கொரோனா காலத்தில் சிறப்பான பணியினை ஆற்றிய விவசாயிகள், ராணுவத்தினர், விஞ்ஞானிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பலருக்கும் நன்றியினை தெரிவித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு தின உரையாற்றியுள்ளார்.

72ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்..

  • நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன நமது வாழ்க்கைத் தத்துவத்தின் நிரந்தரமான சித்தாந்தங்கள். இந்தக் கோட்பாடுகள் சுட்டும் பாதையில், நமது வளர்ச்சிப் பயணம் நிரந்தரமாக முன்னேற்றம் காண வேண்டும்.
  • தீவிரமான இயற்கைச் சூழல்களையும், அநேக சவால்களையும், கோவிட் பெருந்தொற்று ஆகியவற்றையும் தாண்டி நமது விவசாய சகோதர சகோதரிகள், வேளாண் உற்பத்தியில் எந்தக் குறைவையும் ஏற்பட விடவில்லை. நன்றியுடைய நமது தேசம், நமது அன்னமளிக்கும் விவசாயிகளின் நலனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கின்றது. 
  • இரவுபகலாக பாடுபட்டு, மிகக் குறைந்த சமயத்திலேயே தடுப்பூசியை மேம்படுத்தியதன் வாயிலாக, நமது விஞ்ஞானிகள் மனித சமுகமனைத்தின் நலனுக்காக புதியதொரு வரலாற்றினைப் படைத்திருக்கின்றார்கள். நாட்டிலே இந்த பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரவும், வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடுகையில், இறப்புவீதத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதிலும், நமது விஞ்ஞானிகள், மருத்துவர்கள் – நிர்வாகம் – இன்னும் பிறரோடு இணைந்து ஈடு இணையற்ற பங்களிப்பை அளித்திருக்கின்றார்கள்.  இந்த வகையில், நமது அனைத்து விவசாயிகள், இராணுவத்தினர், விஞ்ஞானிகள் ஆகியோர், சிறப்பான பாராட்டுதல்களுக்கு உரித்தானவர்கள்.
  • image
  • கொரோனா பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்க, தங்களின் உயிர்களையும்கூட பொருட்படுத்தாமல், பல இடர்களை எதிர்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், நலவாழ்வுத் துறையோடு தொடர்புடைய நிர்வாகத்தினர், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோரைக் குறிப்பிட்டுப் பாராட்ட விரும்புகிறேன். இவர்களில் சிலர் தங்கள் இன்னுயிரையும் இழந்திருக்கிறார்கள்.  
  • நமது கல்வி அமைப்புக்களும், நிறுவனங்களும், ஆசிரியர்களும், புதிய தொழில்நுட்பத்தை விரைவாகக் கைக்கொண்டு, மாணவர்களின் கல்வி தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்து கொண்டார்கள். பிஹார் போன்ற நெருக்கமான மக்கட்தொகை கொண்ட மாநிலமாகட்டும், ஜம்மு-கஷ்மீர்-லத்தாக் போன்ற கடினங்களும், சவால்களும் நிறைந்த பகுதிகளாகட்டும், சுதந்திரமான, பாரபட்சமற்ற, பாதுகாப்பான தேர்தல்கள் நடத்தப்பட்டிருப்பது, நமது ஜனநாயகம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் சாதனையாகும்.  தொழில்நுட்பத்தின் துணையோடு நீதிமன்றங்கள் நீதிவழங்கல் செயல்பாடுகளை நிறைவேற்றி வந்தன.  
  • பொருளாதார மீட்சி, எதிர்பார்த்ததை விட விரைவாக இருப்பதற்கான குறியீடுகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. தற்போதைய ஜி.எஸ்.டி வருவாயில் சாதனை படைக்கும் அதிகரிப்பு, அந்நிய முதலீடுகளைக் கவரக்கூடிய பொருளாதார அமைப்பு என்ற வகையில் பாரதம் உருவாகுதல் ஆகியன, நமது பொருளாதார மீட்சிக்கான அடையாளக் குறியீடுகள். 
  • 2020ஆம் ஆண்டினை நாம் கற்றல் ஆண்டாகவே கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து. கடந்த ஆண்டிலேயே மிகக் குறைவான காலத்திற்குள்ளாக இயற்கையன்னை தனது தூய்மையான, புத்துணர்ச்சி அளிக்கும் வடிவத்தை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறாள். 
