நாடு முழுவதும் இம்மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்குகின்றன. கொரோனா தடுப்பூசி தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதன் முழு விவரம் இங்கே…

> கோவிட்-19 தடுப்பூசியை ஒரே நேரத்தில் அனைவருக்கும் வழங்க முடியுமா?

முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடவேண்டிய அதிக பாதிப்புக்கு ஆளாகும் குழுவினரை அரசு அடையாளம் கண்டுள்ளது.

* முதல் குழுவில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள்.

* இரண்டாவது குழுவில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய்க்கு தொடர் சிகிச்சையில் உள்ளவர்கள்.

* அதன்பின் தடுப்பூசி தேவைப்படும் அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்

> குறுகிய காலத்தில் அறிமுகம் செய்யப்படுவதால், இந்த தடுப்பூசி பாதுகாப்பானதாக இருக்குமா?

பாதுகாப்பு மற்றும் திறன் அடிப்படையில் ஒழுங்குமுறை அமைப்புகள் அனுமதி அளித்த பிறகே, நாட்டில் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும்.

> தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயமா?

கோவிட்-19 தடுப்பூசி தானாக முன்வந்து எடுத்துக் கொள்வது ஆகும். ஆனால், ஒருவரைப் பாதுகாக்கவும் மற்றும் நோய் பரவலை கட்டுப்படுத்தவும் கோவிட் 19 தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

image

> கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமா?

கோவிட் தொற்று ஏற்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது வலுவான எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் என அறிவுறுத்தப்படுகிறது.

> கோவிட் பாதிப்புக்கு உள்ளான நபர் (உறுதி செய்யப்பட்டவர் / சந்தேக நபர்) தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியுமா?

தடுப்பூசி போடும் இடங்களில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நோய், மற்றவருக்கு பரவும் அபாயம் இருக்கலாம் என்பதால், பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்த பின் தடுப்பூசி போட்டுக் கொள்வதை 14 நாட்கள் ஒத்திவைக்க வேண்டும்.

> பலவிதமான தடுப்பூசிகள் கிடைக்கும்போது, எப்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசிகள், பயன்பாட்டுக்கு தேர்வு செய்யப்படுகின்றன?

உரிமம் வழங்கும் முன்பாக, ஒரு தடுப்பூசியின் பரிசோதனை விவரங்களில் இருந்து அதன் பாதுகாப்பு மற்றும் திறன் தரவுகள், மருந்து ஒழுங்குமுறை அமைப்பால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆகையால், உரிமம் பெற்ற அனைத்து கோவிட்-19 தடுப்பூசிகள் ஒப்பிடக்கூடிய வகையில்‌ பாதுகாப்பாகவும், திறனுள்ளதாகவும் இருக்கும்.

ஆனாலும், வெவ்வேறான தடுப்பூசிகளை மாற்றிபோட முடியாது என்பதால், ஒரே வித தடுப்பூசியின் முழுச் சுற்றும் முடிவடைகிறதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

> கோவிட் தடுப்பு மருந்தை +2 முதல் +8 டிகிரி செல்சியஸ் வரையில் பதப்படுத்தவும் தேவையான வெப்ப நிலையில் அவற்றை எடுத்துச் செல்லவும் இந்தியாவில் திறன் உள்ளதா?

26 மில்லியன் பிறந்த குழந்தைகள் மற்றும் 29 மில்லியன் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தும் திறனுடன் உலக அளவில் மிகப் பெரும் தடுப்பு மருந்து விநியோகிக்கும் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய மற்றும் பலதரப்பட்ட குடிமக்களுக்கு சிறப்பாக தடுப்பு மருந்து வினியோகிக்கும் வகையில் இந்தத்திட்டத்தின் நடைமுறைகள் வலுவாக்கப்படுகின்றன.

> இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் தடுப்பூசி, மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் தடுப்பூசிகள் போல் தீவிரமாக இருக்குமா?

ஆமாம். தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறனை உறுதி செய்ய பல கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி, மற்ற நாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் போல் தீவிரமாக இருக்கும்.

> தடுப்பூசி போடுவதற்கு நான் தகுதியான நபரா என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது?

தடுப்பூசி போடும் மருத்துவமனை மற்றும் அதன் கால அட்டவணை தொடர்பான தகவல், தகுதியான பயனாளிகளுக்கு, அவர்கள் பதிவு செய்த போன் எண்ணில் தெரிவிக்கப்படும்.

> பதிவு செய்யும்போது தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு தேவைப்படும் ஆவணங்கள் யாவை?

