‘ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எனக்கு ரஸ்கு சாப்பிடுற மாதிரி’-ன்னு கெத்தாக சொல்லக் கூடியவர்களுக்காவே வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் கேரியர்தான் ‘ரிஸ்க் மேனேஜ்மென்ட்’.

ஸ்டார்ட்-அப்கள் முதல் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை எல்லா தொழில் நிறுவனங்களுக்குமே இன்றைய முதன்மைத் தேவையாக இருக்கிறது ‘ரிஸ்க் மேனேஜ்மென்ட்’ பிரிவு. ஆரம்பத்தில் இன்ஷூரன்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களில் மட்டுமே இந்தத் துறை சார்ந்த திறமையாளர்களின் தேவை அதிகம் இருந்தது. ஆனால், கொரோனா காலம் தந்த தாக்கத்தால், அனைத்துத் தொழில் துறை நிறுவனங்களிலுமே ரிஸ்க் மேனேஜர்கள், ரிஸ்க் மேனேஜ்மென்ட் குழுவின் தேவை உணரப்பட்டுள்ளது. இன்று பல நிறுவனங்களும் ரிஸ்க் மேனேஜ்மென்ட்டுக்காகவே ஒரு குழுவை நியமித்து வருவதையும் பார்க்க முடிகிறது.

கொரோனா காலம் எத்தனையோ வேலை வாய்ப்புகளைப் பறித்திருந்தாலும், புதுப்புது வாய்ப்புகளை, பாதைகளை உருவாக்கியிருப்பதும் பாசிட்டிவான விஷயம். அதில் ஒன்றுதான் ‘ரிஸ்க் மேனேஜ்மென்ட்’ என்னும் கேரியர் வாய்ப்பு.

பொதுவாக, காமர்ஸ் – வணிகம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுப்பவர்கள், படித்தவர்கள் இந்தப் பிரிவில் செயலாற்றலாம். திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் மட்டுமின்றி, நல்ல சம்பளமும் கிடைப்பது நிச்சயம்.

image

கொரோனா பேரிடர் போன்ற சூழல் மட்டுமல்ல, சர்வதேச பொருளாதார நெருக்கடி முதல் உள்ளூர் பிரச்னைகள் வரை பல்வேறு காரணங்களால் தங்கள் நிறுவனங்கள் சந்திக்கும் ரிஸ்குகளிலிருந்து மீட்பது மட்டுமின்றி, ரிஸ்க் இல்லாத சூழலை உருவாக்குவதுடன், எந்த நேரத்திலும் சரியான ரிஸ்க் எடுப்பதற்குத் தயாராக இருப்பதற்கும் ‘ரிஸ்க் மேனேஜ்மென்ட்’ அவசியமாகிறது. அதாவது, ஒரு தொழில் நிறுவனத்தில் ஒரு பக்கம் சரிவு ஏற்படும்போது, அந்தச் சரிவை சரிகட்டுவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து லாபம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பதுதான் ‘ரிஸ்க் மேனேஜ்மென்ட்’ குழுவின் முக்கிய வேலை.

ஒரு நிறுவனத்துக்கு பல்வேறு காரணங்களால் வரக்கூடிய ரிஸ்குகளை முன்கூட்டியே கண்டறிவது, துல்லியமாக கணிப்பது, சரியான நேரத்தில் துரித நடவடிக்கைகளுக்கு துணை நிற்பது, இக்கட்டான சூழலிலும் நிறுவனம் நஷ்டமடையாமல் பார்த்துக்கொள்வது முதலானவைதான் ‘ரிஸ்க் மேனேஜ்மென்ட்’டின் சிறப்பு அம்சங்கள். நிதி சார்ந்த பிரச்னைகள் மட்டுமல்ல, நிதியுடன் தொடர்புடைய எவ்வித நெருக்கடிகளைகளும் சமாளிக்கும் திறன் இங்கே அவசியமாகிறது.

உதாரணமாக, ஒரு தொழில் நிறுவனம் தன் வழக்கமான பாணியை மாற்றி, முன் அனுபவமே இல்லாமல் அனைத்துப் பணியாளர்களையும் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ முறையின்கீழ் மிகக் குறைந்த காலத்தில் தயார்ப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், அதை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் இந்த ‘ரிஸ்க் மேனேஜ்மென்ட்’ டீமுக்குதான் முதலில் இருக்கும். அப்படி துரிதமாக செயல்பட்டதன் விளைவாகத்தான் கொரோனா காலத்தில் பல நிறுவனங்கள் வீழ்ச்சி ஏற்படாமல் மீட்கப்பட்டன.

