கிரிக்கெட்டை பாழாக்காதீர்கள், ப்ளீஸ் என்று வாசிம் ஜாபர் விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் 31 டெஸ்ட் போட்டிகளை விளையாடியவர் வாசிம் ஜாபர். அண்மையில் உத்தராகண்ட் மாநில கிரிக்கெட் சங்க அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியிருந்தார். சங்க நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இந்த முடிவை அவர் எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து உத்தராகண்ட் அணியில் வீரர்களை அவர்களது மதத்தின் அடிப்படையில் விளையாட தேர்ந்தெடுத்ததாக ஜாபர் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார் சங்கத்தின் செயலாளர் மஹிம் வர்மா. அந்த குற்றச்சாட்டு தனக்கு மிகுந்த மன வேதனையையும், வலியையும் கொடுத்ததாக சொல்லியிருந்தார் வாசிம் ஜாபர்.

image

அவருக்கு ஆதரவாக அனில் கும்பளேவுக்கு கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முகமது கைஃப் ஒரு நீண்ட கடிதத்தை எழுதியுள்ளார். “1996 இல் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் என்னுடன் விளையாடிய புவன் சந்திரா ஹர்போலாவிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. அவர் என்னுடன் கான்பூர் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் ஒன்றாக தங்கியவரும் கூட. செல்போனில் பேசிய அவர் ‘வாசிம் ஜாபர் குறித்த செய்திகளை படித்தாயா’ என கேட்டார். அது குறித்து பேசியதே எனக்கு மிகவும் வலியை தந்தது, சோகாமாக உணர்ந்தேன். பேசி முடித்த பின்பு என்னுடைய நினைவுகள் எல்லாம் கடந்த காலத்துக்கு சென்றது”

“கான்பூர் ஹாஸ்டல் அறையில் நாங்கள் 5 பேர் தங்கியிருந்தோம். ஹர்போலாவின் அறை எங்களின் அறையில் எதிரில் இருந்தது. அந்த சிறிய அறையில் எப்படியோ ஒருவருக்கு ஒருவர் அட்ஜஸ்ட் செய்து படுப்போம். ஒவ்வொரு நாள் காலையிலும் ஹர்போலாவின் அறையில் இருந்து அகர்பத்தி வாசனை எங்கள் அறை முழுவதும் வரும். ஹனுமான் ஸ்லோகங்கள் என் காதுகளில் கேட்கும். நான் என்னுடைய அறையில் அப்போது நமாஸ் செய்வேன். பதின்ம காலங்களில் ஒவ்வொரு நாள் காலையும் கடவுளின் பெயராலேயே அப்போது விடிந்தது. அவை அழகான நாட்கள்”

image

“பின்பு நாங்கள் வளர்ந்தோம். நான் முழுநேர கிரிக்கெட் வீரரானேன், ஹர்போலா காவல்துறை அதிகாரியானார், ஆனால் எங்களது நட்பு இப்போதும் தொடர்கிறது. எப்போது விளையாட்டுக்கு குறுக்கே மதம் வந்தது என தெரியவில்லை. நான் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு அணிகளுக்காக விளையாடி இருக்கிறேன். இந்தியாவுக்காகவும், கிளப்புக்காகவும் ஏன் இங்கிலாந்தின் கவுண்ட்டி அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறேன்.ஆனால் என்னுடைய நம்பிக்கையை வேறு ஒருவர் மீது நான் திணித்தது இல்லை. ரன்கள் எடுக்கவில்லை என கவலைப்பட்டு இருக்கிறேன், சக அணியினரை உத்வேகப்படுத்தியிருக்கிறேன், போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என நினைத்திருக்கிறேன். ஆனால், ஒருபோதும் சகவீரர் என்னுடைய மதத்தை பற்றி மட்டும்தான் யோசிக்கிறானா என நினைத்து இல்லை”

“நான் அலகாபாத்தில் இருந்து வந்தவன். என்னுடைய வீடு பண்டிதர்கள் வசிக்கும் காலனிக்கு அருகிலே இருந்தது. அங்குதான் எனக்கு கிரிக்கெட் மீதான காதல் பிறந்தது. நாங்கள் இணைந்துதான் கிரிக்கெட் விளையாடினோம். எங்களை இணைத்தது கிரிக்கெட் என்ற நூல்தான். இந்திய அணியை கூட ஒப்பிட வேண்டாம், உள்ளூர் அணிகளில் மதங்களை கடந்துதான் கிரிக்கெட் விளையாடினோம். எப்படியாவது இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே எங்களது ஒற்றை இலக்காக இருந்தது. என்னுடைய குணங்கள் முதல் பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் மாற்றியது கிரிக்கெட்தான். அத்தனை விதமான மனிதர்களுடன் நெருங்கி பழக்கக்கூடிய வாய்ப்பை கொடுத்தததும் கிரிக்கெட்தான்”

image

“சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் கிட் பேக்கில் அவர் குருவாக நினைத்த சாய் பாபாவின் படம் இருக்கும். விவிஎஸ் லட்சுமணனின் கிட் பேக்கிலும் கடவுள் இருப்பார். அதேபோல ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், சவுரவ் கங்குலி அப்போதைய பயிற்சியாளர் ஜான் ரைட் என அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தது. நாங்கள் ஒருபோதும் மதத்துக்காக விளையாடவில்லை. நாங்கள் கிரிக்கெட்டுக்காக விளையாடினோம், நண்பர்களுக்காக விளையாடினோம், இந்தியாவுக்காக விளையாடினோம்”

ஜாபருக்கு இது எவ்வளவு கடினமான தருணம் என எனக்கு புரிகிறது. இவற்றையெல்லாம் ஜாபர் விரிவாக பேச எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார். நாம் இருக்கும் காலக்கட்டம் எப்படி இருக்கிறது என்பதனை நாம் உணரலாம். இந்தக் காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தில் வரும் மோசமான கருத்துகள் அனைத்தும் நம் நாட்டை பிளவுப்படுத்தக் கூடுபவை. பிரார்த்தனை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். நான் டிரெஸிங் ரூமில் வழக்கமான நமாஸை மேற்கொண்டதில்லை. மொயின் அலி நமாஸ் செய்வதற்காக தன்னுடைய கிரிக்கெட் கிட்டை ஓரமாக நகர்த்தி வைத்த இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரீம் ஹிக் பற்றியும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவரவர் நம்பிக்கை அவர்களுக்கானது. இதனை மற்றவர்கள் மீது திணிக்காத வரை ஒன்றும் குற்றமில்லை” என முகமது கைஃப் தன்னுடைய நீண்ட கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.