இன்று சங்கடஹர சதுர்த்தி. தேய்பிறையில் வரும் சதுர்த்தியே சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. இந்த நாளில் செய்யும் விநாயகர் வழிபாடு நம் சங்கடங்களை நீக்கியருளும் என்பது நம்பிக்கை.

தன் தோற்றத்தைக் கண்டு இகழ்ந்த சந்திர பகவானை விநாயகப் பெருமான் சபித்தார். அந்தச் சாபம் காரணமாக சந்திரன் தன் ஒளி மங்கத் தொடங்கினான். இதனால் கவலையடைந்த சந்திரன், தான் மீண்டும் பொலிவு பெற தேய்பிறை சதுர்த்தி நாளில் விரதமிருந்து வழிபட்டான். இதனால் மனம் மகிழ்ந்த விநாயகர் அவன் சாபத்தை நீக்கி அருளினார் என்பது புராணம்.

விநாயக வழிபாட்டின் தத்துவம்

இதன் தத்துவம், துன்பம் நம்மைச் சூழ்ந்துவிட்டால் நாம் அதை உடனே உணர்ந்துகொண்டு விநாயகப் பெருமானை சரணடைந்து வழிபட வேண்டும் என்பதுதான். விநாயகப் பெருமான், யானை முகத்தோன். யானையின் மீது ஏற வேண்டும் என்றால் அதற்கு யானை அனுமதிக்க வேண்டும். அதன் கால்களைப் பிடித்தால் அது மேலே ஏற உதவி செய்யும். அதே போன்று விநாயகப் பெருமானும் தன் பாதங்களில் சரணாகதி அடைந்தவர்களை வாழ்வில் உயர்த்திக் காப்பவர் என்பது தத்துவம்.

இன்னல்கள் நீக்கும் எளிமையான வழிபாடு

எளிமையான வழிபாட்டில் மகிழ்பவர் விநாயகப் பெருமான். பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பது வழக்கு. மஞ்சள், மண், சந்தனம், சாணம் என்று எந்தப் பொருளாலும் அவரைப் பிடித்து வைத்து ஆவாஹனம் செய்து வழிபடலாம். அவ்வாறு பிள்ளையார் பிடிக்கப் பயன்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பலன் உண்டு. அவரவர்கள் தங்கள் பிரச்னைக்கு ஏற்ப குறிப்பிட்ட பொருளைக் கொண்டு பிள்ளையாரைப் பிடித்து வைத்துப் பூஜை செய்ய அந்தப் பிரச்னை எளிதில் தீரும் என்பது நம்பிக்கை.

பிள்ளையார்!

மஞ்சள் பிள்ளையார் – திருமணத் தடை நீங்கும்

மண் பிள்ளையார் – ராஜ பதவி கிடைக்கும்

புற்றுமண் பிள்ளையார் – வியாபாரம் பெருகும், லாபம் கிடைக்கும்

வெல்லப் பிள்ளையார் – சௌபாக்கியம் உண்டாகும்

உப்புப் பிள்ளையார் – எதிரிகள் வசியமாவர்

வெள்ளெருக்கம் பிள்ளையார் – ஞானம் கிடைக்கும்

பசுஞ்சாணப் பிள்ளையார் – எண்ணிய காரியம் கைகூடும்

பச்சரிசி மாவுப் பிள்ளையார் – விவசாயம் பெருகும், விளைச்சல் அதிகரிக்கும்

வெண்ணெய் பிள்ளையார் – வியாதி அகலும்.

சங்கடஹர சதுர்த்தி நாளில் சந்திரன் உதயமாகும் நேரத்தில், வேண்டும் பலன்களுக்கு ஏற்றாற்போல, மேற்கண்ட பொருள்களில் ஏதேனும் ஒன்று கொண்டு விநாயகரைப் பிடித்து வைத்து, விநாயகர் அகவல் பாடி, ஏதேனும் ஒரு மலர் சாத்தி, எளிமையாக ஒரு பழம், தேங்காய் ஆகியன சமர்ப்பித்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் வேண்டும் வரம் கிடைத்து சங்கடங்கள் அகலும் என்பது நம்பிக்கை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.