ரிஸ்க் மேனேஜ்மென்ட்டில் வணிகம் சார்ந்த பிரிவுதான் அதிமுக்கியத்துவம் பெறுகிறது. அதை ‘என்டர்ப்ரைசஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட்’ (Enterprise Risk Management – ERM) என்று சொல்கிறார்கள். இதில், ஒரு நிறுவனத்தின் ரிஸ்க் மேனேஜ்மென்ட் கொள்கைகள், நிர்வாகக் குழு அமைத்தல், வழிமுறைகளை உருவாக்குதல் மற்றும் அந்த வழிமுறைகளை நடைமுறைப்படுத்துதலும் அடங்கும்.

நீங்கள் ஒரு சிறந்த ரிஸ்க் மேனேஜராக வலம்வர வேண்டுமென்றால், அதற்கு படிப்பு தவிர மேலும் சில முக்கிய திறன்களும் தேவை. பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறன், எதையும் அலசி ஆராயக்கூடிய சிந்தனைத் திறன், துரிதமாக முடிவெடுக்கும் ஆற்றல், எதையும் பேசி கன்வீன்ஸ் செய்யக் கூடிய பேச்சாற்றால், ஊழியர்கள் தொடங்கி க்ளையன்ட் வரை அனைத்துத் தரப்பினரையும் எதிர்கொண்டு சமாளிக்கும் திறமை, எந்த நெருக்கடியான சூழலிலும் மன அழுத்தங்களுக்கு ஆளாகாமல் பக்குவமாக செயல்படும் திறன், மிகக் குறிப்பாக நிதி சார்ந்த அறிவும் வணிக உத்திகளும் தெரிந்திருக்க வேண்டும்.

image

இந்தத் துறைக்கு அடிப்படை என்று பார்த்தால், ப்ளஸ் டூவுக்குப் பிறகு இளங்கலை அல்லது முதுகலைப் பட்டப்படிப்பு முக்கியம். எந்தத் தொழில்துறை சார்ந்த நிறுவனங்களில் பணியில் சேருகிறீர்களோ, அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றிப்பதும் வலுசேர்க்கும். ரிஸ்க் மேனேஜ்மென்ட்களுக்கென இப்போது சர்ட்டிஃபிகேட் கோர்ஸ்களும் உள்ளன.

நிதித்துறை சார்ந்த நிறுவங்கள் மட்டுமின்றி ஆட்டோமொபைல், மருந்தகம், டெலிகாம், சில்லறை விற்பனை, வங்கி, இ-காமர்ஸ், ஐடி – தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், எனர்ஜி, உற்பத்தித் துறைகள் என பல்வேறு துறைகளைச் சார்ந்தும் ரிஸ்க் மேனேஜ்மென்ட் வேலை வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. ரிஸ்க் மேனேஜ்மென்ட் அனாலிசிஸ்ட், அசோஷியேட் ரிக்ஸ் மேனேஜர்கள், ரிஸ்க் கன்சல்டன்ட், ரிஸ்க் ஹெட்ஸ், தலைமை ரிஸ்க் ஆஃபிசர் என இந்தப் பிரிவுக்குள் பல விதமான போஸ்டிங்கும் உள்ளன.

நிதித்துறை என்று எடுத்துக்கொண்டால் என்டர்பிரைசஸ் ரிஸ்க் மேனேஜெமென்ட், ஃபைனான்சியல் ரிஸ்க் மேனேஜ்மென்ட் ஆகிய கோர்ஸ்களும், சைபர் பாதுகாப்புத் துறையில் டிஜிட்டல் ரிஸ்க் மேனேஜ்மென்ட் படிப்பு போன்றவற்றை உதாரணமாகக் கொள்ளலாம்.

ரிஸ்க் மேனேஜ்மென்ட் என்பதை வெறும் செலவினமாகப் பார்க்காமல், தங்களது நிறுவனம் எந்தச் சூழலிலும் மூழ்காமல் காத்திடும் பிரிவாகப் பார்ப்பதால் இந்தப் பிரிவுக்கு நல்ல சம்பளமும் வழங்க பல நிறுவனங்களும் முன்வருகின்றன.

Financial Risk Management (FRM) Certification, Enterprise Risk Management (ERM), MBA / Masters in Risk Management, Project Risk Management certification, Insurance-related Risk Management diploma / certification முதலான கோர்ஸ்களை நம்பகமான கல்வி நிறுவனங்கள் வாயிலாகப் பெறலாம்.

இனி வரும் காலத்தில் எந்த நேரத்தில் எது மாதிரியான ரிஸ்க் வரும் என்பது கணிக்க முடியாத ஒன்று என்பதால், ‘ரிஸ்க் மேனேஜ்மென்ட்’ கேரியருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பது நிச்சயம்.

– தமிழ்செல்வி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.