சென்னையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தி.நகர் துணை கமிஷனர் ஹரிகிரன்பிரசாத்திடம் 11.01.2020-ல் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, `நான் விருகம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவருகிறேன். நான் படிக்கும் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக சதீஷ் ரவிகுமார் (24) என்பவர் பணியாற்றுகிறார். இவர் எனக்கு நன்கு அறிமுகமானவர்.

திருமணம்

என்னுடைய பள்ளி சான்றிதழ்களை வைத்து போலி திருமணம் சான்றிதழை தயாரித்த சதீஷ் ரவிகுமார், அதனை என்னுடைய பாட்டி மற்றும் அத்தைக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி அதை உடனே அழித்து வருகிறார். மேலும் என்னை அவருடன் சோந்து வாழ வேண்டும் என்றும் இல்லையென்றால் இந்தப் போலி சான்றிதழை சமூக வலைதளங்களில் பரப்பி என் வாழ்க்கையை சீரழித்துவிடுவேன் என்றும் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார்.

போலி திருமண சான்றிதழை வைத்து என்னை மிரட்டும் சதீஷ் ரவிகுமார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று வேறு எந்த ஒரு பெண்ணையும் ஏமாற்றாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கும் தகுந்த பாதுபாப்பு வழங்க வேண்டும். தொடர்ந்து என்னுடைய வாட்ஸ்அப்பிற்கு தேவையில்லாத மெசேஜ்களை எனக்கு அனுப்பி என்னை மிரட்டி வரும் சதீஷ்ரவிகுமார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

காதல்

இந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கும்படி அசோக்நகர் அனைத்து மகளிர் போலீஸாருக்கு தி.நகர் துணை கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி, இந்திய தண்டனைச் சட்டம் 465, 469, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து உதவி பேராசிரியர் ரவி சதீஷ்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து அசோக்நகர் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், “கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில் சென்னை அய்யப்பன்தாங்கல் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த சதீஷ் ரவிகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் உள்ளது. இருப்பினும் தான் வேலைப்பார்க்கும் கல்லூரியில் பயின்ற மாணவியை ஒருதலையாக காதலித்திருக்கிறார்.

Also Read: ‘என்னை காதலிக்காத நீ உயிரோடு இருக்கக்கூடாது!’- நர்ஸின் உயிரை பறித்த ஒருதலைக்காதல்

கைது

அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்ளதான் போலி திருமண சான்றிதழை தயாரித்தது விசாரணையில் தெரியவந்தது. மாணவி, தைரியமாக புகாரளித்ததால்தான் உதவி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க முடிந்தது” என்றனர்.

கல்லூரி மாணவிக்கு தொல்லைக் கொடுத்ததோடு போலி திருமண சான்றிதழ் தயாரித்த குற்றச்சாட்டில் உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.