இந்த வார தொடக்கத்தில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவர் சரத் பவார் ஆகியோர் ‘மகாராஷ்டிரா – கர்நாடக சீமாவத்: சங்கர்ஷ் ஆணி சங்கல்ப்’ மகாராஷ்டிரா – கர்நாடக எல்லை தகராறு: என்ற மாநில அரசின் புத்தகத்தை வெளியிட்டனர்.

கர்நாடகாவில் மராத்தி மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகள் மகாராஷ்டிராவில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட கட்டுரைகள், செய்திகள் ஆகியவற்றில் இதழியல் தொகுப்பே இந்தப் புத்தகம்.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, “இந்த சர்ச்சை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் வரை, அந்த பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்” என்று அதிரடியாக கூறினார். ஆனால், இதே கூட்டத்தில் கலந்துகொண்ட சரத் பவார், “உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பை உறுதி செய்ய அரசாங்கம் அனைத்து சட்ட முயற்சிகளையும் எடுக்க வேண்டும்” என்பதோடு முடித்துக்கொண்டார்.

சமீபத்தில் இதே பிரச்னை தொடர்பாக ஒரு ட்வீட் ஒன்றையும் பதிவிட்டு இருந்தார் உத்தவ் தாக்கரே. அதில், “கர்நாடகா ஆக்கிரமிப்பு செய்திருக்கும் மராத்தி பேசும் மக்கள் வாழும் பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைப்பதே எல்லை போராளிகளுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

image

இப்படி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ரீதியில் உத்தவ் தாக்கரே தொடர்ந்து எல்லைப் பிரச்சனையில் அட்டாக் செய்து வருவது எரிச்சலை தர, பதிலுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், “கர்நாடகத்தின் ஓர் அங்குலம் நிலத்தை கூட எப்போதும், யாருக்கும் விட்டுத்தரமாட்டோம்.

உத்தவ் தாக்கரேவின் கருத்து கன்னடர்களுடன் மராத்தி மொழி பேசும் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதில் சிக்கலை ஏற்படுத்தும். மேலும், இது மக்களிடையே பெரும் வலியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையான இந்தியராக இருந்தால், உத்தவ் தாக்கரே கூட்டாட்சி முறைக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும். இரு மொழி மக்களிடம் இருக்கும் நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் உத்தவ் தாக்கரே பேச்சு அமைந்துள்ளது” என்றார்.

எல்லைப் பிரச்னை!

மகாராஷ்டிரா – கர்நாடக எல்லைப் பிரச்னை இன்று நடப்பது அல்ல. அரை நூற்றாண்டுகளுக்கு மேல் நடந்து வருகிறது. அவுரங்காபாத்தின் மறுபெயரிடுவதற்கான கோரிக்கையைச் சுற்றியுள்ள பிரச்னை போல, அவ்வப்போது மீண்டும் மீண்டும் இது தோன்றும். மகாராஷ்ட்ரா – கர்நாடகா எல்லையில் உள்ள 7000 சதுர கி.மீ நிலபரப்புதான் பிரச்னைக்கு காரணம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பன்முக மாகாணமாக பாம்பே பிரசிடென்சி பகுதி இருந்து வந்தது. அப்போது தற்போதைய கர்நாடகாவில் உள்ள பிஜாபூர், பெல்காம், தர்வார் மற்றும் உத்தர கன்னடா பகுதிகள் ஒரே மாகாணத்தின் கீழ் இருந்தன. இந்தப் பகுதியில் அதிகளவு மராத்தி பேசுபவர்களின் எண்ணிக்கை காரணமாக 1948-ம் ஆண்டில், பெல்காம் மகாராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் இதுவே 1956-ல் மாநில மறுசீரைமப்பு சட்டத்தின் கீழ், மொழிவாரி மற்றும் நிர்வாக வசதிகளுக்காக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, பெல்காம் கர்நாடகா வசம் வந்தது.

