கொஞ்சம் கொஞ்சமாக வறண்ட பூமியாக மாறிய நிலத்தில் இயற்கை உயிர்வேலி, தடுப்பணை, பண்ணைக்குட்டை, உணவு பழக்காடு, பனை, கொழுக்கட்டை புல், துவரை என்று பல்வேறு பயிர்களைப் பயிரிட்டு, `ஒருங்கிணைந்த பண்ணையம்’ என்ற விவசாய கட்டமைப்புக்குள் நுழைந்திருக்கிறார், அஷ்வத். கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் முடித்த இவர், அது சம்பந்தப்பட்ட வேலைக்குச் செல்லாமல், தனது குடும்பத்தின் பாரம்பர்ய தொழிலான விவசாயத்தைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

உயிர்வேலி முன்பு அஷ்வத்

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வேலப்பகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் அஷ்வத். 26 வயது இளைஞரான இவர், குடும்பத் தொழிலான ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீவனம் மொத்தமாக விற்பனை செய்யும் தொழிலைக் கவனித்துக்கொண்டே, விவசாயத்தையும் இயற்கை முறையில், சில புது முயற்சிகளோடு செய்து வருகிறார். வேலப்பகவுண்டன் புதூரில் உள்ள எட்டு ஏக்கர், அருகிலுள்ள குரங்காடு பகுதியில் 10 ஏக்கர் என மொத்தம் 18 ஏக்கர் நிலமிருக்கிறது. அதில், எட்டு ஏக்கரில்தான் `ஒருங்கிணைந்த பண்ணையம்’ என்ற முயற்சியை, புதிய உத்திகளோடு செய்திருக்கிறார்.

தனது பண்ணையில் வேலையாக இருந்த அஷ்வத்தை சந்தித்துப் பேசினோம்.

“சிறுவயது முதல் எனக்கு விவசாயம், ஆடு, மாடு, புறானு கிராமத்து வாழ்க்கைதான் பிடிச்சிருந்துச்சு, அதனால், `என்ன படிச்சாலும், பின்னாடி கிராமத்துலேயே விவசாயத்தைப் பார்க்கணும்’ங்கிறதுல உறுதியா இருந்தேன். எங்க குடும்பம் பூர்வீகமா விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு வந்துச்சு. அதோடு, தாத்தா காலத்தில் இருந்து, கரூர் சீனிவாசபுரத்தில் மாடு, ஆடு, கோழி போன்ற கால்நடைகளுக்கு தீவனத்தை மொத்தமா விற்கும் தொழிலைப் பார்த்துட்டு வந்தாங்க. ஊர்ல உள்ள மொத்த நிலத்திலயும் கடலை, மிளகாய், நெல்னு பல விவசாயம் பண்ணிக்கிட்டு வந்தாங்க. ஆனா, 2000-ம் வருஷத்துக்குப் பிறகு மழைப்பொழிவு குறைஞ்சு, எங்க ஊர்ல உள்ள மொத்த நிலமும் மானாவாரியாக மாறிக்கிட்டு வந்துச்சு.

வெள்ளாமை

Also Read: மாணவர்களுக்கு இயற்கை விவசாய விழிப்புணர்வு, கல்லூரியில் 50 சென்ட் தோட்டம்… கலக்கும் தாளாளர்!

அதனால், மழையை நம்பி சோளம், துவரைனு மானாவாரி பயிர்களைப் போட்டாங்க. கடந்த நாலு வருஷமா வறட்சி இன்னும் அதிகமாயிட்டு. மக்கள் குடிக்கவும் கால்நடைகளுக்கு தண்ணி காட்டவும், டிராக்டர்ல தண்ணீர் கொண்டு வர்றவங்ககிட்ட, காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய சூழல் வந்துச்சு. இந்த நிலையில், 2017-ம் ஆண்டு சென்னையில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படிப்பை முடிச்ச நான், நேரா ஊருக்கு வந்து, `தொழிலையும் விவசாயத்தையும் கவனிக்கப் போறேன்’னு சொன்னேன். எங்கப்பா யோசிச்சாலும், என்னோட உறுதியைப் பார்த்துட்டு, என்னை தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க.

எங்க கடையில் தீவனம் வாங்க வரும் விவசாயிகள், `எவ்வளவுதான் கவனிச்சாலும், மாடு சரியா பால் கறக்க மாட்டேங்குது. கடுமையா உழைச்சாலும், துவரை சரியா விளைச்சலைக் கொடுக்க மாட்டேங்குது’னு புலம்பினாங்க. அதனால், என்னோட ஊர்ல ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் விவசாயத்தை புதுமையா பண்ணி, அவங்களுக்கு நம்பிக்கை கொடுக்கணும்னு முடிவு பண்ணினேன்.

