சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாளான இன்று, ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருக்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று 2ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்த நிலையில் மிகவும் எதிர்பார்ப்புடன் 2ஆவது போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் டக் அவுட்டானார்.

image

புஜாரா 21 ரன்கள் எடுத்த நிலையில் கோலி டக் ஆவுட்டானார். ஆனால் ரோகித் சர்மா 161 ரன்களும், ரஹானே 67 ரன்களும் விளாசினர். இதனையடுத்து நேற்றைய நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் ரிஷப் பன்ட் மட்டுமே சிறப்பாக விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 58 ரன்களை எடுத்தார். இன்று காலை மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதில் இங்கிலாந்து அணியின் மொயின் அலி 4 விக்கெட்டும், ஒல்லி ஸ்டோன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து  இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோரி பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து டோம் சிப்லே 16 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

image

முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் விளாசிய கேப்டன் ஜோ ரூட் 6 ரன்களில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்கு முந்தைய பந்தில் லாரன்ஸ் 9 ரன்களுக்கு அஸ்வின் பந்துவீச்சில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன் பின்பு வந்த ஒல்லி போப் – பென் ஸ்டோக்ஸ் ஜோடி ஓரளவுக்கு நிலைத்து நின்று விளையாட முயற்சித்தது. ஆனால் ஸ்டோக்ஸ் 18 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வினின் அபாரமான சுழலால் போல்டானார்.

இதனையடுத்து ஒல்லி போப் 22 ரன்களுக்கு சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயின் அலியும் அக்ஸர் படேல் பந்துவீச்சில் 6 ரன்னில் அவுட்டானார். பின்பு ஒல்லி ஸ்டோன் 1 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் தேநீர் இடைவேளை வரை இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. அதன்பின்பு 2 விக்கெட்டுகளை விரைவாக இழந்த இங்கிலாந்து 134 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவின் அஸ்வின் 5 விக்கெட் எடுத்து அசத்தினார்.

image

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை விட 259 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.