திருவண்ணாமலை மாவட்டத்தில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் புதிய பரப்புரையை துவங்கிய ஸ்டாலின். தூத்துக்குடியை அடுத்து மூன்றாவது பயணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் நேற்று (12.02.2021) தன் பிரசாரத்தை தொடங்கினார். காலை 8 மணி அளவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காணையில் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 11.15 மணி அளவிலேயே ஸ்டாலின் வருகை இருந்தது.

கூட்டத்தின் துவக்கத்தில் கோரிக்கை மனுக்களை பெற்று சில மனுக்களை தேர்ந்தெடுத்து அம்மக்களிடம் பேசினார் ஸ்டாலின். பலரும் அவர்களுடைய குறைகளை கூறினார்கள். அப்போது, விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அஞ்சலை என்பவர் தன் மகளுக்கு கல்லூரியில் நிலுவைத் தொகை பாக்கியிருப்பதினால் டி.சி(TC) பெற முடியாமல் உள்ளது எனவும், இதனால் அவளால் வேலைக்கு கூட போக முடியவில்லை என கூறியபோது. “வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் எனும் உறுதியை சொல்லி இருக்கிறேன். ஆனால் இப்போது நடக்கும் பழனிசாமி ஆட்சியில், இதையே அவர் வரும் தேர்தல் அறிக்கையில் அறிவித்துவிட்டு ‘நான் சொன்னதை தான் ஸ்டாலின் அறிவித்துவிட்டார்’ என்று சொல்வார். அதற்கு நான் கேட்கிறேன், ‘நீங்க போய் யார் காலுலையும் விழக்கூடாது’ என்று சொன்னால் விழாமல் இருப்பீங்களா? இதுதான் என்னுடைய கேள்வி. அவர் சொல்வதை, நான் உங்களிடம் கூறிவிடுவதாக சொல்லி வருகிறார். இதான் இன்றைய நிலைமை” என்றார்.

கோரிக்கை மனு பெட்டகம்

தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் நன்றி கூறி பேசத் துவங்கிய ஸ்டாலின்.

“இதுவரை நான் வலம்வந்த தொகுதிகளாக இருந்தாலும், இப்போது நான் பேசுகின்ற இந்த மாவட்டத்துடைய நான்கு தொகுதிகளாக இருந்தாலும், அது எந்த தொகுதியாக இருந்தாலும் மக்களின் பிரசனையை கேட்கிறபோது ‘தமிழ்நாட்டு ஆட்சியில ஒன்னும் இல்ல. இல்லவே இல்லை’ என்பதுதான் உங்களுடைய உரையின் மூலமாக என்னால் உணரமுடிந்தது. மக்களுடைய கோரிக்கை எல்லாம் ஏதோ பல்லாயிரம் கோடி திட்டங்களுக்கான கோரிக்கைகள் அல்ல. அவை எல்லாமே அவர்களுடைய அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்னைகள். அதை தீர்க்கத்தான் கோரிக்கை வைக்கிறார்கள். அதை கூட பழனிசாமி அரசாங்கம் நிறைவேற்றவில்லை.

பல்லாயிரக்கணக்கான மக்கள் என்னிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்ததை பார்த்து மிரண்டுப்போன பழனிசாமி, குறைதீர்க்கும் வேளாண்மை திட்டம் கொண்டுவரப் போவதாகவும் அதற்கு போன் செஞ்சா போதும் அப்படின்னும் சொல்லிட்டு இருக்காரு. அதனால ஸ்டாலினுக்கு இனி வேலை இல்லைன்னு சொல்லியிருக்காரு. கடந்த 4 ஆண்டுகாலமாக பழனிசாமிக்கு இந்த புத்தி வரல. இந்த ஸ்டாலின் சொன்ன பிறகுதான், ஆட்சி முடியப்போகும் நேரத்தில் தான் புத்தி வருகிறதா?. யார் முதலமைச்சர்? பழனிசாமியா.. இந்த ஸ்டாலினா.. இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்.

அதுவும் புகாரை செல்போன் மூலமாக சொல்லனுமாம். 2016ஆம் ஆண்டு அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் செல்போன் தரப்படும் என்று சொன்னது. ஆனா, தரல. பழனிசாமி கொடுத்தாரா… இல்லை. அல்வாதான் கொடுத்துக்கிட்டு இருக்கார். ‘எல்லா மக்கள் குறையையும் நான் தீர்த்து விட்டேன். ஸ்டாலினிடம் மக்கள் மனு கொடுக்கல’ அப்படின்னு பழனிசாமி சொல்லியிருக்கிறார். அதை பத்திரிகையில் படித்தேன். கடந்த நான்கு ஆண்டுகளாக பழனிசாமி எதையும் செய்யவில்லை என்பதற்காக தான் தமிழ்நாட்டு மக்கள், தங்கள் மனுக்கள் மூலம் சொல்லி வருகிறார்கள்.

இந்த நிலையில ‘பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் ஸ்டாலினால் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாது’ அப்படின்னு பழனிசாமி சொல்லியிருக்காரு. பழனிசாமி ஆட்சியில் குறைகளை கண்டுபிடிக்க பூதக்கண்ணாடி தேவையில்லை. கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலே தெரிஞ்சிடும்.

