‘சக்கா ஜாம்’ எனப் பெயரிப்பட்டுள்ள மிகப் பெரிய போராட்டம் பற்றியும், இதன் பின்னணியில் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் ‘மகாபஞ்சாயத்துக்கள்’ குறித்தும், இந்தத் திட்டங்களை முறியடிக்க முள்வேலி உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையும் சற்றே விரிவாகப் பார்ப்போம்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை விவசாயிகள் தலைவர்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே 12 முறை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

இதனையடுத்து, ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் சில வன்முறைகள் நடந்தன, ஒரு விவசாயி உயிரிழந்தார். டிராக்டர் அணிவகுப்பில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காணாமல் போயுள்ளதாக பஞ்சாப் மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது. தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்துவண்ணம் உள்ளது.

இதற்கிடையே, டெல்லி – உத்தரப் பிரதேசம் எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து முன்னேறுவதை தடுக்கும் விதமாக காசிபூர் பகுதி சாலையில் இரும்பு முட்களை சாலையில் பதித்துள்ளனர் டெல்லி போலீசார். காசிப்பூர் எல்லை, சிங்கு, திக்ரி பகுதிகளில் இருந்து டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளைத் தடுக்கவே இப்படி சிமென்ட் தடுப்புகள், கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் நடுச் சாலைகளில் ஆணிகள் பதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் எல்லைகளில் தற்காலிக தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே விவசாயிகளின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த தண்ணீர், மின்விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முடக்கம், இணையசேவை முடக்கம் என மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்தத் தடுப்பு முள்வேலி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

image

போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, இதை புகைப்படங்களுடன் பதிவிட்டு “இந்திய அரசே, பாலங்களை நிறுவுங்கள்… சுவர்களை அல்ல” எனக் கடுமையாக ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

திடீர் தடுப்பு ஏன்?!

குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணி கலவரத்தில் முடிந்தது. இந்தப் போராட்டம் வன்முறையாக மாறிய விவகாரத்தில் மத்திய அரசுமீது சந்தேகப்படும் விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில் உள்ளனர்.

அதன்படி, பிப்ரவரி 6-ம் தேதி நாடு முழுவதும் முக்கிய சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர். அன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை போராட்டம் நடைபெறும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

‘சக்கா ஜாம்’ எனப் பெயரிப்பட்டுள்ள இந்தப் போராட்டமும் மிகபெரிய அளவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் விவசாயிகளை தடுக்க, இப்படி முள்வேலி, தடுப்புச்சுவர் என அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மகாபஞ்சாயத்துகள்:

மகாபஞ்சாயத்துகள் என்பது பல நூறு கிராமத்தினர் ஓர் அணியாய் திரள்வது ஆகும். இப்படி நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கூடும் மகாபஞ்சாயத்துகள் அடுத்து நடைபெறவுள்ள போராட்டங்களில் முக்கியப் பங்காற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிப்ரவரி 6-ம் தேதி ‘சக்கா ஜாம்’ போராட்டம் இந்த மகாபஞ்சாயத்துகள் தீர்மானித்ததுதான் அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளின் ஒற்றுமையை காட்டவும், காசிப்பூர் எல்லை (டெல்லி – உத்தரப் பிரதேசம்) எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்று உடன் போராடுவதற்காக விவசாயிகளை அணிதிரட்டும் மகாபஞ்சாயத்துக்கள் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன.

image

மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோரில் ஒரு விவசாயிகளின் மகாபஞ்சாயத்து தங்களின் போராட்டங்களை காசிப்பூர் எல்லை (டெல்லி – உத்தரப் பிரதேசம்) எல்லைக்கு மாற்றத் தீர்மானித்து, அதன்படி, பிஜ்னோர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் இன்று காலை முதல் டிராக்டர்கள் மற்றும் பிற வாகனங்களில் காசிப்பூர் எல்லையில் குவிந்து வருகின்றனர்.

குடியரசு தின டிராக்டர் பேரணி போன்று இந்த முறை காசிப்பூர் எல்லையில் நடைபெறும் போராட்டம் மிகப்பெரிய அளவில் பேசவேண்டும் என்பதற்காக அங்கு மகாபஞ்சாயத்துக்கள் ஒன்று திரண்டு வருகின்றனர். அதற்கேற்பவே, காசிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பாரதிய கிசான் யூனியன் தேசியத் தலைவர் மகேந்திர சிங் திக்கைட், ‘முசாதிஸ்’ எனப்படும் பொது மக்களுக்கு டிரம்ஸ் அடித்து ‘கிசான் சம்மன் மகாபஞ்சாயத்தில்’ கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.

இதேபோன்ற அறிவிப்பு மாநிலம் முழுவதும் உள்ள பல கிராமங்கள் மற்றும் நகரங்களில் செய்யப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அனைத்து விவசாயிகளுக்கும் காசிப்பூரை அடைந்து இயக்கத்திற்கு பலம் அளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப விவசாயிகளும் காசிப்பூர் எல்லையை நோக்கி பயணித்து வருகின்றனர்.

– மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.