள்?” என்றோம்.

Also Read: `பங்கப் பிரி… பங்கப் பிரி’ – கொடிபிடிக்கும் உதயநிதி; கைவிரிக்கும் ஐபேக்!

கேள்விக்குப் பதிலாக, “அதற்காகத்தான் சட்டமன்ற மேலவையை மீண்டும் உருவாக்கும் திட்டத்திலிருக்கிறார் ஸ்டாலின். 2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் மேலவையை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மறைந்த முதல்வர் கலைஞர் எடுத்தார். அண்ணாசாலையில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தில் இதற்கான அறைகள் கூட தயாராகின. ஆனால், ஆட்சி மாற்றம் நடந்தவுடன் இந்த திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் மேலவையை உருவாக்கி, சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காமல் போகும் சீனியர்களுக்கு மேலவை உறுப்பினர் வழங்க ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார். இதன்மூலமாக, சீனியர்களை சரிக்கட்டவும் முடியும், தன் மகன் உதயநிதிக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்கவும் முடியுமென ஸ்டாலின் கருதுகிறார்” என்றனர்.

ஸ்டாலின்

தி.மு.க தலைவராக கருணாநிதி கோலோச்சியவரை, ஸ்டாலினால் ஒரு கட்டத்துக்கு மேல் கட்சியிலும் ஆட்சியிலும் மேலே வர முடியவில்லை. சில சீனியர்கள், ‘தலைவர்கிட்ட பேசிக்கிறோம் தம்பி’ என்று ஒற்றை வரியில் ஸ்டாலினின் உத்தரவுகளை ஓரங்கட்டினர். அந்த நிலைமை, தன் மகனுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம். அவரைவிடவும் கிச்சன் கேபினெட் தெளிவாக சில திட்டங்களை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எது எப்படியோ… வரும் சட்டமன்றத் தேர்தலில், சீனியர்களுக்கு சீட் இல்லை என்று கிளம்பும் கோஷத்தால், சில சீனியர்கள் அரண்டு போயிருப்பது என்னவோ நிதர்சனம்.

Also Read: ராகுல், உதயநிதி பின்னே எடப்பாடி பழனிசாமி – மதுரையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு அரசியல்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.