அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் தனது முதல் நாள் பணியை மின்னல் வேகத்தில் செய்துள்ளார் என்பது ஆச்சர்யம் தரும் உண்மையாக உள்ளது. முதல்நாள் பணியில் இதற்கு முன் எந்த அதிபரும் செய்யாத வகையில் ஆணைகளில் கையெழுத்திட்டு அசத்தியுள்ளார்.

பதவியேற்ற முதல் நாளில் பைடன் நிர்வாக ஆணைகள் 15, பிரசிடென்ஷியல் மெமோக்கள் 2 என மொத்தம் 17 கோப்புகளில் கையெழுத்திட்டார். இது எந்த அதிபரும் செய்யாத ஒரு சாதனை. இதற்கு முன்பு இருந்த ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாள் 8 கோப்புகளிலும், ஒபாமா 9 கோப்புகளிலும், ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2 கோப்புகளிலும், கிளின்டன் 3 கோப்புகளிலும் கையெழுத்திட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரீஸ் ஒப்பந்தம்:

பைடன் கையொப்பமிட்ட கோப்புகளில் முக்கியமானது, பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய இசைவு தெரிவித்து பைடன் கையொப்பமிட்டார். புவியின் வெப்பம் அதிகரித்து வருவதைத் தடுப்பது குறித்த நடவடிக்கைகளுக்கு இணைந்து செயல்பட, 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் ஆண்டு, 196 நாடுகள் கையெழுத்திட்டன. அப்போதைய அதிபர் ஒபாமா கையொப்பமிட்டிருந்த இந்த ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா விலகுவதாக அதன் பின்னர் அதிபரான ட்ரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

image

முகக்கவசம் கட்டாயம்:

கொரோனா பரவல் அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வருகிறது. ட்ரம்ப் அதிபராக இருந்தபோது அமெரிக்காவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை. ஆனால், அதை பைடன் தற்போது மாற்றி அமைத்துள்ளார். அதிபரான உடன் அமெரிக்காவில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்துள்ளார். முகக்கவசம் அணிந்திருந்தால் அமெரிக்கர்களின் ஒட்டுமொத்த உயிரிழப்பில் 50,000 பேரை காப்பாற்றி இருக்கலாம் என்று கூறி இன்று முதல் அமெரிக்கர்கள் 100 நாள்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற திட்டத்தை ஜோ பைடன் தொடங்கிவைத்துள்ளார்.

மீண்டும் உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா:

கொரோனா பிரச்னையின் காரணமாக உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் முடிவை ட்ரம்ப் எடுத்திருந்தார். இதனால், அமெரிக்கா கூடுதல் சிக்கல்களை சந்தித்தது. தற்போது அதிலிருந்து விடுபடும் பொருட்டு உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணையும் ஒப்பந்தத்தில் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

கீஸ்டோன் எரிவாயு குழாய் திட்டம்:

கனடா – அமெரிக்கா இடையேயான சர்ச்சைக்குரிய கீஸ்டோன் எக்ஸ் எல் எனப்படும் எரிவாயு குழாய் அமைப்புத் திட்டத்துக்கு ட்ரம்ப் அரசு அளித்திருந்த ஒப்புதலை பைடன் தனது முதல்நாள் கையெழுத்து மூலம் திரும்பப் பெற்றார். இந்த கீஸ்டோன் எரிவாயு குழாய் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பூர்வகுடி அமெரிக்கர்களும் கடந்த 10 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த எதிர்ப்பை உணர்ந்து தற்போது திட்டத்தை திரும்பப்பெற்றுள்ளார் பைடன்.

கல்விக் கடன் அவகாசம்:

தனது முதல்நாள் பணியில் மற்றொரு முக்கிய அம்சமாக மாணவர்களின் கல்விக் கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பை உறுதி செய்தார் பைடன். தனது பிரச்சாரத்தின்போது கொடுத்த வாக்குறுதியை இதன்மூலம் நிறைவேற்றியுள்ளார்.

இஸ்லாமிய நாடுகள் மீதான தடை நீக்கம்:

ட்ரம்ப் ஆட்சியில் மிகவும் சர்ச்சைக்குள்ளான விஷயம் இது. இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேறுவதை தடுக்கும் வகையில் ட்ரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவு பல இஸ்லாமிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு பயணத்தைத் தடுத்தது. ஆனால், அதனை தற்போது பைடன் நீக்கியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த தனிநபர்களுக்கான விசா செயலாக்கத்தை மறுதொடக்கம் செய்யவும், தடை காரணமாக அமெரிக்காவிற்கு வருவதைத் தடுத்தவர்களுக்கு ஏற்படும் தீங்குகளை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை உருவாக்கவும் வெளியுறவுத்துறைக்கு தனது உத்தரவின் மூலம் பைடன் அறிவுறுத்தியுள்ளார்.

image

இதேபோல், குடிமக்கள் அல்லாதவர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு எண்ணிக்கையில் இருந்து விலக்குவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டத்தையும் தடை செய்துள்ளார் பைடன்.

மேலும், அங்கீகரிக்கப்படாத குடியேறிகளைக் கண்டுபிடித்து நாடு கடத்தும் ட்ரம்ப் ஆட்சியின் மற்றொரு உத்தரவுக்கு முதல்நாளே தடை போட்டுள்ளார் பைடன். இந்த உத்தரவு அமெரிக்காவில் வசித்து வரும் லைபீரியர்களை நாடு கடத்துவதைத் தடுக்கிறது.

மெக்சிகோ சுவர் விவகாரம் & இனப் பாகுபாடு: சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் வகையில் அமெரிக்கா – மெக்ஸிகோவுடனான எல்லைச் சுவரின் கட்டுமானத்தை தனது ஆட்சிக் காலத்தில் தொடங்கியிருந்தார் ட்ரம்ப். இந்தக் கட்டுமான பணிக்கு நிதி அளிக்கும் வகையில் ட்ரம்ப் பிறப்பித்த அவசரகால உத்தரவையும் பைடன் திரும்பப் பெற்றுள்ளார்.

இதேபோல் இனப்பாகுபாடு, பாலின சமத்துவம் தொடர்பான மற்ற சில உத்தரவுகளையும் பைடன் முதல் நாள் பணியில் ட்ரம்ப் நிர்வாகம் செய்த பணிகளுக்கு எதிராக செய்துள்ளார்.

இந்த உத்தரவுகளை போலவே அமெரிக்க பொருளாதாரம் தொடர்பான சில உத்தரவுகளிலும் பைடன் கையெழுத்திட்டு, எந்த அதிபரும் செய்யாத சாதனைகளை தான் பதவியேற்ற முதல்நாளிலேயே அசால்ட்டாக செய்துமுடித்துள்ளார்.

– மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.