சென்னையில் ஓடிய ட்ராம் வண்டிகள் பற்றியும் அதை நடத்திய மெட்ராஸ் எலெட்க்ரிசிட்டி சிஸ்டம் (எம்.ஈ.எஸ்) என்ற கம்பெனி பற்றியும் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். மக்கள் நடக்கும் வேகத்துக்கு சற்றே அதிக வேகத்தில் அது பயணிக்கும். மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகம். முயற்சி செய்தால் மக்கள் அதை முந்திச் செல்ல முடியும். 1895 முதல் 1953 வரை சென்னையில் ட்ராம் ஓடியது. தங்கசாலை, பீச் சாலை, பாரிஸ் கார்னர், மவுன்ட் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் இந்த இயந்திய நத்தைகள் ஊர்ந்த காலம் இன்றைய அவசர உலகத்துக்கு வேடிக்கையாக இருக்கலாம். சுமார் 100 ட்ராம் வண்டிகள் வரை சென்னையில் ஓடின. சாலைகளில் அமைக்கப்பட்ட மின்சார ஒயர்களைத் தொட்டுக்கொண்டு நடை போட்ட அவை, இன்றைய மின்சார ரயில்களின் மூதாதைகள். பெருத்த நஷ்டம் காரணமாக அந்த நிறுவனம் மூடப்பட்டது.

அந்த ட்ராம் வண்டிகளின் ஷெட் இருந்த இடத்தில்தான் இப்போது தினத்தந்தி அலுவலகமும் பெரியார் திடலும் இருக்கிறது என்று படித்திருந்தாலும் அதைப் பற்றிய நினைவுகளை எனக்குச் சொன்னவர் முதுபெரும் பத்திரிகையாளர் ஜே.வி.கண்ணன் அவர்கள்.

மெட்ராஸ்

தினமணியின் முதல் ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திய தமிழன் நாளிதழில் பணியாற்றியவர். பெரியார், அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர். வரலாறு எப்படி நூல்பிடித்தாற்போல இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது என்பதற்கு ஜே.வி.கே. போன்றவர்கள் முக்கியமான உதாரணம். பெரியாரும் அண்ணாவும் பிரிந்திருந்த நேரத்தில் இருவரிடத்திலும் ஒரு பத்திரிகையாளராகத் தொடர்பில் இருந்தவர் ஜே.வி.கே.

மெட்ராஸ்

பெரியார் என்ன சொல்கிறார் என்று அண்ணா ஆவலோடு விசாரித்த அதே நேரத்தில், அண்ணாவைப் பற்றி பெரியார் ஆவலே இல்லாமல் விசாரித்ததை அவர் என்னிடம் சொன்னார். இதை அவர் விவரிக்கும்போது பெரியாருக்கு அண்ணாவுக்கும் நடுவே நானே உட்கார்ந்திருப்பது போன்ற ஓர் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ட்ராம் இயக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் நாமம் போட்டிருந்தார்கள் என்ற தகவல்களை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பெரியார் வார்த்தைகளில் சொல்வது என்றால் ‘கண்ணீர் துளி பசங்கள் எல்லாம் பிரிந்துபோன’ நேரத்தில் அவர் அந்த பெரிய முயற்சியில் இறங்கினார். சென்னையில் திராவிடர் கழகத்துக்கு பெரிய இடம் தேடி வந்தார். அப்போது பெரியாரின் சென்னை அலுவலகம் சிந்தாதிரிப் பேட்டையில் இருந்தது. சற்றே பெரிய வசதியான இடத்தைத் தேடிக்கொண்டிருந்தவருக்கு, ட்ராம் வண்டிகள் நிறுத்துமிடமாக இருந்த அந்த இடம் ஏலத்துக்கு வருவதாகத் தெரியவந்தது. உடனே ஏலம் எடுக்க விண்ணப்பித்தார்.

பெரியார், தினத்தந்தி சி.பா.ஆதித்தனார் ஆகியோருடன் இன்னொருவரும் ஏலத்துக்கு விண்ணப்பித்தனர். அவர் கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு. மூன்று பேருக்கான பகுதிகளாக இருந்த அந்த இடத்தை, பின்னர் ஜி.டி. நாயுடு விலகிக்கொள்ளவே பெரியாரும் ஆதித்தனாரும் அந்த இடத்தைப் பிரித்துக்கொண்டனர். மெட்ராஸின் முகம் இந்த அளவுக்கு மாறியதற்கு திராவிடர் கழகமும் தினத்தந்தியும் முக்கியக் காரணம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஏனென்றால் தமிழகத்துக்கு என ஒரு கருத்தை உருவாக்கியதில் அந்த நாளிதழுக்கும் அந்த இயக்கத்துக்கும் பங்கு இருப்பதுதான் காரணம். சென்னை மக்களை நத்தை வேகத்தில் நடத்திய ட்ராம் வண்டிகள் இருந்த இடத்தில் இருந்துதான், பின்னர் அசுர வேகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன என்பது ஒரு நகை முரண்.

