மத்திய அரசு அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கூறி, பல்வேறு விவசாயச் சங்கங்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டுப் போராடிவருகின்றன. இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அரசு – விவசாயிகள் இடையில் நடத்தப்பட்ட பல்வேறுகட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால், விவசாயிகள் தங்களது அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுத்துவந்தனர்.

அதன் ஒரு பகுதியாகவே கடந்த செவ்வாய்க்கிழமை, குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கிய விவசாயிகளின் டிராக்டர் பேரணி, ஒருசில நாள்கள் முன்னதாகவே திட்டமிட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டு, நிகழ்த்தப்பட்டது. இருப்பினும், எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சில வன்முறை நிகழ்வுகளால் விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது.

டிராக்டர் பேரணி

கடந்த இரண்டு மாதங்களாக அமைதியான முறையில் நடைபெற்றுவந்த போராட்டத்தில், மத்திய அரசுக்கு ஆதரவாகச் சிலர் செயல்பட்டு போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.

அதேசமயம் விவசாயிகளின் போராட்டம் திசைமாறிவிட்டதாகக் கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இரு விவசாய சங்கத்தினர் போராட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்தனர். மேலும், பிப்ரவரி 1-ம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை ஒருங்கிணைந்த விவசாய அமைப்பினர் அதிரடியாக ரத்துசெய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவ்ரீத் சிங் (24) என்னும் இளைஞர் ஒருவர், ஆஸ்திரேலியாவில் தனது மேற்படிப்பைப் படித்துவந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய அவருக்கு, கடந்த ஆண்டு தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் குறித்து, அவரின் மாமா ஒருவர் எடுத்துரைத்திருக்கிறார். இதனால், விருப்பப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று போராட்டத்தில் இணைந்திருக்கிறார் அந்த இளைஞர்.

இந்தநிலையில், குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் கலந்துகொண்ட நவ்தீர் சிங், சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புகளைக் கடந்து செல்ல முயன்றார். அப்போது தடுப்புகளை இடித்து டிராக்டர் கவிழ்ந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகருக்குச் சென்ற நவ்தீர் மான்ஸ்வீட் (21) என்னும் பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

விவசாயிகள் போராட்டம்

நவ்தீர் சிங் போராட்டத்தின்போது காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று நவ்தீரின் தாத்தா ஹர்தீப் சிங் குற்றம்சாட்டினார். ஆனால், நவ்தீரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் இறப்பதற்கு முன் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது என்பதை பரேலி காவல்துறை உயரதிகாரியான அவினாஷ் சந்திரா தெரிவித்தார். மேலும், நவ்தீர் டிராக்டர் கவிழும் சிசிடிவி காட்சிகளும் காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, நேற்று அவரது உடல் அவரது சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ராம்பூர் மாவட்டத்துக்குக் கொண்டுவரப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இறுதி ஊர்வலத்துக்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. “எனது பேரன் இறுதியில் தியாகியாக உயிரைத் துறந்திருக்கிறாஅர்” என்று பெருமையுடன் கூறியிருக்கிறார் அவரின் தாத்தா.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.