முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பல காலமாக பேசப்பட்டு வருகிறது. அரசமைப்பு உறுப்பு 161ன்படி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என கோரி பேரறிவாளன் அளித்த மனுவினை தமிழக அரசு பரிசீலனை செய்யலாம் என கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ம் தேதி அன்று அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு உத்தரவிட்டது.

இது தொடர்பாக மாநில அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது என இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி நீதிபதி நாகேஷ்வரராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 21-ம் தேதி உத்தரவிட்டது. `நாங்கள் 09.09.2018 அன்று அமைச்சரவை கூட்டி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் முன்விடுதலைக்கு பரிந்துரை செய்து ஆளுநரின் கையெழுத்திற்காக அனுப்பிவிட்டோம். கோப்பு ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது’ என 11.02.2020 அன்று மாநில அரசால் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிமன்றம் ஆளுநரிடம் தாமதத்திற்கு காரணம் கேட்டு இரண்டு வாரங்களில் சொல்லும்படி வாய்மொழி உத்தரவிட்டது.

ஆளுநர்

இதுகுறித்து ஆளுநர் அலுவலகத்திற்கு விளக்கம் கேட்டு மாநில உள்துறை செயலர் கடிதம் எழுதியதாகவும், `ஆளுநர், ராஜீவ் காந்தி கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பல்நோக்கு கண்காணிப்பு குழுவின் இறுதி அறிக்கைக்காக காத்திருப்பதாக கடிதம் பெறப்பட்டுள்ளது’ என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சட்ட பேரவையில் 20.03.2020 அன்று அறிவித்தார். இதே காரணத்தை பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்க கோரி அற்புதம்மாள் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வரும் போது மாநில அரசின் வழக்கறிஞர் ஏ.நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வில் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான், தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை உச்ச நீதிமன்றமே விடுதலை செய்ய வேண்டும் என கேட்டு பேரறிவாளன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி பல்நோக்கு விசாரணை முகமை குறித்த தனது வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்வின் முன்பு வழக்கு தாக்கல் செய்தார். பேரறிவாளனின் விடுதலை கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி நாகேஷ்வரராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு ‘பல்நோக்கு விசாரணை குழுவின் விசாரணைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என கடந்த 03.11.2020 அன்று அறிவித்தது.

பேரறிவாளன்

பல்நோக்கு விசாரணை குழுவின் விசாரணையில் பேரறிவாளனுக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனவும் பல்நோக்கு விசாரணை குழுவின் அறிக்கையை ஆளுநர் கோரவில்லை எனவும் அவ்வாறு கேட்டாலும் தரமுடியாது எனவும் சொல்லி பல்நோக்கு கண்காணிப்பு குழு உச்ச நீதிமன்ற அமர்வில் 20.11.2020 அன்று மனு தாக்கல் செய்தது. மேலும் அம்மனுவில் பேரறிவாளன் விடுதலை கோரும் மனு மீது ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும், தங்கள் அமைப்பிற்கு எந்த பங்குமில்லை என அறிவித்தது.

இந்நிலையில், பேரறிவாளனின் விடுதலை வழக்கு கடந்த நவம்பர் மாதம் 23-ம் தேதி அன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஷ்வரராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் கே.எம்.நடராஜன், `இதில் ஜனாதிபதி மற்றும் மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உண்டு. ஆளுநருக்கோ மாநில அரசுக்கோ எவ்வித அதிகாரமும் இல்லை’ என வாதிட்டார். அப்போது தமிழக அரசு சார்பில் அன்று ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன் இதற்கு எவ்விதமான மறுப்பும் சொல்லாதது தமிழகத்தில் பெரிய விவாத பொருளாக ஆனது.

உச்ச நீதிமன்றம்

இதுதொடர்பாக, அப்போது அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் திட்டக்குழு துணைத்தலைவருமான பொன்னையனிடம் தொடர்புகொண்டு பேசியபோது, `இந்த விடுதலை என்பது அரசின் கொள்கை முடிவு. அதனை பிரதிபலிக்கும் வகையில் வேறு வழக்கறிஞர் ஆஜராவார்” என உறுதிபட தெரிவித்திருந்தார். இந்த பின்னணியில் தான் பேரறிவாளனின் விடுதலை வழக்கு வருகிற 20.01.2021 அன்று இறுதி விசாரணைக்கு வரவுள்ளது. 30 ஆண்டுகால காத்திருப்பு அன்று முடிவிற்கு வருமா? மாநில அரசு தனது அரசமைப்பு இறையாண்மை அதிகாரத்தை தக்க வைக்க போராடுமா? பேரறிவாளன் அன்று விடுவிக்கப்படுவாரா? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் இந்நேரத்தில் பேரறிவாளனின் விடுதலை விவகாரத்தை நீதிமன்றத்தில் தமிழக அரசு எவ்வாறு கையாள போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: `மறுப்பே சொல்லாமல் மௌனம் காத்தார்!’ – ஏழு பேர் விடுதலையில் மாநில அரசு வழக்கறிஞர் கொடுத்த அதிர்ச்சி

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.