மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், திருமயிலாடி, வேட்டங்குடி உள்ளிட்ட சில கிராமங்களில் பரம்பரைத் தொழிலாக  மண்பாண்ட பொருட்கள்  செய்யப்படுகின்றன.  மிகக் குறைந்த அளவு தொழிலாளர்களே இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த மண்பாண்ட தொழிலாளர்களின வாழ்வாதாரம் சமீபத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மண்பாண்ட தொழிலாளர்கள்

மண்பாண்டங்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வரும் இவர்கள் இந்தத்  தொழிலை மட்டுமே பெரிதும் நம்பி வாழ்ந்து வருகின்றார்கள். கொள்ளிடம் பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண்பாண்டங்கள்  செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த மண்பாண்டங்களை விற்க முடியாத நிலைக்கு ஆளாகி பெருத்த நஷ்டத்திற்கு தள்ளப்பட்டனர். கடந்த ஆவணி மாத விநாயகர் சதுர்த்தி விழா அனறு விநாயகர் சிலைகளை செய்து விற்பனை செய்ய காத்திருந்த  தொழிலாளர்கள் அதனையும் விற்பனை செய்ய முடியாமல்  ஏமாற்றமடைந்தனர்.

இதனால் பொங்கல் விழாவை முன்னிட்டு அதிக அளவில் மண்பண்டங்களை தயாரித்து  விற்பனை செய்து ஓரளவுக்கு லாபம் ஈட்டலாம் என்று கடந்த சில மாதங்களாக உழைத்து உற்பத்தி செய்துவந்த  மண்பாண்ட தொழிலாளர்கள் மீண்டும்  ஏமாற்றத்தையே சந்தித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்த வண்ணம் இருந்து வருவதால் எதிர்பார்த்த அளவு மண் பாண்டங்களை தயாரிக்க முடியவில்லை. தற்போது பொங்கல் விழாவுக்காக அடுப்பு, பானை, சட்டி, கலயம், அகல் விளக்குகள் உள்ளிட்ட பலவகையான மண் பாண்டங்கள் தயாரித்து விற்பனை செய்யலாம், இனிமழை இருக்காது என்று நினைத்தனர். ஆனால் தற்போதும் மழை நீடித்த வண்ணம் உள்ளதால், செய்து தயார் நிலையில் வைத்துள்ள மண்பாண்டங்களை சுட வைக்க முடியவில்லை. குறைந்தது மூன்று நாட்களாவது வெயில் இருந்தால்தான் மண்பாண்டங்களை சூளையில் வைத்து சுட்டு எடுக்க முடியும். ஆனால் பொங்கல் விழாவுக்கு ஒரு தினமே உள்ள நிலையில் மண்பாண்டங்களை சுட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மண்பாண்ட தொழிலாளர்கள்

இதுகுறித்து வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர் நல சங்க தலைவர்  மாரிமுத்து கூறுகையில், “சுமார் 10 மாத காலம் எங்க வாழ்வாதாரத்தை கொரோனா முற்றிலும் முடக்குச்சு. அதன்பிறகு விநாயகர் சதுர்த்தியிலும் அரசின் கட்டுப்பாடுகள் காரணமா விற்பனை இல்லை. கடைசி கட்டம் பொங்கலுக்கு பானைகள் நிறைய தயாரிச்சு வித்தால் ஓரளவு தலை நிமிராமுன்னு  நெனச்சோம். கஷ்டப்பட்டு தயாரித்தோம். தயாரித்த பானைகளை சூளையில் வைத்து சுட கூட முடியலையே. கடந்த மூன்று மாத கால உழைப்பு வீணாப் போச்சு. இதிலும் வருமானம் இல்லை. எனவே அரசு எங்களுடைய வாழ்க்கை சூழ்நிலையை யோசனை பண்ணி நிவாரண உதவியா மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்திற்கு தலா ரூ. 25,000 வீதம் வழங்கனும். இதுபற்றி தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பியிக்கிறேன்”  என்றார் வேதனையோடு.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.