கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தலில் அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில், ஜோ பைடன் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருந்த நிலையில், அதிபர் டொனால்டு ட்ரம்ப், தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து, அதிபர் தேர்தலில் மோசடி நடைபெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டிவந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் பதற்றமான அரசியல் சூழலை உருவாக்க, ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, தொடர் கலவரங்களை நடத்திவந்தனர்.

ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள், பாதுகாப்பை மீறி அமெரிக்க கேபிடல் (US Capitol) கட்டடத்துக்குள் நுழைந்து, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் வாக்குகளை எண்ணிச் சான்றளிக்கும் பணியை மேற்கொண்டிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தினர். அதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்ததையடுத்து, வரும், ஜனவரி 20-ம் தேதி ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்கவிருக்கிறார்.

46-வது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில், துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு விழாவில் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் பங்கேற்க உள்ளார். ஆனால், ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கப் போவதில்லை என தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இந்நிலையில், ஜோ பைடன் பதவியேற்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாகவே டொனால்டு ட்ரம்ப் வெள்ளைமாளிகையை காலி செய்துவிட்டு வாஷிங்டன்னில் இருந்து விமானம் மூலம் புளோரிடா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லஹொ (Mar-a-Lago) என்ற தனது பிரம்மாண்டமான பண்ணைவீட்டில் குடும்பத்தினருடன் ட்ரம்ப் குடியேற உள்ளார். புளோரிடா கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட பண்ணைவீட்டில் தங்க உள்ள டொனால்டு ட்ரம்ப் தன்னுடன் வெள்ளைமாளிகையில் பணிபுரிந்த சிலரையும் பண்ணைவீட்டில் பணிக்கு அழைத்து செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.