உயிர்வேலி முன்பு அஷ்வத்

முதல்ல, எட்டு ஏக்கர் நிலத்தை கையில் எடுத்தேன். வளமா இருந்த எங்க ஊர் வறட்சியா மாறுனதுக்கு காரணம், மழை குறைந்துபோனது, மழைநீரைத் தேக்கி வைக்க எந்த முயற்சியையும் செய்யாதது, 1000 அடி ஆழம்வரை போர் போட்டது மூணு விஷயங்கள்தான்னு புரிஞ்சுச்சு. அதனால், என் நிலத்துல முதல்ல நீர்மேலாண்மையை பெருக்கணும்னு நினைச்சேன். மொத்த நிலத்திலும் உள்ள மேடு, பள்ளங்களைக் கவனிச்சு, எங்க நிலம் மட்டுமல்லாது, சுத்தியுள்ள 50 ஏக்கர் நிலத்து மழை தண்ணீரும் வந்து சேரும்படி, ஒரு தடுப்பணையை 200 அடி நீளத்திலும், 30 அடி அகலத்திலும், 2018-ம் ஆண்டு வெட்டினேன். ரூ.30,000 வரை செலவாச்சு. 2 உழவு மழை பேஞ்சா, அந்த தடுப்பணை நிறையுற மாதிரி செஞ்சேன்.

அதேபோல், 6 உழவு மழை பேஞ்சா, அந்த தடுப்பணையில் வழியும் தண்ணீர் போய் சேகரமாக, நபார்டு வங்கியின் ஒரு லட்சம் நிதியுதவியுடன் 100 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்ட குளத்தை (பண்ணைக்குட்டை) வெட்டினேன். அந்த வருடம் பேஞ்ச மழையில, நல்லாவே தண்ணி தேங்குணுச்சு. அடுத்து, 2 ஏக்கர் நிலத்தில முதல்ல வெள்ளாமை பண்ண முடிவெடுத்தேன். குளத்தைச் சுற்றி, கரையில் 300 பனை விதைகளை விதைச்சேன். உயிர்வேலி இல்லாததுதான், இயற்கை சமநிலை கெடுறதுக்கு காரணம்னு புரிஞ்சுச்சு. அதனால், இரண்டு ஏக்கர் நிலத்தைச் சுற்றிலும், ஒரு அடி இடைவெளியில் அடுத்தடுத்து அகத்தி, முருங்கைனு விதைகளை விதைச்சேன்.

தடுப்பணை

500 அகத்தி, 500 முருங்கை விதைகளை விதைச்சேன். அதுக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சினேன். அகத்தியும் முருங்கையும் எந்த வறட்சியையும் தாங்கும் பயிர்கள். உயிர் வேலியாகவும் இருக்கும். வீட்டுக்கும் கால்நடைகளுக்கும் உணவாகவும் இருக்கும். அதோடு, தோட்டத்துக்கு நல்ல மறைப்பாகவும் அகத்தி மருத்துவத்துக்கும் பயன்படும். இப்போ 7 அடி வரை வளர்ந்திருக்கு. அகத்தி காற்றிலுள்ள நைட்ரஜனை இழுத்து, வேர் முடிச்சுகளில் வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. நாம் பயிரிடும் உளுந்து, பூசணினு பயிர்கள் இந்த நைட்ரஜனை உறிஞ்சு எடுத்துக்கும்.

அடுத்து, மரங்கள் வளர்க்கத் திட்டமிட்டேன். தேக்கு, ஈட்டி, வாகை, வேங்கை, சந்தனம், செம்மரம், கருமருது, குமிழ் தேக்கு என்று பலவகை மரக்கன்றுகளை உயிர் வேலியிலேயே எட்டு அடிக்கு ஒரு மரக்கன்று வீதத்தில் நட்டேன். இதன்மூலம், உயிர்வேலி இன்னும் வலுவாகும்னு நினைச்சுதான், இப்படி பண்ணினேன். 150 மரக்கன்றுகள்ல, 80 கன்றுகள் நன்றாக வளர்ந்திருக்கு. அதே இரண்டு ஏக்கர்ல உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி முழுக்க தினையை விதைச்சுருக்கேன். அடுத்து, 2 ஏக்கர் நிலத்தில் உள்ள குறிப்பிட்ட நிலத்தில், வீட்டுக்கு தேவையான பழக்காட்டை உருவாக்க நினைச்சேன். மா, சீதா, சாத்துக்குடி, ஆரஞ்சு, அத்தி, சப்போட்டா, வாழை, 5 தென்னங்கன்றுகள்னு நட்டேன்.