கீழ்க்காணும் ஏதேனும் ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்றை பதிவின்போது பயன்படுத்தலாம்:

* ஆதார்/ ஓட்டுனர் உரிமம் / வாக்காளர் அடையாள அட்டை / நிரந்தர கணக்கு எண் அட்டை / கடவுச்சீட்டு / பணி அட்டை / ஓய்வூதிய ஆவணம்

* தொழிலாளர் அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மருத்துவ காப்பீடு அட்டை

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டஅட்டை (எம்ஜிஎன்ஆர்இஜிஏ)

* பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள்

* வங்கி / அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் கணக்கு புத்தகங்கள்

* மத்திய / மாநில அரசுகள்/ பொதுத்துறை நிறுவனங்களில் வழங்கப்படும் சேவை அடையாள அட்டை

image

> பதிவு செய்யாமல், ஒருவரால் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியுமா?

இல்லை. கோவிட்-19 தடுப்பூசிக்கு பதிவு கட்டாயம். பதிவு செய்த பின்பே, தடுப்பூசி போடப்படும் இடம் & நேரம் போன்ற தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

> ஊசி போடும் இடத்தில், ஒருவரால் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை தாக்கல் செய்ய முடியவில்லை என்றால், அவருக்கு தடுப்பூசி போடப்படுமா ?

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபரை சரியாக அடையாளம் காண்பதற்காக, பதிவுக்கும், ஊசி போடும் இடத்தில் சரிபார்ப்புக்கும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை அவசியம்.

> தடுப்பு மருந்துக்கான உரிய தேதி குறித்த தகவல் பயனாளிகளுக்கு எவ்வாறு தெரிவிக்கப்படும்?

இணையதள வாயிலாக பதிவு செய்து கொண்ட பிறகு தடுப்பூசி போடுவதற்கான உரிய தேதி, இடம் & நேரம் ஆகிய தகவல்கள் பயனாளிகளின் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும்.

> தடுப்பு மருந்து அளிக்கப்பட்ட பிறகு அதன் நிலை பற்றிய தகவல்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படுமா?

ஆம், தடுப்புமருந்து முறையாக வழங்கப்பட்ட பிறகு பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். தடுப்பு மருந்தின் அளவு முழுவதும் வழங்கப்பட்ட பிறகு கியூ ஆர் கோட்-ஐ அடிப்படையாகக் கொண்ட சான்றிதழும் கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்படும்.

> தடுப்பு மருந்து வழங்கப்படும் பகுதியில் ஏதேனும் முன்னெச்சரிக்கை & தடுப்பு நடவடிக்கைகளை ஒருவர் மேற்கொள்ள வேண்டுமா?

* தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட பிறகு குறைந்தது அரை மணி நேரம் அந்த மையத்தில் ஓய்வு எடுக்க வேண்டும்.

* ஏதேனும் உடல்நலக்குறைவு அல்லது தொந்தரவு ஏற்பட்டால் அருகில் உள்ள சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்கவும்.

* முகக் கவசங்கள் அணிவது, கைகளை தூய்மையாக வைத்துக் கொள்வது, சமூக இடைவெளியை (6 அடி அல்லது 2 கஜம்) கடைபிடிப்பது போன்ற கோவிட் நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

> கோவிட்-19 தடுப்பூசியால் ஏற்படும் சாத்தியமான பக்க விளைவுகள் என்ன?

* பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்புதான், கோவிட்-19 தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும்

* ஊசி போடும் இடத்தில், மற்ற தடுப்பூசிகள் போடப்படும்போது, தனிநபர்களுக்கு ஏற்படும் பொதுவான பக்க விளைவுகளான லேசான காய்ச்சல் மற்றும் வலி போன்றவை ஏற்படலாம்

* கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான பக்க விளைவுகள் ஏதும் ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கும்படி மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன

> புற்று நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற இதர நோய்களுக்கு சிகிச்சை பெறுவோர் கோவிட்-19 தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளலாமா?

ஆம், பல்வேறு உபாதைகளுக்கு சிகிச்சை பெறுவோருக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்கள் கோவிட்-19 தடுப்பு மருந்தை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

> மருத்துவ சேவை வழங்குவோர் / முன்கள பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் தடுப்பு மருந்து வழங்கப்படுமா?

தடுப்பு மருந்தின் இருப்பை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக முதன்மை பிரிவினருக்கும், அதைத்தொடர்ந்து பிறருக்கும் தடுப்பு மருந்து வழங்கப்படும்.

> எத்தனை முறை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்? அதற்கான கால இடைவெளி என்ன?

தடுப்பூசி கால அட்டவணைப்படி 28 நாட்கள் இடைவெளியுடன், 2 முறை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

> தடுப்பூசி போட்டுக்கொண்டபின், எதிர்ப்பு சக்தி எப்போது உருவாகும்?

2வது கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின், 2 வாரங்கள் கழித்து, பொதுவாக எதிர்ப்பு சக்திகள் உருவாகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.