கன்னிமாரா நூலகம்

இன்னொரு ஆச்ச்ர்யமான செய்தி… தனியாக காரோ, பஸ்ஸோ வைத்திருந்தவர்களைப் பார்த்திருப்பீர்கள். தனியாக ரயில் வைத்திருந்தவர் ஒருவர் சென்னையில் இருந்தார். சென்னையிலுள்ள பல பிரசித்தி பெற்ற, சிவப்பு நிறத்திலுள்ள பல கட்டடங்களை உருவாக்கிய கட்டட மேதை, ‘தாட்டிகொண்ட நம்பெருமாள்’ செட்டியார். பாரிமுனையில் உள்ள உயர் நீதிமன்றம், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவை. 18-ம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலேயர்களுக்கு கிடைத்த பில்டிங் கான்ட்ராக்டர் இவர். இவர் வாழ்ந்த வீடு, ‘வெள்ளை மாளிகை’ என்ற பெயருடன், சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில், டாக்டர் மேத்தா மருத்துவமனையின் பின் உள்ளது. இதில், மூன்று மாடிகள், 30 அறைகள் உள்ளன. இது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில், பீங்கானில் செய்யப்பட்ட அரிய கலைப் பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஹாரிங்டன் சாலை வரை உள்ள நிலப்பரப்பு அவருக்குச் சொந்தமாக இருந்தது. அதனால் அது ‘செட்டியார் பேட்டை’ என அழைக்கப்பட்டது. நாளடைவில், “செட்டிபேட்டை’ என மருவி, இன்று, “செட்பெட்’ என மாறிவிட்டது. ஆங்கிலேயர் பலருக்கு வீடு கட்டித் தந்தவர் அவர்.

ராமானுஜம்

கணித மேதை ராமானுஜம் தம் இறுதி நாட்களை செட்டியார் வீட்டில் கழித்தார். இங்கிலாந்திலிருந்து திரும்பிய ராமானுஜருக்கு, காசநோய் பாதிப்பு அதிகமாகிவிட்டதால், அவரது உறவினர்கள் பயந்துபோய், திருவல்லிக்கேணியில் இருந்த அவர்களது வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை.அப்போது, நம்பெருமாள் செட்டியார் அவரை அழைத்து வந்து, தனி அறை, தனி சமையல், சிறப்பு வைத்தியம் முதலிய ஏற்பாடுகள் செய்து, அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்தார். ஆனால், ராமானுஜம் முட்டை முதலியவற்றை சாப்பிட மறுத்ததால், காசநோய்க்கு இளம் வயதில் மறைந்தார். அவர், கடல் கடந்து வெளிநாடு சென்றதால், அவரது உடலைக் கூட ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்தனர். ஆதலால், நம்பெருமாள் செட்டி அவர்களே அவரது ஈமச் சடங்குகளை செய்தார். ராமானுஜத்தின் மரணச் சான்றிதழ், இன்றும் செட்டியார் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்றவர் நம்பெருமாள். முன்னாள் இம்பீரியல் வங்கி (தற்போது எஸ்.பி.ஐ.,) நியமனம் செய்த முதல் இந்திய டைரக்டர். சென்னை மாகாணத்தின் மேல் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர். முதன் முதலாக வெளிநாட்டு கார் (பிரெஞ்ச் டிட்கன்) வாங்கிய முதல் இந்தியர். தற்போது இந்த கார் யுனைடெட் கம்பெனி சேர்மன் விஜய் மல்லையாவிடம் உள்ளது. தன் வின்டேஜ் கலெக்‌ஷன் கார்களில் ஒன்றாக அதை வைத்திருக்கிறார்.

தான் ஈட்டிய பணத்தில் பெரும் பகுதியை, சமஸ்கிருத வளர்ச்சி, வைணவ கோயில்களின் திருப்பணி, ஏழைகளின் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு கொடுத்து உதவினார். வடசென்னையில் பல பள்ளிகளும் சேத்துப்பட்டிலுள்ள சேவா சதனம் வளாகத்தில், தாட்டிகொண்ட நாச்சாரம்மா மருத்துவமனையும் இவருடைய அறக்கட்டளை சார்பில் நடைபெறுகின்றன. சென்னையின் வளர்ச்சியில் இவரது சேவை சிறப்பானது.

இந்த நம்பெருமாள் செட்டியார்தான் தன் சொந்த உபயோகத்துக்காக, நான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயில் வண்டி வைத்திருந்தார். தம் குடும்பத்தினரோடு திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்குச் சென்று வர இந்த ரயிலை உபயோகித்தார். மற்ற நேரங்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்தான் இவருடைய ரயில் நிறுத்திவைக்கப்பட்டது. சென்னை ரயில் நிலையம் அருகே ஒரு உயிர்க்காட்சி சாலை இருந்தது. அந்த உயிர்க்காட்சி சாலையில்தான் எம்.ஜி.ஆர் வளர்த்த சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது… அதற்கு பெயர் உண்டு. மக்கள் எல்லாம் அதை பெயர் சொல்லி அழைப்பார்கள். எனக்கு அந்த சிங்கத்தைப் போய் பார்த்துவிட்டு வருவது சிறுவயதில் பிடித்தமான பொழுதுபோக்காக இருந்தது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.