பழக்காடு முன்பு அஷ்வத்

அவற்றுக்கும் போர்வெல் தண்ணீரை சொட்டுநீர் பாசனம் மூலம் பாய்ச்சுகிறேன். இதுக்கிடையில, 7 அடி உயரத்துக்கு அகத்தியும் முருங்கையும் 5 அடி உயரத்துக்கு மரங்களும் உயிர்வேலியில் வளர்ந்துச்சு. உயிர்வேலியை இன்னும் அடர்த்தியாக்க, கீழ்ப்பகுதியில் பீர்க்கங்காய், பூசணி, பாகை போன்ற காய்கறி விதைகளை விதைச்சேன். மரக்கன்றுகளில் ஏறப்பார்த்த கொடிகளை, கீழே எடுத்துவிட்டேன். மூன்று காய்கறி கொடிகளும் தரையிலேயே படர்ந்தன. பீர்க்கங்காய் நல்லா காச்சுச்சு. அதை நண்பர்களுக்கு இலவசமாகவும் மீதியை விலைக்கும் கொடுத்தேன். பூசணி இப்போதான் காய்ப்புக்கு வந்திருக்கு. அதேபோல், 2 ஏக்கர் நிலத்தில் இன்னும் குறிப்பிட்ட இடத்தில் துவரையை பயிர் செஞ்சு, அதுக்கு ஊடுபயிறா நீர்ப்பூசணி விதைகளை விதைச்சேன்.

அதேபோல், `நெல் ஒரு புல் வகை’னு படிச்சேன். 2000-ம் வருஷத்துக்கு பின்னாடி, எங்க கிராமத்துல யாருமே நெல் விதைக்கலை. அதனால், 36 நெல் ரக விதையை, 100 அடி நீளம், 4 அடி அகலத்துல உயிர்வேலியையொட்டி, விதைச்சேன். எங்கப்பா, `நெல் சரியா வராது’னு சொன்னார். ஆனால், நல்லா வந்திருக்கு. அதைப் பார்த்ததும், `அடுத்து ஒரு ஏக்கர்ல நெல் போடுவோம்’னு சொல்லியிருக்கார்.

கொழுக்கட்டை புல் வெள்ளாமையோடு அஷ்வத்

அதைக்கேட்டதும், எனக்கு புதுநம்பிக்கை வந்திருக்கு. அதேபோல், குளக்கரையில் நாலு பக்கமும் கொழுக்கட்டைப் புல் விதையை விதைச்சேன். கால்நடைகளுக்கு தீவனமாகும். வேறு புல், களைகளை அது வளரவிடாது. அதனால், பயிர்களில் அதிகம் களை வராதுனு இப்படி செஞ்சிருக்கேன்.

இதைத்தவிர, இன்னும் ரெண்டு ஏக்கர் நிலத்துல, நாட்டுச்சோளத்தை போட்டிருக்கிறேன். ஒரு ஏக்கர் நிலத்தில் ஆமணக்கு பயிர் செஞ்சு, அதுல ஊடுபயிறா துவரை, பாசிப்பயிறு, உளுந்தை பயிர் செஞ்சிருக்கேன். இன்னும் ஒரு ஏக்கர்ல நிலக்கடலைப் போட்டிருக்கிறேன். மீதமுள்ள ரெண்டு ஏக்கர் நிலத்துல, கொழுக்கட்டைப் புல்லை போட்டிருக்கிறேன். தவிர, நாட்டுமாடு ஒன்று, 50 நாட்டுப் புறாக்கள், 5 நாட்டுக்கோழிகள்னு வளர்க்கிறேன். நீர் மேலாண்மையைச் சிறப்பாகச் செய்ததால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கு. போர்வெல், கிணறுல எல்லாம் தண்ணி சலசலக்குது. துவரை, காய்கறி, உளுந்து, கடலையில் வரும் பூச்சிகளை விரட்ட, இயற்கை பூச்சிவிரட்டிகளைத்தான் பயன்படுத்துகிறேன். உயிர்வேலி, நீர் மேலாண்மை, பழக்காடுனு முதல்கட்ட முயற்சியில இருக்கிறதால, வருமானம்னு பெருசா இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது.

ஆனா, மானாவாரியாக மாறியிருந்த இந்த நிலத்தின் தன்மையை, கொஞ்சம் வளமான மண்ணா மாற்றியிருக்கிறேன். ஆனால், இங்குள்ள விவசாயிகள் பலரும், `காலம்காலமா விவசாயம் செய்ற நாங்களே, விவசாயத்தில் ஜெயிக்க முடியாம தலையால் தண்ணிக்குடிக்கிறோம். சின்ன பய, உனக்கென்ன தெரியும்?’னு கிண்டல் பண்றாங்க. ஆனா, தொடர்முயற்சியில், புதிய உத்திகளைப் பயன்படுத்தி, இயற்கை விவசாயத்தில் சாதிப்பேன். பிற விவசாயிகளுக்கு பாடமாக மாறுவேன்” என்றார், நம்பிக்கை தெறிக்கும் வார்த்தைகளில்!

வாழ்த்துகள் பிரதர்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.