ஆனால், இப்பகுதியில் மராத்தி மொழி பேசும் மக்கள் இருப்பதை காரணம் காட்டி பெல்காம் பகுதியை மீண்டும் மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. அப்போதே பெரும் கலவரங்கள் இந்த விவகாரத்தை முன்வைத்து நடக்க, முன்னாள் நீதிபதி மேஹர் சந்த் மகாஜன் தலைமையில், 1966-ல் மகாஜன் கமிஷன் அமைக்கப்பட்டது.

ஒரு வருடம் கழித்து இந்தக் கமிஷன் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அதன்படி, மகாராஷ்டிரா – கர்நாடகா எல்லைப்பகுதியில் உள்ள 264 கிராமங்கள் மகாராஷ்டிராவுக்கும், பெல்காம் உள்ளிட்ட 247 கிராமங்கள் கர்நாடக மாநிலத்திற்கும் சொந்தம் எனக் கூறப்பட்டது. ஆனால், இதனை மறுத்த மகாராஷ்டிரா அரசு, மகாஜன் கமிஷனின் அறிக்கைக்கு எதிராக மேல்முறையீடு செய்தது.

image

அப்போது இருந்தே எல்லைப் பிரச்னை அவ்வப்போது தீ பற்றிக்கொள்ளும். மகாராஷ்டிராவில் எந்த அரசு அமைந்தாலும், பெல்காம் எல்லைப் பகுதியில் உள்ள 865 கிராமங்கள் தங்களுக்கு சொந்தம் என்றும் அதை மீட்ப்போம் என்றும் கூறும். அதேபோல் காங்கிரஸ், என்.சி.பி., சிவ சேனா மற்றும் பாஜக என்று ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் தவறாமல் இந்த விவகாரம் இடம்பெறும். மேலும், ஒவ்வொரு கவர்னர் உரையின்போதும் எல்லைப் பிரச்சனை குறிப்பிடப்படுவதும், அப்போது அவை உறுப்பினர்கள் கைதட்டல்களுடன் இதை வரவேற்பதும் தவறாமல் நடக்கும் நிகழ்வாக மாறிப்போனது.

தற்போதும் இதே நிலையே!

மகாராஷ்டிராவில், சிவசேனா தலைமையில் அமைந்துள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸின் மகா விகாஸ் அகாதி கூட்டணி இந்த பிரச்னைக்கு மேலும் வீரியம் சேர்த்து வருகின்றன. அதிலும், சிவசேனா எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதில் பஞ்சம் வைக்காமல் செயல்படுகிறது. ஆட்சிக்கு வந்ததுமே, உத்தவ் தாக்கரே, தனது தலைமையில் அமைச்சர்கள் ஷகன் பூஜ்பால் மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இந்த விவகாரத்தில் தீர்வுகாண ஏற்பாடு செய்தார். எல்லைப் பிரச்னை தொடர்பாக நீண்ட, விரிவான ஆய்வு மேற்கொள்ளவும், உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிராவுக்கு ஆதரவாக விரைவாக தீர்வுகள் கிடைக்கும் வகையில் செயல்படவும் இந்தக் குழு தீர்மானிக்கப்பட்டது.

இதோடு நிற்கவில்லை. நவம்பர் 1-ம் தேதி, கர்நாடக தினம் கொண்டாட்டத்தின்போது மகாராஷ்ட்ரா அமைச்சர்கள் அனைவரும், கர்நாடகாவில் மராத்தி பேசும் மக்களுக்கு ஆதரவாக கறுப்பு நிற பேண்டை அணிந்து வர வேண்டும் என்று உத்தவ் அரசு உத்தரவிட்டது. இதோ இப்போது, புத்தகம் வெளியீடு, ட்விட்டரில் சர்ச்சை கருத்து என இந்த விவகாரத்தின் தீவிரத்தை குறையாமல் பார்த்துக்கொண்டு வருகிறது.

– மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.