  • சங்கடத்தை சந்தர்ப்பமாக மாற்றி, பிரதமர் தற்சார்பு பாரத இயக்கத்தை அறிவித்தார். இந்த இயக்கம் காரணமாக, நுண்-சிறு-நடுத்தர தொழில்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டு, ஸ்டார்ட் அப் சூழலமைப்பை மேலும் பலமானதாக ஆக்கி, பொருளாதார முன்னேற்றத்துடன் கூடவே, வேலைவாய்ப்பை உருவாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  
  • சுதந்திரம் அடைந்த 75ஆம் ஆண்டுக்குள்ளாக, அதாவது 2022ஆம் ஆண்டுக்குள்ளாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடிப்படை வசதிகளுடன் கூடிய கான்க்ரீட் வீட்டைப் பெற்றுத் தருதல் முதல், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகுதல் வரையிலான மகத்துவம் வாய்ந்த இலக்குகளை நோக்கி முன்னேறி, சுதந்திரம் அடைந்த 75ஆம் ஆண்டு என்ற வரலாற்று சிறப்புமிக்க நிலையை நாம் எட்டுவோம்.
  • 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கையில், தொழில்நுட்பத்தோடு கூடவே, பாரம்பரியத்தின் மீதும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச அரங்கிலே, அறிவின் கருவூலமாக உருமாற்றம் பெறும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும் புதிய பாரதத்தின் அடித்தளக்கல், இதன் வாயிலாக நடப்பட்டிருக்கிறது.  
  • தற்சார்பு பாரதம், கொரோனா நுண்கிருமியிடமிருந்து தற்காத்துக் கொள்ள, தனக்குரிய தடுப்பூசியைத் தயார் செய்து விட்டது. நீங்கள் அனைவரும் விதிமுறைகளின்படி, உங்களுடைய ஆரோக்கியத்தின் பொருட்டு, உயிர்காக்கும் இந்தத் தடுப்பூசியால் நற்பலன்களைக் கண்டிப்பாக அடைய வேண்டும் என்று நாட்டுமக்களிடத்தில் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.  கண்டிப்பாக நீங்கள் இதைப் போட்டுக் கொள்ளுங்கள்.  உங்கள் உடல்நலனே, உங்களின் முன்னேற்றப் பாதையின் கதவுகளைத் திறந்து வைக்கும். இன்று, பாரதம் உலகின் மருந்தகம் என்று உகந்தவகையில் அழைக்கப்படுகிறது.  நாம் இப்போது தடுப்பூசியை பிற நாடுகளுக்கும் கிடைக்கச் செய்து வருகிறோம்.
  • கடந்த ஆண்டு, நமது எல்லைப்புறங்களில் விரிவாக்கவாத செயல்பாடுகளை நாம் எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனால் நமது வீரம்நிறைந்த இராணுவத்தினர், இவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி விட்டார்கள்.  இந்தச் செயல்பாட்டின் போது, நமது 20 வீரமான இராணுவத்தினர் வீரகதி எய்தினார்கள்.  அமைதியின் பொருட்டு கடப்பாடு உடையவர்களாக நாம் இருந்தாலும், நமது தரை-வான்-கப்பல் படைகள், நமது பாதுகாப்பிற்கு எதிராக புரியப்படும் பொறுப்பற்ற செயல்பாட்டை முறியடிக்க, முழுமையான தயார்நிலையில் இருக்கின்றார்கள்.  
  • கடந்த சில ஆண்டுகளில், பாரதத்தின் ஆளுமையின் வீச்சு மேலும் விரிவடைந்திருக்கிறது. இதில் உலகின் பல துறைகளும் அடங்கும்.  ஐநாவின் பாதுகாப்புக் குழுவின் தற்காலிக உறுப்பினராக, அசாதாரணமான ஆதரவோடு பாரதம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதே, அதன் வலுத்திருக்கும் வீச்சின் அடையாளம். 
  • நமது அரசியலமைப்புச்சட்ட மந்திரங்களை நாம் நினைவுகூர்ந்து கொண்டிருப்பது மிகவும் அவசியம். நமது தேசப்பிதாவின் வாழ்க்கை பற்றியும், அவரது சிந்தனைகள் பற்றியும், நாம் ஆழமாக நினைத்துப் பார்ப்பதை, நமது அன்றாட வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும் நமது குடியரசு என்ற திட்டத்தின் கோட்பாட்டுச் சொல்லே சமத்துவம்.  கிராமவாசிகள், பெண்கள், சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரான பட்டியலினத்தவர்கள், பழங்குடிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு சமூக சமத்துவம் கண்ணியத்தை அளிக்கிறது.   அரசியலமைப்புச்சட்ட வரைவை 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதியன்று, அரசியலமைப்புச்சட்டப் பேரவையில் சமர்ப்பித்து உரையாற்றிய, பாபாசாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் அவர்கள் சுட்டிக்காட்டிய அரசியலமைப்புச்சட்ட அறநெறிப் பாதையில், நாம் தொடர்ந்து பயணிப்போம். 
  • நான் மீண்டும் ஒருமுறை குடியரசுத் திருநாளை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.