எப்படினா, திடீரென விழுப்புரத்தில் தடுப்பணை உடைந்து விடும் சத்தம் வரும், படார்னு, தாராபுரம் பாலத்தில் விரிசல் விடும் சத்தம் வரும். கரூரில் மினி கிளினிக் உடைந்த சத்தம் வரும்.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

இதெல்லாம் பொதுத்துறை மந்திரியான பழனிசாமியின் கைங்கரியம் என்று அர்த்தம். இது எல்லாத்தையும் காதாலையே கேட்கலாம். கண்ணை திறந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவரின் ஊழல் ஆட்சிக்கு உதாரணம் தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை உடைந்த காட்சி ஒன்று போதாதா. 25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரு மாத காலத்தில் உடைந்து விழுந்துடுச்சு. உடைந்தது அணை அல்ல சுவர் தான் என்று சட்டத்துறை அமைச்சர் சொல்றாரு.

காலையில பார்த்தா அணைனு சொல்லுவாரு, ராத்திரியில பார்த்தா சுவர்னு சொல்லுவாரு அப்படி ஒரு ஆளு தான் சண்முகம். இன்னும் அணையை திறக்கலனு சொல்லியிருக்காரு. ஆனா, 20.12.2020 அன்று தான் திறந்துவச்சாங்க. அண்ட புழுகள்… ஆகாச புழுகள்… அதான் இது. ஆனா, நாங்க இன்னும் அணையை கட்டலனு சண்முகம் சொல்லிவிடவில்லை.

ஒரு படத்துல வடிவேலு, ‘கிணத்தை காணோம்’ என்று சொல்வதைப்போல பேசிக்கிட்டு இருக்காரு சண்முகம். ஊழல் ஒப்பந்தம் காரணமாக இந்த அணை உடைந்து விழுந்திடுச்சு. அந்த ஒப்பந்ததாரர் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அந்த தடுப்பணை கட்டியவரை இதுவரை அரசு கைது செய்யாததற்கு என்ன காரணம்? பொதுப்பணித் துறையை கையில் வைத்திருக்கும் பழனிசாமி இதற்கு பதில் சொல்வாரா… எல்லாம் தெரிந்த சி.வி.சண்முகம் பதில் சொல்வாரா… சண்முகத்திற்கு நான் சொல்லிக் கொள்வது, உங்களுக்கு எந்த தகுதியும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் வகிக்கும் பதவி மரியாதைக்குரியது, மாண்புக்குரியது. அந்த மரியாதையை காக்கும் வகையில் நடந்துக்குங்க.

என்னை ஒருமையில் பேசுகிறார் சண்முகம். அதனால் என் தகுதி குறையப்போவதில்லை. சி.வி.சண்முகம் , உங்களை நோக்கி மைக் நீட்டுவது பேசுவதற்கு தானே தவிர, வாந்தி எடுக்க அல்ல. தி.மு.க -வுக்கு மானம் இல்லையான்னு கேட்கிறீர்களே..! உங்களை கொலைப்பண்ண ஆளு அனுப்பினாரே.. அவரு வீட்டுல தலைவாழை இலை போட்டு சாப்பிட்டீங்களே.! உங்களுக்கு மானம் இல்லையா…

மக்கள்

காலையில சின்னம்மா.., மாலையில அம்மா.., மறுநாள் காலையில அம்மம்மா. என்று மாறி திரியும் போது வெட்கம் இருந்துச்சா உங்களுக்கு. ஊருக்கு சவால்விடுவது இருக்கட்டும். சொந்த ஊருக்கு என்ன செஞ்சீங்க அதை சொல்லுங்க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம் என பழனிசாமி சொன்னாரே! துரும்பையாவது நகர்த்துனீங்களா. பாதாள சாக்கடை திட்டம் விழுப்புரத்திற்கு கொண்டுவருவோம் என்று சொன்னீர்களே! டெண்டர் விட்டு ஒன்றரை வருடமாகிறது. ஏன் இதுவரை பணிகளை துவங்கவில்லை? விழுப்புரம் நகராட்சியையாவது சிறப்பு நகராட்சியாக மாற்றினீர்களா என்றால்.. இல்லை.

இவர்களிடமிருந்து கோட்டையை மீட்கும் தேர்தல்தான் இந்த தேர்தல். இவர்கள் பொதுமக்கள் குறையை கேட்கவும் மாட்டார்கள், தீர்க்கவும் மாட்டார்கள், மக்களைப் பற்றி நினைக்கவும் மாட்டார்கள், மக்களோடு இருக்கவும் மாட்டார்கள்.

ஸ்டாலின்

இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வச்சு, மக்களாட்சிக்கு தொடக்கப்புள்ளி வைக்கணும்னு உங்களிடம் கேட்க நான் விரும்புகிறேன். கழக ஆட்சி மலரும்.உங்கள் கவலைகள் யாவும் தீரும்” என்று பேசி முடித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.