நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் சார்பில் ம.தி.மு.க தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் போது, மறைந்த கவிஞர் குடியரசுவின் உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

நிதி வழங்கும் மாவட்டச் செயலாளர்கள்

பின்னர் ம.தி.மு.க-வின் மாவட்டங்களின் சார்பாக தேர்தல் நிதியாக வசூலிக்கப்பட்ட 2 கோடி ரூபாய் நிதியை கட்சியின் பொதுச் செயலாளரான வைகோவிடம், மாவட்டச் செயலாளர்கள் வழங்கினார்கள். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ”சாத்தூர் வெடிவிபத்தில் பலர் உயிரிழந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் வருத்தமாக இருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ம.தி.மு.க சார்பில் மாவட்ட வாரியாக கட்சிக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். யாரையும் கட்டாயப்படுத்தி நிதி பெறவில்லை அவர்களாகவே தாமாக முன்வந்து நிதி தருகிறார்கள்.

செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ

மக்களைச் சந்திக்கும் பணியை ஸ்டாலின் செய்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். அதைக் கண்டு ஆளுங்கட்சிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் முதல்வர் எடப்பாடி எப்போது பார்த்தாலும் ஸ்டாலினையே குறைகூறி வருகிறார்.

தமிழக மக்களின் ஆதரவு தி.மு.க பக்கம் இருக்கிறது. நடக்கும் தேர்தலின் முடிவு உச்சி சூரியனைப் போல ஒளி வீசிகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றியைக் கைப்பற்றும். தி.மு.க நிகழ்ச்சிக்குக் கூடும் கூட்டத்தைப் பார்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆத்திரம் அடைகிறார்.

ஆளுங்கட்சி சார்பாக வெற்றி நடைபோடும் தமிழகம் என தினந்தோறும் தமிழகத்தின் அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் செய்து வருகிறார்கள். இது காசுக்காகப் போடப்படும் விளம்பரம். தமிழ் வஞ்சிக்கப்பட்டு சமதர்ம கோட்பாடுகளையும் சமூக நீதியையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை அகற்றத் தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

சனாதனக் கொள்கைக்கு எதிராக இருக்கும் மக்களின் மன நிலையைத் திரட்டும் விதமாக தி.மு.க-வுடன் இருக்கும் கட்சிகள் வேலை செய்து வருகின்றன. ம.தி.மு.க எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் கூட்டணி இட ஒதுக்கீடு தொடர்பாக நிறைய யூகங்கள் வெளியாகி வருகின்றன.

கவிஞர் குடியரசு படத்துக்கு மரியாதை செலுத்தும்ம் வைகோ

காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பே கிடையாது. கமல்ஹாசன் தலைமையில் மூன்றாவது அணி அமையுமா என்பது தெரியாது. சிறையில் வெளிவந்திருக்கும் சசிகலாவால் தமிழக அரசியலில் எந்த தாக்கமும் ஏற்படாது.

கட்சிக் கூட்டம் நடைபெறும் அரங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் துரை வையாபுரி படத்தை கட்சித் தொண்டர்கள் ஆர்வத்தின் காரணமாக வைத்திருக்கிறார்கள். அவருக்கு கட்சியில் எந்த பதவியும் கிடையாது. அதனால் துரை வையாபுரி எந்தத் தேர்தலிலும் போட்டியிடவும் மாட்டார்” என்று வைகோ தெரிவித்தார்.

துரை வையாபுரி படத்துடன் வைக்கப்பட்டிருந்த பேனர்

பின்னர் கட்சியினரிடம் பேசிய வைகோ, “தி.மு.க கூட்டணியில் நாம் எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்குமா என்பது தெரியாது. எனக்கு உங்கள் எல்லோரையுமே எம்.எல்.ஏ-வாக ஆக்கிப் பார்க்கவே ஆசை. ஆனாலும் கூட்டணியில் நமக்கு ஒதுக்கும் தொகுதிகளைப் பெற்று நமது கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும்” என்று பேசினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.