புதுச்சேரியில் 2016 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலை தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தது காங்கிரஸ் கட்சி. அப்போது வன்னியர் சமுதாய வாக்குகளை அறுவடை செய்யும் நோக்கில், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது காங்கிரஸ் கட்சி. ஆனால், தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றவுடன், கட்சியின் சீனியர் தலைவர்களுக்கு முதல்வராகும் ஆசை தொற்றிக்கொண்டது.

நமச்சிவாயம்

அதன் தொடர்ச்சியாக முதல்வராக யாரை நியமிப்பது என்பது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலை சந்திக்காத நாராயணசாமிதான் முதல்வர் என்று அறிவித்தது காங்கிரஸ் கட்சி. அப்போது நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் ஆடிய வன்முறை வெறியாட்டத்தில் புதுச்சேரி சின்னாபின்னமானது. தொடர்ந்து நமச்சிவாயத்தை சமாதானப்படுத்தும் வகையில் அவருக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டது. அத்துடன் உள்ளாட்சி, கலால், வீட்டு வசதி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட முக்கிய இலாக்காக்களும் வழங்கப்பட்டன. அமைச்சராக இருந்துகொண்டே கட்சியின் மாநிலத் தலைவராகவும் நமச்சிவாயம் நீடித்துவந்தார்.

அவ்வப்போது நாராயணசாமி, நமச்சிவாயம் இருவருக்குமிடையில் உரசலும் அரங்கேறியது. கடந்த ஆண்டு நமச்சிவாயத்திடமிருந்து மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலை நமச்சிவாயம் தலைமையில் சந்திப்பதை விரும்பாததால்தான் அந்தப் பதவி பறிக்கப்பட்டதாக காரணமும் கூறினார்கள் காங்கிரஸார்.

ஆனாலும் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக அதிருப்தியில் இருந்தனர் நமச்சிவாயமும், அவரின் ஆதரவாளர்களும். புதுச்சேரியில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று முயன்றுகொண்டிருக்கும் பா.ஜ.க, புதுச்சேரியில் பெரும்பான்மைச் சமூகமாக இருக்கும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த நமச்சிவாயத்தைக் குறிவைத்து காய்நகர்த்தியது. `கட்சியில் இணைந்தால், நீங்கள்தான் முதல்வர் வேட்பாளர். மேலும், அதிருப்தியாக இருக்கும் எம்.எல்.ஏ-க்களை அழைத்துவந்தால் தேர்தலுக்குப் பிறகு முதல்வரும் நீங்கள்தான்’ என்று வலையை விரித்தது பா.ஜ.க. நமச்சிவாயத்துக்கு அந்த டீலிங்கில் உடன்பாடுதான் என்றாலும், பா.ஜ.கவை நம்பிச் சென்றால் அரசியலில் நமது எதிர்காலமே கேள்விக்குறியாகவும் வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்த அவர், காங்கிரஸ் கட்சியில் பல்ஸ் பார்க்க நினைத்தார்.

பா.ஜ.க இணைப்பு விழாவில் நமச்சிவாயம்

அதனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென்று கட்சிக்கு அழுத்தம் கொடுத்துப் பார்த்தார் நமச்சிவாயம். ஆனால், அதை காங்கிரஸ் கண்டுகொள்ளாததுடன், “நமச்சிவாயம் தற்போது மாற்று கட்சிக்குப் போகும் எண்ணத்தில் இருக்கிறார். அதனால் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நமச்சிவாயம் தற்காலிகமாக நிக்கம் செய்யப்பட்டிருக்கிறார்” என்று கூறி, அவரைக் கட்சியைவிட்டு நீக்கியது. அதையடுத்து சபாநாயகர் சிவக்கொழுந்துவைச் சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் ஊசுடு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான் இருவரும் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து, கடந்த 26-ம் தேதி பா.ஜ.க-வில் இணைவதற்காக டெல்லி புறப்பட்டார் நமச்சிவாயம். அவருடன் தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ-வும் சென்றார்.

டெல்லியில் முகாமிட்டிருந்த நமச்சிவாயம், 27-ம் தேதி காலை உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா ஆகியோரைச் சந்தித்து கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் காரணமாக இணைப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் காலை முதல் இரவு வரை காத்திருந்தார்.

Also Read: டார்கெட் ஜான்குமார்! – ஸ்கெட்ச் போட்ட பா.ஜ.க… ஆஃப் செய்த புதுச்சேரி காங்கிரஸ்

அதைத் தொடர்ந்து இன்று காலை இணைப்பு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று காலையும் இணைப்பு நடக்கவில்லை. இந்தநிலையில் இன்று மாலை பா.ஜ.க-வின் தேசியப் பொதுச்செயலர் அருண்சிங் முன்னிலையில் டெல்லியில் நமச்சிவாயம் இணைந்தார். அவருடன் தீப்பாய்ந்தான், தொழிலதிபர் கூடப்பாக்கம் ஜெயக்குமார் உள்ளிட்டவர்களும் கட்சியில் இணைந்தனர். மேலும், பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவையும் சந்தித்தார் நமச்சிவாயம்

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நமச்சிவாயம், “வளமான புதுச்சேரிதான் எண்ணம். அதற்காக பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறோம். புதுச்சேரிக்கு வளர்ச்சியை மோடி உருவாக்கிக் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தியா, மோடி தலைமையில் ஒளிர்கிறது. அதுபோல் புதுச்சேரியும் ஒளிர வேண்டும் என்பதே நோக்கம். முதல்வர் நாராயணசாமியின் தவறான செயல்பாடுகளால் புதுச்சேரி பின்னோக்கிச் சென்றிருக்கிறாது. அதை முன்னோக்கிக் கொண்டு செல்லவும், புதுச்சேரி வளர்ச்சிக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறோம். நிச்சயமாக புதுச்சேரியில் பா.ஜ.க ஆட்சியைக் கொண்டுவரப் பாடுபடுவோம். 2021-ல் பா.ஜ.க ஆட்சி மலர்வது உறுதி” என்று குறிப்பிட்டார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.