மத்திய காலக் கடனாக மாற்றியமைக்கப்பட்ட குறுகிய கால கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் 12,110 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார். இதன் மூலம் 16.13 லட்சம் விவசாயிகளின் கஷ்டங்கள் தீரும் தொடர்ந்து விவசாயிகள் நிம்மதியாக பயிர்ச்சாகுபடியைத் தொடர முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் தி.மு.க தரப்பில் தங்களின் தேர்தல் பரப்புரையில் சொல்லி வந்த பயிர்க் கடன் தள்ளுபடியை முதல்வர் நிறைவேற்றியுள்ளதாகத் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் பயிர்க்கடன் தள்ளுபடியில் மத்திய கால கடனாக மாற்றப்பட்ட விவசாயிகளுக்கு இந்தப் பயிர்க் கடன் தள்ளுபடி ஏற்புடையதில்லை என்ற தகவல் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

கணேசன்

இது குறித்து மத்திய கூட்டுறவு ஊழியர் சங்க சிவகங்கை மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன், “தமிழகத்தில் சுமார் 4200-க்கும் மேற்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இவர்களின் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. 2016-நவம்பர் மாதம் கொடுக்கப்பட்ட பயிர்கடன்கள் 2017-ல் பருவ சூழல் காரணமாக மூன்று வருடத்துக்கு மத்திய கால கடனாக மாற்றப்பட்டது. குறுகிய கால கடனை, மத்திய கால கடனாக மாற்றும்போது விவசாயிகளுக்கு தோள் கொடுப்பது போல அமையும். அதனால் விவசாயிகள் காலம் எடுத்துக்கொண்டு கடனைத் திருப்பிச் செலுத்த முடியும்.

மேலும் விவசாயிகள் அதனால் புதிய கடன்களையும் வாங்க முடியும். விவசாயிகள் நலன் கருதி அவ்வாறு குறுகிய கால கடனை மத்திய கால கடனாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் கடன்களை சிறிது, சிறிதாகக் கட்டி விவசாயத்தையும் கைவிடாமல் தொடர்ந்து செய்வார்கள். நாட்டில் உணவுப் பொருள்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். அரசு கொள்கையின் அடிப்படையில் இவ்வாறு மத்திய கால கடனாக மாற்றப்பட்டது.

இந்நிலையில், தற்போது 2021-ல் அறிவிக்கப்பட்ட விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடியில், குறுகிய கால கடன் தள்ளுபடி செய்யப்படும் எனும் அறிவிப்பு இருப்பதால் அதிகாரிகள் மத்திய கால பயிர்க் கடனை தள்ளுபடி திட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கும் சூழல் ஏற்படுகிறது.

பயிர்க் கடன் குளறுபடி… தவிக்கும் விவசாயிகள்!

ஆனால், முதல்வரின் எண்ணம் அதுவல்ல; எல்லா விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். ஆனால், அவ்வாறு நடக்காமல் மத்திய கால கடனாக மாற்றப்பட்ட விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் சென்றடையாமல் பாதிப்பு அடைவார்கள். இதனால் ஏறத்தாழ 500 கோடி விவசாயிகள் கடன் தள்ளுபடியாகாது. இதனால் 25,000 முதல் 30,000-த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படையலாம்.

இவை அனைத்தும் அரசு கணக்கெடுப்புக்குப் பின்னர்தான் புள்ளி விபரம் தெரியவரும். எனினும், வெகுவாக விவசாயிகள் பாதிக்கலாம். அரசு தான் குறுகிய கால கடனை, மத்திய கால கடனை மாற்றியது. அதனால் பயிர்க்கடன் தள்ளுபடி பெறாத விவசாயிகள் மீண்டும் அரசிடம் முறையிடுவார்கள்.

எனவே, தமிழக முதல்வர் இந்தச் சிக்கல்களைப் பரிசீலனை செய்து. குறுகிய கால கடனைப்போல் மாற்றியமைக்கப்பட்ட மத்திய காலக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அப்போது தான் அனைத்து விவசாயிகளுக்கு இந்த நல்ல திட்டம் சென்றடையும்” என்றார்.

Also Read: விவசாய கடன் தள்ளுபடி: `காரணம் யார்… எடப்பாடியா, ஸ்டாலினா?’ – விவசாய சங்கங்களின் அரசியல் கலாட்டா

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.